மனோன்மணீயம் பெ. சுந்தரனார் (ஏப்ரல் 4, 1855 – ஏப்ரல் 26, 1897) என்பவர் மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்தவர்.
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855-ஆம் ஆண்டு சுந்தரனார் பிறந்தார். இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவருக்குத் தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமி. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1876-ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார்.
ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது. சுந்தரனாரின் ஞான ஆசிரியராக இருந்தவர் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவர்.இத்தொடர்பே மனோன்மணீயத்தில் சுந்தர முனிவர் என்னும் பாத்திரப் படைப்பிற்குக் காரணமாக இருந்தது.
கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை 1894 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வினை ஆங்கிலத்தில் எழுதிச் சென்னைக் கிறித்துவக் கல்லூரி இதழில் வெளியிட்டார்.
பேராசிரியர் சுந்தரனார் தாம் வாழ்ந்த மனைத் தோட்டத்திற்குத் தம் ஆசிரியர் ஹார்வி அவர்கள் பெயரையே இட்டமையும் தம் மனோன்மணீய நூலினை அவருக்கே உரிமையாக்கியதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் சுந்தரனார் தமது 42வது வயதில் 1897, 26 ஏப்ரல் அன்று மறைந்தார்.


