திருச்செந்தூர் ஜீவா நகர் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து கடல் சீற்றத்தில் இருந்து கிராமத்தை காப்பாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக நாட்டுப் படகு ஊர் நல கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், “திருச்செந்தூர், ஜீவாநகர் கடற்பகுதி இயற்கையின் சீற்றத்தால் தீவு போல காட்சி தருகிறது. பலமுறை கடலின் சீற்றம் ஊருக்குள் புகுந்து வெள்ளம்போல பல கொடுமைகளை நாங்கள் அனுபவித்து வருகிறோம்.
எங்கள் பைபர் வள்ளங்களுக்கும், அதன் உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாது, எங்கள் வாழ்வாதாரம் சீரழிந்து இன்றுவரை மறு தேடல் இல்லா நிலமைக்கு ஆளாகி வருகிறோம். கல்லாமொழி பவர் பிளாண்ட் பாலம், ஆலந்தலை தூண்டில் வளைவு, அமலிநகர் தூண்டில் பாலம் என்று கடலின் பல நெருக்கடியால், ஜீவாநகர் கடற்பகுதி கடலின் சீற்றத்தால், கடல் அழுத்தத்தால், 200 மீட்டர் தூரத்திற்கு கடல், கரை நோக்கி நகர்ந்துள்ளது.
வாழ்வதா? சாவதா? என்ற இழிநிலையில் எங்கள் வாழ்வாதாரம் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 09.10.2023 அன்று தூத்துக்குடி உதவி செயற்பொறியாளர் கடிதத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சகம் அறிக்கையில், 5.25 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அதன் மதிப்பீடும், நிர்வாக அனுமதியும் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்கள்.
தமிழக அரசுக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் எங்களது உள்ளங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களது அறிக்கை எங்களுக்கு ஆறுதலைத் தந்தாலும், அதுவரை ஜீவாநகர் என்ற கிராமம் இருக்குமா? அல்லது கடலின் நெருக்கடித் தன்மையால் பேரழிவுக்கு உள்ளாகுமா? என்ற பேரதிர்ச்சியை தருகிறது. கேள்வியே மீனவ மக்களாகிய எங்களுக்கு இந்த கோரிக்கை எங்களுக்கு மட்டுமல்ல. அறுபடை வீடுகளில் இரண்டாவதாக விளங்கும் திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயிலுக்கும் சேர்த்துதான் சொல்கிறோம்.
வெகு விரைவில் தூண்டில் வளைவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால். பேரழிவு காத்திருக்கிறது என்பதுதான் உண்மை. கடலின் கட்டுப்பாடற்ற பகுதி ஜீவாநகர். கச்சான் காற்றில் முருகப்பெருமான் கோயில் எங்களுக்கு பாதுகாப்பாக உள்ளது. ஆனால் வாடை காலத்தில் வரும் காற்றழுத்த மாறுதல் எங்களை முழுவதுமாக பாதிக்கச் செய்கிறது. எங்களது கோரிக்கையின் நிலையினை அரசாங்கமும், அதிகாரிகளும் ஆய்வு செய்ய மறுக்கிறார்கள்.
120 மீனவ குடும்பங்களை கொண்ட எங்களது நிலையை அரசாங்கம் ஏறெடுத்து பார்க்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. நாடும் நலமாக மக்களும் வாழ வேண்டும் என்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும். இயற்கையின் சீற்றத்தில் மக்கள் பாதிக்கப்பட்டால் காப்பாற்றும் கடமை அரசாங்கத்திற்கு உரியது. எனவே, சமூகம் இந்த பழங்குடி மீனவர்கள் மீது கருணை கொண்டு, தூண்டில் வளைவு அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க தங்களை தாழ்மையுடன் வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


