போராட்டமே வாழ்க்கை… பொதுவுடமையே வேட்கை… தமிழகத்தின் கருப்பு தங்கம் நல்லகண்ணு
தியாகங்கள் இல்லாமல் இந்த உலகில் எதையும் சாதிக்க முடியாது – தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராகவும், இந்தியாவின் மூத்த அரசியல்வாதியாகவும் உள்ள அய்யா (இரா.நல்லகண்ணு) தனது மனதை திறந்து உதிர்த்த வார்த்தை இது.
தனது நிழல் கூட ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர் தனது வாழ்க்கை முழுவதும் அதை கடைபிடித்து வந்தவர். எளிமையின் உருவமாக, ஏழ்மையின் வடிவமாக, இருந்தவர். 95 வயதிலும் அயராது மக்களுக்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர், தமிழகத்தின் உள்ள அரசியல் கட்சிகள் விமர்சனம் வைக்காத ஒரு மனிதர் அதைவிட அரசியல் கட்சியினர். இவரை பற்றி பேசும் போது அய்யா நல்லகண்ணு என்று தான் பேசுவார்கள் இத்தகைய பண்பாளரின் தியாக நிகழ்வுகளை இக்கட்டுரையில் கான்போம்…
சிறுவயதில் வீறு கொண்ட வேங்கை
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கிய 1925-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர் அய்யா நல்லகண்ணு. ராமசாமி, கருப்பாயி தம்பதிக்கு மொத்தம் 10 குழந்தைகள், நல்லகண்ணு 3-வது குழந்தையாக பிறந்தார். ஆரம்ப கவ்வியை ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள குமரகுருபரர் அரசு மேல்நிலை பள்ளியில் படித்தவர். படிக்கும் போது தனது 15 வயதில் போராட்ட களத்தில் குதித்தவர். `உலகப்போரில் ஆங்கிலேயருக்கு நாம் ஆதரவு கொடுக்க கூடாது’ என்று தேசத் தலைவர் மகாத்மா காந்தி ஒரு சமயம் கூறுவார்.
அவர் கூறிய 2 நாள் கழித்து தன் பள்ளியில் ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாக நடைபெற்ற நாடகத்தை எதிர்த்து, மாணவர்களுடன் இணைந்து, `நாடகத்தை நிறுத்து’ என்று முழக்கமிட்டபடி பள்ளி வளாகத்தில் போராடினார். அப்போது பள்ளி விழாவிற்கு பாதுகாப்பிற்கு வந்த ஆங்கிலேய போலீசார் மாணவர்கள் என்று கூட பார்க்கமால் தாக்குதல் நடத்தினர். தமிழரின் வீரம் செறிந்த மண்ணில் பிறந்தவர் என்பதாலும், இளம் ரத்தம் என்பதாலும் போலீசார் தாக்குதலை கண்டு அச்சம் கொள்ளாமல், மறுநாள் மீண்டும் பள்ளியில் போராட்டம் நடத்தினார். இப்படி சிறு வயதில் வீறு கொண்டு எழுந்த வேங்கை இன்று வரை போராட்ட வேட்கையில் தான் இருக்கிறது என்று கூறினால் அது மிகையாகது.
விவசாய சங்க தலைவர்
ஸ்ரீவைகுண்டத்தில் பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் நெல் மூட்டைகளை பற்றி ஜனசக்த்தி என்ற பத்திரிகையில் எழுதினார். இதை பார்த்த அரசு அதிகாரிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த அனைத்து மூட்டைகளையும் கைப்பற்றினர். இது தான் அவரின் முதல் பொது சேவை தொடர்புடைய நிகழ்ச்சி ஆகும். இதைத் தொடர்ந்து பொது சேவையில் தன்னை இனைத்து கொண்ட அவர் தனக்கு 18வயது கூட நிறைவடையாத நிலையில் வீட்டை விட்டு வெளியேறினார்.
அந்த வயதிலேயே பல ஊர்களுக்கு நடந்து சென்று விவசாயிகளை சந்தித்தார். காந்தியை விட நேருவால் அதிகம் ஈர்க்கப்பட்டவர் ஆனால், கொள்கையால் தன்னை பொதுவுடமை கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். பின்னர் வந்த காலகட்டத்தில் தொடர்ந்து 25 ஆண்டு காலம் நெல்லை மாவட்டத்தின் விவசாய சங்க தலைவராக பணியாற்றியுள்ளார்.
