தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 52-வது விளையாட்டு தினவிழா பள்ளி மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக துாத்துக்குடி மாவட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் சி.மதன், கௌரவ விருந்தினராக துாத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சி.கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஸ்பிக் நகரியத்தின் முழுநேர இயக்குநரும், ஸ்பிக் பள்ளித் தலைவருமான பாலு பள்ளிச்செயலர் டிஎஸ் பிரேம்சுந்தர், பள்ளித் தலைமையாசிரியர் எல்.பாபு ராதாகிருஷ்ணன், பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
விழாவில் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று வெண்புறாவினைப் பறக்கவிட்டு விழாவினைச் சிறப்பு விருந்தினர் இனிதே தொடங்கி வைத்தார். மாணவி ஷெப்ரின் மேரி அனைவரையும் வரவேற்று பேசினார். மாணவர்கள் விளையாட்டில் பெற்ற வெற்றிகளை விளக்கும் விதமாக ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. பின் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் இணைந்து கூட்டுப் உடற்பயிற்சியும், பாலர் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.
மிதிவண்டியை ஓட்டிக் கொண்டே மாணவர்கள் நடத்திய பிரமீடு அனைவரின் பாராட்டையும் பெற்றன. மாணவிகள் விசிறி வைத்து ஆடிய நடனம் காண்போரைக் கவரும் வண்ணம் இருந்தது. பந்தய வீரர்களின் ஓட்டப்பந்தயம் பார்வையாளர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது.தமிழர் கலையாம் சிலம்பாட்டத்தின் மூலம் மாணவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.
மாணவ, மாணவிகள் இணைந்து குஜராத் பஞ்சாப் மற்றும் காட்டுவாசிகள் போன்று வேடமணிந்து நடனம் ஆடியது மொத்த பார்வையாளர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. சிறப்பு விருந்தினரின் உரை அனைவருக்கும் உற்சாகமூட்டும் விதத்திலும் தன்னம்பிக்கையோடு உழைக்க வேண்டும் என்னும் எண்ணத்தையும் தூண்டுவதாக அமைந்தது. மேலும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.நிறைவாக மாணவி கனிஷ்கா நன்றியுரை வழங்கினார்.


