உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கடந்த 19ஆம் தேதி ஸ்ரீவைகுண்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அபராதம் விதித்தார்.
அப்போது எங்கள் நிர்வாகம் சொல்வதை தான் நாங்கள் கேட்க முடியும் என அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் பதில் அளித்தனர்.
இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர், பேருந்துகள் செல்லும் வழித்தடத்திற்கான அனுமதி கொடுப்பதே நாங்கள் தான். நாங்கள் எந்த பேருந்தையும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லவேண்டாம் என்று கூறவில்லை. அபராதம் விதிக்கப்பட்ட அனைத்து பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களிடம் நீங்கள் அனைவரும் பொதுமக்களுக்காக தானே பேருந்து ஓட்டுகிறீர்கள். அரசு போக்குவரத்து கழகமும் அதற்கு தானே இயங்குகிறது. ஆனால் நீங்கள் பொதுமக்களை ஊருக்குள் சென்று ஏற்றாமல் இடையில் இறக்கி விட்டால் என்ன அர்த்தம். பேருந்தை நீங்கள் மக்களுக்காக பேருந்துகளை ஓட்டுவதில்லை. திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே பைபாஸ் சாலையே இல்லை. பின் எப்படி பைபாஸ் ரைடர் என பெயரிடப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அலட்சியப்படுத்தும் விதமாக பைபாஸ் ரைடர் தவிர மற்ற அனைத்து பேருந்துகளும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என பொது மேலாளர் சுற்றறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதன் மூலம் யாருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்ற ஈகோவில் போக்குவரத்து கழகத்தினர் செயல்படுவது போல் தெரிகிறது எனவும் மாவட்ட ஆட்சியரின் நியாயமான கேள்விகளுக்கு சுற்றறிக்கை மூலம் பொது மேலாளர் பொதுமக்களின் நலன் மீது அக்கறை இல்லாமல் பதிலளித்துள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