தலைமறைவு வாழ்கை
1948-ம் ஆண்டு வாக்கில் பொதுவுடமை கட்சி தடை செய்யப்பட்டது. இதை அடுத்து சுமார் 1 வருடம் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். தந்தை வழியில் சைவ உணவுக்கு மட்டுமே பழக்கப்பட்டு வளர்ந்த அய்யா நல்லகண்ணு, தலைமறைவாக இருந்த இந்த காலகட்டத்தில் மக்கள் கொடுக்கிற எந்த உணவாகினும் அதை வாங்கி சாப்பிட்டு கொண்டார். ஆனால், தலைமறைவாக இருந்தாலும் அவரின் பொது சேவையை தொடர்ந்து செய்து வந்தார்.
தலைமறைவு வாழ்க்கை நடத்துவதால் தனது கண்ணத்தில் உள்ள மருவை மறைக்க பெரிய மீசை ஒன்றை வைத்துள்ளார். இந்த நிலையில் 1949-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி தலைமறைவாக ஒரு ஆதரவாளர் வீட்டில் நல்லகண்ணு அய்யா தங்கி இருந்தார். இதை அறிந்த போலீசார் அவர் தங்கி இடத்திற்கு தேடி வந்தனர். அவரை கண்ட போலீசார் அவரின் மீசையை பார்த்து இந்த மீசை இருக்க போய்தான் நீ இந்த ஆட்டம் போடுகிறாய் என்று கூறிய இன்ஸ்பெக்டர் தான் புகைத்து கொண்டடிருந்த சிகரெட்டை எடுத்து ஒவ்வொரு முடியாக சுட்டு பொசுக்கி உள்ளார்.
ஒரு வீரனுக்கு வெற்றியோ, தோல்வியோ களத்தில் தனது மீசைய முறுக்கி கொண்டே இருக்க வேண்டும் அது தான் அவனுக்கு அடையாளம். வீரத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்படும் மீசையைத் தன் போராட்டத்தின் வழியே இழந்தவர். அன்று அவர் இழந்த மீசை தான் இன்று வரை அதை அவர் வளர்க்கவில்லை. ஆனால் தொடர்ந்து பொதுவுடைமை கொள்கையில் தொடர்ந்து வருகிறார்.
கல்வி உதவி தொகை
இதற்கிடையில் அய்யா நல்லகண்ணுவுக்குப் பெண் கொடுக்க முன்வந்தவர் ஜாதி ஒழிப்பு போராளி அன்னச்சாமி. நெல்லையில் கட்சியின் லட்சியங்களை உணர்ந்து வளர்ந்த ரஞ்சிதத்தை, வாழ்க்கைத் துணையாக 1958-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந்தேதி கரம் பிடித்தார். வாழ்க்கை துணைவி மட்டுமன்றி அய்யா நல்லகண்ணுவுக்கு உற்ற தோழராகவும் இருந்தார் அவரது மனைவி. இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி அவரது மனைவியின் மறைவு அவருக்கு பேரிழப்பாக அமைந்தது.
நெல்லையில் நடைபெற்ற சாதி கலவரத்தின் போது இவரது மாமனார் அன்னச்சாமிகொல்லப்பட்டார். இதனால் அவருக்கு உதவி தொகை வழங்கப்பட்டது. இதை பெற்று கொண்ட அய்யா நல்லகண்ணு கலவரத்தால் பாதிக்கப்பட்ட இரு சமூக குழந்தைகளின் கல்வி உதவிக்கு கொடுத்துவிட்டார். இதன் மூலம் அவருக்கு இருந்த பரந்த மனப்பான்மை அறியமுடிகிறது.
தோல்விதான் வெற்றிக்கு முதல் படி
பின்னர் வந்த நாளில் இவரின் கைகளில் வெடிகுண்டு இருந்ததாக கூறி போலீசார் கைது செய்தனர். அய்யா நல்லகண்ணுவிற்கு தூக்கு தண்டனை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. இதை அடுத்து அய்யா அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
1992-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1922-ம் ஆண்டு முதல் 13 ஆண்டுகள் வரை அதாவது 2005 வரை அந்த பொறுப்பில் தொடர்ந்து இருந்து வந்தார். 1967, 1977-ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட்டார். அதேபோல 1999-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், தோல்வியை பற்றி அவர் பொருட்படுத்தமல் தொடர்ந்து போட்டியிட்டார். தோல்விதான் வெற்றிக்கு முதல் படி என்று சான்றோர்கள் கூறுவார்கள்.
