தூத்துக்குடியில் பக்கிள் ஓடையை தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி அண்ணா நகர் பகுதியில் பக்கிள் ஓடையில் அதிகமாக செடிகள் வளர்ந்துள்ளன. பருவமழை காலம் நெருங்கி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செடிகள் மற்றும் திடக்கழிகள் அகற்றும் பணியினை உடனே துவங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், பக்கிள் ஓடையை தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து, ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், “பருவ மழைக்கு முன்பதாக எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக பக்கிள் ஓடையில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம் என்றார். ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மேயர் தலைமையில் ஆய்வு கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி பருவ மழைக்கு முன்பதாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மேயர் பேசுகையில், “தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதிலும் குறிப்பாக ராம் நகர், ரஹமத் நகர், கங்கா பரமேஸ்வரி காலனி, குறிஞ்சி நகர், கலைஞர் நகர், திரேஸ்புரம் அதனை சுற்றியுள்ள பகுதிகள் என பல்வேறு பகுதிகளிலும் புதிய வழித்தடங்களிலும் வடிகால் பணிகள் நிறைவுற்றுள்ளன என்றார்.
மேலும் திட்டமிட்டபடி நடைபெற்று வரும் சாலை மற்றும் வடிகால் பணிகள், வடிகால் மற்றும் பக்கிள் ஓடை தூர்வாரும் பணிகள் என அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறும் துறை சார்ந்த அலுவலர்களை மேயர் அறிவுறுத்தினார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.