கோவில்பட்டி அருகே ஆட்டோ டிரைவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்தித் தோப்பு பத்திரகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் மணிகண்டன் (34). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் கோவில்பட்டி அருகே உள்ள அத்தைகொண்டான் கிராமத்தில் உள்ள சுடுகாடு பாலம் அருகே ஆட்டோவை ஓட்டி சென்று கொண்டிருந்தார்.
அங்கு வந்த திடீரென ரோட்டின் குறுக்கே நின்றவாறு இனாம் மணியாச்சி தெற்கு தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் கார்த்திக் என்ற முத்துராஜ் (32) என்பவர் ஆட்டோவை வழிமறித்து நிறுத்தியுள்ளார். அப்போது அவர் மதுகுடிக்க வருமாறு மணிகண்டனை அழைத்துள்ளார். எனக்கு சவாரி இருக்கிறது. என்னால் மது குடிக்க வரமுடியாது என மணிகண்டன் கூறியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த முத்து ராஜ் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதை பார்த்த முத்துராஜ், கொலைமிரட்டல் விடுத்தவாறு தப்பி ஓடிவிட்டாராம். இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த முத்துராஜை நேற்று கைதுசெய்தனர்.


