ஸ்ரீவைகுண்டம் சந்தையடி தெருவில் சேதமடைந்த நிலையில் துணை ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தினை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஸ்ரீவைகுண்டம் சந்தையடி தெருவில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்குள்ள கட்டிடங்கள் மிகவும் மோசமாக இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இதனால் துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் பொதுமக்களும் தாய்மார்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் குழந்தைகளும் ஒருவித அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.
சேதமடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என மருதம் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளரும் வழக்குறைஞருமான ரமேஷ் உள்பட பொதுமக்கள் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் சேதம் அடைந்த நிலையில் இருப்பதுடன் முறையான பராமரிப்பு ஏதும் இல்லாததால் எலிகளும் பூச்சிகளும் கூட்டம் கூட்டமாக இருந்ததுடன் குப்பைகளும் அதிக அளவில் இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், அதிகாரிகளிடம் இவ்வளவு மோசமான பில்டிங்கை உடனே அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்ட எவ்வளவு தொகை ஆகும் என்பதை தெரியப்படுத்துங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ள அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களில் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் இருந்தால் அதை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம், பேரூராட்சி நிர்வாக அதிகாரி காதர், தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகப் பெருமாள், தி.மு.க மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளரும் அரசு வழக்கறிஞருமான ஷாஜகான், ஸ்ரீவைகுண்டம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கொம்பையா, ஸ்ரீவைகுண்டம் திமுக நகர செயலாளரும் வட்டார விவசாய ஆலோசனைக் குழு அட்மா சேர்மன் பெருமாள், மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், சண்முகசுந்தரம், ஏசையா, பஞ்சாயத்து தலைவர்கள் சுப்புராஜ், குமார்பாண்டியன், நகர பொறுப்பாளர்கள் பொன்பாண்டி, ஒன்றிய பொருளாளர் செல்லையா பாண்டியன், நகர அவைத்தலைவர் காசினி வேந்தன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் இசக்கியப்பன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் நல்லகண்ணு, மாவட்ட பொதுச்செயலாளர் வெள்ளூர் அலங்கார பாண்டியன், சேவா தல காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிச்சைகண்ணு, நகர பொறுப்பாளர் கருப்பசாமி, வட்டார செயலாளர் நிலமுடையான், வார்டு செயலாளர் உஸ்மான், நகர பொருளாளர் சொரிமுத்து, இளைஞர் காங்கிரஸ் நகரத் தலைவர் மகாராஜன், 8வது வார்டு தலைவர் மாசானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


