தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். .
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், சரண் விடுப்பு, காலமுறை ஊதியம், பல்வேறு துறைகளில் 30 சதவீதத்துக்கு மேல் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று தற்காலிக விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் குவிந்தனர். இதையடுத்து ரூரல் டிஎஸ்பி சுதிர், சிப்காட் இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் அவர்கள் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். இதனால் போலீசார் – அரசு ஊழியர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
மேலும் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் மூடப்பட்டது. இதையடுத்து அரசு ஊழியர்கள் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அரசு ஊழியர் சங்கத்தின் போராட்டம் காரணமாக அரசு ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.



