திருச்செந்தூர் அருகே, 6 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவரின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு தாசில்தார் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மதுரை லூர்துநகர் சர்வேயர் காலனியை சேர்ந்த துளசிராமன் மகன் சிந்துராஜ் (26). முடிதிருத்தும் தொழிலாளியான இவர், தந்தையுடன் அந்தப் பகுதியில் உள்ள மது போதை ஒழிப்பு தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சில காலம் வேலை பார்த்த நிலையில் துளசிராமன், தனியாக தொண்டு நிறுவனம் நடத்தப் போவதாக கூறினார்.
அதனால் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த அந்த பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் (42) என்பவருக்கும், துளசிராமனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ரவீந்திரன், துளசிராமனை தாக்கினார். இதை அறிந்த சிந்துராஜ், தொண்டு நிறுவனத்திற்கு சென்று ரவீந்திரனை தாக்கி அங்குள்ள பொருட்களையும் சேதப்படுத்தினார். இதன் காரணமாக முன்பகை இருந்து வந்தது.
இந்நிலையில் சிந்துராஜ்க்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால், குடித்துவிட்டு அடிக்கடி மனைவியை தாக்கி துன்புறுத்தினார். இதற்கிடையே ரவீந்திரன் தொண்டு நிறுவனத்தில் துளசிராமன் மீண்டும் வேலைக்கு சேர்ந்தார். அங்கு தனது மகனை போதை ஒழிப்பு மறுவாழ்வுக்காக சேர்த்தார். அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிந்துராஜ் திடீரென காணாமல் போனார். இதுபற்றி துளசிராமன், மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், கடந்த 2019-ம் ஆண்டு ரவீந்திரன், அவனது நண்பர்கள் பால்பாண்டி (42) வசந்த் (28) ஆகியோர் சேர்ந்து சிந்துராஜை ரம்பத்தால் துண்டு துண்டாக அறுத்து காரில் ஏற்றி திருச்செந்தூர் கொண்டு சென்றனர். அங்கு ஒரு விடுதியில் இரவு தங்கி அந்தப் பகுதியை சேர்ந்த பழைய நண்பரான கண்ணன் என்ற பிச்சை கண்ணனை உதவிக்கு அழைத்து பிணத்தை புதைப்பதற்காக இடம் தேர்வு செய்தனர். பின்னர் மெஞ்ஞானபுரம் மானாடு மெயின் ரோட்டின் அருகே உள்ள இடுகாட்டில் புதைத்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் ஏற்கனவே பல வழக்குகளில் கைதாகி நீதிமன்ற காவலில் உள்ளனர்.
இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ரவீந்திரன், கண்ணன் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து நேற்று சம்பவ இடமான திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் மானாடு பகுதிக்கு அழைத்து வந்தனர். அங்கு சிந்துராஜை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர். தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர் உதயகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினரும், தடய அறிவியல் நிபுணர் கலா லட்சுமி தலைமையிலான குழுவினரும் வரவழைக்கப்பட்டனர்.
திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் எலும்புக்கூடுகளை போலீசார் கைப்பற்றி டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


