தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஷிப்பிங் கம்பெனி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் துரைமுருகன் (28), இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து ஊருக்கு செல்வதற்காக மோட்டார் பைக்கில் தூத்துக்குடி – பாளை., ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அந்தோணியார் புரம் அருகே செல்லும்போது, பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த துரைமுருகனை, 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4 மணி அளவில் அவர் இறந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