சுற்றுச்சூழல் போராளி
சுற்றுச்சூழல் போராளியாகவும் இருந்த அவர் சுற்றுச்சூழலில் மிகுந்த அதித அக்கறை கொண்டவர். தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க அவரே ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஆஜராகி தடை வாங்கினார். தூர்வாருதல் என்ற பெயரில் ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் அள்ளப்படுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். தற்போது வரை அணையைத் தூர்வாரும் போர்வையில் மணல் எடுக்கப்படுவதற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறார். மேலும் குற்றாலம் அருவிக்கு அருகில் ‘ரேஸ் கோர்ஸ்’ அமைக்கும் முயற்சி நடைபெற்றது, 1985-ல் ‘தாமரை’யில் கட்டுரை எழுதியே அதை தடுத்து நிறுத்திவர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உற்ற தோழர் அய்யா நல்லகண்ணு என்று எழுத்தாளர்கள் கூறுவார்கள். நான்குநேரி வானமாமலை கோவிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச்செல்லும் போராட்டம், வீடுகளுக்கு நிலை வைத்துக்கொள்ளும் உரிமையை நிலைநாட்டும் போராட்டம், செருப்பு அணிந்து பொது வீதிகளில் நடக்கும் போராட்டம் என்று அய்யா நடத்திய போராட்டங்களின் வரலாறு நீளமானது.
பாரதி பிரியர்
காசியில் பாரதியார் வாழ்ந்த வாழ்க்கைக் குறிப்புகளைத் திரட்டிக் கட்டுரை எழுதினார். முதல் மகளுக்கு ‘காசி பாரதி’ என்றும், ஒரு பேத்திக்கு ‘பாரதி கண்ணம்மா’ என்றும் பெயரிட்டார். பாரதிதாசன் மீதும் பற்று கொண்டவர். பயணங்களில் பாரதி, பாரதிதாசன் நூல்கள் எப்போதும் இருக்கும்! ஒரு நல்ல கட்டுரையை வாசித்துவிட்டார் என்றால் கட்டுரையாளரை அழைத்துப் பாராட்டிவிடுவார்.
இசை ரசிகர். நாதஸ்வர இசை மிகவும் பிடிக்கும். ‘நலந்தானா? நலம்தானா? உடலும் உள்ளமும் நலம்தானா?’ பாடல்தான் அவரது செல்பேசி அழைப்பு மணி! தற்போது வரை அது தான் அவரின் செல்பேசி அழைப்பு மணியாக உள்ளது.
எளிதாய்… அரிதாய்… தெளிவாய்..
மகள் ஆண்டாளின் காது குத்து நிகழ்வின்போதுகூட வெறுங்கையுடன் நின்று, அப்புறம் நண்பர் ஆ.சிவசுப்பிரமணியத்துடன் கடைக்கு சென்று ‘கவரிங்கில் சிறிய கம்மல் வாங்கிக்கொண்டு போன வாழ்க்கைக்கு சொந்தகாரர். ஆனால், பணத்தை எப்போதுமே துச்சமாகத்தான் பார்ப்பார். அவரது 80-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது கட்சி. தொண்டர்கள் விருப்பத்தின் பெயரில் கார் வாங்கி கொடுத்தனர். அதை அனைத்தையிம் கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார். மேலும், தமிழக அரசு ‘அம்பேத்கர் விருது’ கொடுத்து ரூ.1 லட்சம் வழங்கியது. பாதியை கட்சிக்கும் மீதியை விவசாய தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார்.
மேலும், தமிழ்நாட்டிற்கும் தமிழின் மொழியின் வளர்ச்சிக்கும் அரும் பாடுபட்டதாகக் கூறி கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் தமிழர் விருதை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். விருதுடன் தனக்கு வழங்கப்பட்ட 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் தன்னுடைய பணமான 5,000 ரூபாயையும் சேர்த்து அதே விருது வழங்கும் மேடையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கே அய்யா வழங்கியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அமைதியின் மறுவடிவமாக இருந்த அய்யா அவர்கள் எளிதாய் வாழ்வை ஏற்று, அரிதாய் வாழ்க்கையை அமைத்து,தெளிவாய் வாழ்க்கையை நடத்தி உள்ளார். புனிதரில் பெரியோரான அய்யா தியாகத்தின் தியாகமாக தனது இன்னுடலையும் மருத்துவ மாணவர்களின் ஆய்விற்கு அர்பணித்துவிட்டார். அய்யா அவர்கள் இன்று நம்மோடு இல்லை என்றாலும், தியாக சீலரின் நினைவுகள் இவ்வுலகம் நிலைத்து நிற்கும் வரை நினைவில் கூறப்படும்
.


