தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பண்ணை பள்ளி திட்டத்தினை ரிலையன்ஸ் அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது. நெல், உளுந்து மற்றும் மக்காசோளம் பயிரிடப்படும் வட்டாரங்களில் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் நிலத்தை பண்படுத்துதல், உரமேலாண்மை, நீர்மேலாண்மை மற்றும் நோய் மேலாண்மை குறித்து பல்வேறு தொழில்நுட்பங்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. விவசாயிகள் இடுபொருட்களுக்கு அதிகமாக செலவு செய்வதால் அவர்களின் உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைப்பதில்லை. மண் பரிசோதனை செய்து இடுபொருட்களை பயிருக்கு இட்டால் அதன் செலவை கணிசமான அளவு குறைக்க முடியும் என்று வேளாண் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். விவசாயிகளிடத்தில் மண் பரிசோதனையின் முக்கியத்துவத்தை எடுத்து கூறும் விதமாக ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் உள்ள மழவராயநத்தம் கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வாகைக்குளம் ஸ்கேட் வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் முருகன் மண் பரிசோதனை செய்வதின் அவசியம் மற்றும் மண் மாதிரி எடுக்கும் முறைகள் குறித்து விளக்கினார். இதில் சுமார் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் மற்றும் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.


