தூத்துக்குடியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் வேலை நாடுனர்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் வேலை நாடுனர்களுக்கு பணிநியமன ஆணைகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கி தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. முதலாவது வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி வ.உ.சி. கல்லுரியில் நடைபெற்றது. கோவில்பட்டியில் 12.08.2023 அன்று நடைபெற்ற இரண்டாவது முகாமில் 95 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 2089 பேர் பேர் கலந்துகொண்டு 316 பேர் பணி நியமனம் பெற்றனர். மேலும் 424 பேர் இரண்டாவது கட்ட கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சில தனியார் நிறுவனங்கள் தங்களது வேலைக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்து ஆட்களை தேர்வு செய்கின்றன. திறன் பயிற்சி நிறுவனம் மூலமும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அதிக அளவில் இளைஞர்கள், இளம்பெண்கள் வந்துள்ளது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் உள்ளது. முதல் நேர்முகத்தேர்விலேயே வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஒவ்வொரு நேர்முகத்தேர்வும் உங்களது திறமைகளை வளர்க்கும். மேலும் நீங்கள் உள்@ரில் மட்டுமின்றி வெளியூர்களில் வேலை கிடைத்தாலும் வேலைக்கு செல்ல முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு சிறு, குறு தொழில் தொடங்குவதற்கு அதிக அளவில் மானியத்துடன் கடன்கள் வழங்கி வருகிறது. நீங்கள் வேலைக்கு சென்றால் மாதம்தோறும் சம்பளம் வாங்கலாம். ஆனால் சொந்தமாக தொழில் தொடங்கினால் நீங்களே அதிக பேருக்கு சம்பளம் வழங்கலாம்.
உங்களுக்கு உழைப்பு, ஆர்வம் மற்றும் தன்னம்பிக்கை முக்கியம். உங்களது திறமைகளை தொடர்ந்து வளர்த்துக்கொண்டால் நிச்சயமாக வாழ்க்கை மேம்படும். முதலில் கிடைக்கும் வேலையை செய்துகொண்டு பின்னர் அதிக சம்பளம் பெறும் வேலைக்கு முயற்சி செய்யலாம். நீங்கள் இந்த வயதில் வேலைக்கு சென்று உங்களது குடும்பத்தினருக்கு உதவியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்ததாவது: வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்ட உங்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் நீங்கள் தொழில் தொடங்கவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்வதற்கு வந்துள்ளன. அதேபோல் மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ போன்றவை மூலம் தொழில் தொடங்குவதற்கு தேவையான தகவல்களும் வழங்கப்படுகின்றன. மானியத்துடன் வங்கி கடன் பெறுவது எப்படி, என்ன தொழில்கள் தொடங்கலாம் போன்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. மேலும் உங்களது திறன்களை வளர்ப்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரிகளிலேயே மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. ஒரே மாதிரியான கல்வி தகுதிகள் உள்ளபோது போட்டிகள் அதிகமாக இருக்கும். எனவே கூடுதலாக தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். படித்து முடித்தவுடன் இங்கு வந்துள்ளவர்களுக்கு வேலை கிடைத்தாலும் மேலும் உயர்ந்த வேலைக்கு செல்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். வாய்ப்புகளுக்கு ஏற்றாற்போல் தங்களது கல்வி தகுதி மற்றும் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அரசு அளித்துள்ள திட்டங்கள், மானியங்கள் மற்றும் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்து வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
முகாமில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பேச்சியம்மாள், திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) (பொ) / திட்ட இயக்குநர் (த.ஊ.வா.இ) வீரபுத்திரன், திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) சண்முகசுந்தர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகம்மது, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஸ்வர்ணலதா, உதவி இயக்குநர் (திறன் மேம்பாட்டு பயிற்சி) ஏஞ்சல் விஜய நிர்மலா மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


