மாமல்லபுரம் அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் 44 பேர் தென்மாவட்டங்களில் உள்ள கலைச்சிற்பங்களை பார்வையிட வருகை தந்தனர். இவர்கள் கடந்த 20 ந்தேதி உத்திரகோச மங்கையில் தனது பயணத்தினை தொடர்ந்து அங்கிருந்து திருவனந்தபுரம் சென்றனர். அதன் பின் கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் பயணம் செய்து, கோயில் சிற்பக்கலை மற்றும் கட்டிட கலையை பார்வையிட்டனர். நெல்லை தென்காசியில் திருவாலீஸ்வரம், மன்னார்கோயில், பிரமதேசம், திருப்புடைமருதூர், நெல்லையப்பர் கோயில்களை பார்வையிட்டனர். அவர்களுக்கு சிற்பி பார்த்திபன் விளக்கம் அளித்தார். 26 ந்தேதி அவர் கிருஷ்ணாபுரம் கலைசிற்பங்களை பார்வையிட்டனர். சிற்ப கலையின் நுணுக்கங்கள் மற்றும் கற்சிற்பங்கள் பேசும் கதைகள் குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விவரித்தார்.

அதன் பின் அவர்கள் ஆதிச்சநல்லூர் வருகை தந்தனர் . அங்குள்ள பி சைட்டில் இந்தியாவிலேயே முதல் முதலில் அமைந்த சைட் மியூசியத்தினை பார்வையிட்டனர். அங்குள்ள முதுமக்கள் தாழி, இரும்பு ஆயுதங்கள், வெண்கல பொருள்கள், மண்பாண்டங்கள், விரைவில் அமையவுள்ள அருங்காட்சியகத்தின் மாதிரியையும் பார்வையிட்டனர். அதன் பின் சைட் மியூசியம் உருவான வரலாற்றை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு விளக்கி கூறினார்.
அதன் பின் மாணவர்கள் ஆதிச்சநல்லூர் சி சைட்டுக்கு சென்றனர். அங்குள்ள அகழாய்வு பொருள்களை பார்வையிட்டனர். அதன் பின் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் சிற்பங்கள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் சிற்பங்கள் மற்றும் கோயில் கட்டிட கலை குறித்து ஆய்வு செய்தனர். இந்த மாணவர் குழுவில் 8 மாணவிகள் உள்பட 42 மாணவர்கள் இருந்தனர். மரபு ஓவிய விரிவுரையாளர் பரிமளம், மரபு கட்டிகலை விரிவுரையாளர் பெரிய சாமி ஆகியோர் வழிகாட்டியாக இருந்தனர்.
தாமிரபரணி ஆற்றங்கரை நாகரீகம் மற்றும் இடைச்சங்க காலம் , நாயக்கர் காலத்து கலைச்சிற்பங்கள். பாண்டிய மன்னர்கள் காலத்து கோபுரங்கள் உள்பட தென் தமிழக சோழபாண்டிய மன்னர்களின் கலை பொக்கிஷங்களை பார்வையிட்ட மாணவர்கள் தொடர்ந்து நாளை கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை வெட்டுவான் கோயில் மற்றும் சமணர் சிற்பங்களை பார்வையிட உள்ளனர்.


