செய்துங்கநல்லூர் சந்தையடியூர் வாய்க்கால் கரை அருகே வசித்து வருபவர் தங்கையா மகன் மகராஜன்(50). இவர் வீட்டில் பூனைகள் வளர்த்து வந்தார். கடந்த இரண்டு நாள்களாக பூனைகளை ஒவ்வொன்றாக காணவில்லை. இதற்கிடையில் இன்று மாலை 5 மணி அளவில் சமையல் அறையில் வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. இவர் அங்கு சென்று பார்த்த போது மலை பாம்பு ஒன்று கேஸ் சிலிண்டரை சுற்றி இருந்துள்ளது. உடனே அவர் செய்துங்கநல்லூர் போலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் காசிராஜன் உடனே வல்லநாடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வன அதிகாரி அப்பண்ணசாமி தலைமையில் வன தடுப்பு காவலர் சங்கரலிங்கம், சரவணன் கொண்ட குழுவினர் மலை பாம்பை பிடித்தனர். இந்த பாம்பு சுமார் 5 அடி நீளம் இருக்கும். இந்த பாம்பை வல்லநாடு மலையில் விட்டனர்.


