298. தாமிரபரணியை சுத்தப்படுத்த ஆட்சியரிடம் கோரிக்கை
தாமிரபரணி சாக்கடை கலப்பது குறித்து நாம் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து நல்லதொரு தீர்ப்பை பெற்று வைத்துள்ளோம். அந்த வழக்கு விசாரணை மிக வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 2024 மார்ச்சு மாதம் இதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பை கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கையும்தொடர்ந்து உள்ளோம். எனவே வழக்கு மிக வேமாக நடந்து கொண்டிருக்கிறது.
அதே வேளையில் அரசுடன் இணைந்து செயல்படவும் தயங்குவது இல்லை. நமக்கு தேவை தாமிரபரணி பரமாரிக்கப்பட வேண்டும், சாக்கடை இல்லாத சுத்தமான நதியை ஏற்படுத்த வேண்டும். மற்றபடி ஆட்சியாளர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. நாங்கள் தாமிரபரணி ஆர்வலர்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணியை சுத்தப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த பயனாக எஸ்ரோ நிறுவனம் சார்பில் இலவச ஜேசிபி கொடுத்து நதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறியிருந்தார்கள். அந்த பணியை மருதூர் அணைக்கட்டில் துவக்கி வைக்க கனி மொழி எம்.பி அவர்கள் ஜீலை 6 ந்தேதி 2024 அன்று வருகை தந்திருந்தார்கள். மேடையில் என் பெயரை உச்சரித்து எனது நூலை படித்ததாக எஸ்ரோ அமைப்பாளர் செந்தூர் பாரி அவர்கள் தனது வரவேற்புரையில் கூறினார்கள். மாவட்ட ஆட்சி தலைவர் லெட்சுமிபதியும் என்னுடைய “தலைத்தாமிரபரணி”, “தூத்துக்குடி மாவட்ட வரலாறு” நூலை படித்திருப்பதாக கூறினார். தொடர்ந்து கனிமொழி எம்.பியிடம் நான் கீழ் கண்ட கோரிக்கையை வைத்தேன். அவர் நிறைவேற்றி தருவதாக எம்.பி அவர்கள் வாக்களித்தார்கள். அதில் திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் செய்துங்கநல்லூரில் நின்று செல்லவேண்டும், 2024 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தக கண்காட்சியை நடத்த வேண்டும், ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம் பாரமரிக்காமல் கிடக்கிறது. அதை சீரமைக்க வேண்டும், மீண்டும் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வைத்தேன்.
அதில் முக்கிய கோரிக்கை தாமிரபரணியை பற்றியது தான். தாமிரபரணியை சுத்தப்படுத்த தாங்கள் எடுத்த நடவடிக்கைக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதே வேளையில் தமிழகத்திலேயே பாயும் தாமிரபரணி நிரந்தரமாக சுத்தப்படுத்த வேண்டும்.
குறிப்பாக வடக்கே ஒரு நதி, தெற்கே ஒரு நதி சுத்தப்படுத்தப்படும் என சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு பாரத பிரதமர் அறிவித்தார். ஆனால் வடக்கே கங்கையை சுத்தப்படுத்தி, செம்மை படுத்தி விட்டார்கள். ஆனால் தென்னகத்தில் ஓடும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியை இதுவரை அவர்கள் சுத்தப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கரைகளை மேம்படுத்தி, முள்செடி, அமலை செடிகளை அகற்றி, சாக்கடை கலக்காத நதியாக தாமிரபரணியை மாற்றி விட்டால் , ஒரு உயிருள்ள நதியை காப்பாற்றிய பெருமை நமக்கு கிடைக்கும்.
எனவே தயவு கூர்ந்து தாமிரபரணியை சுத்தப்படுத்த பாராளுமன்றத்தில் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
என்று அந்த மனுவில் கூறியிருந்தேன். மனுவை வாங்கி தனது உதவியாளரிடம் கொடுத்து, இதை சென்னைக்கு கொண்டு செல்லும் மனுவோடு வையுங்கள் என்று கூறி விட்டு, என்னிடம் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என வாக்களித்தார். அதோடு மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 11 நாள் கழித்து மாவட்ட ஆட்சித்தலைவர்லெட்சுமிபதி அய்யாவை சந்தித்தோம்.
இதற்காக 17.07.2024 அன்று தூத்துக்-குடி ஆட்சியர் அலுவலகம் சென்று அப்போதைய ஆட்சியர் லெட்சுமிபதி அய்யா அவர்களிடம் கோரிக்கை வைத்தேன்.
தாங்கள் தாமிரபரணியை சுத்தப்படுத்த தாங்கள் எடுத்த நடவடிக்கைக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதற்காக கடந்த மாதம் கலியாவூரில் இந்த பணியை துவக்கி வைத்தீர்கள். ஆனால் அவ்விடம் மிகப்பெரிய இடம். மேலும் தாமிரபரணி பணி செய்வது பெரிய அளவில் மக்கள் மத்தியில் தெரிந்து பிரபலமாகாது. எனவே தயவு கூர்ந்து ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து ஆழ்வார்திருநகரி பாலம் வரை இருகரையில் உள்ள முள்செடிகளையும், தாமிரபரணி ஆற்றில் உள்ள முள்செடிகளை அகற்றி, மரங்கள் நட வேண்டும். பாராம்பரிய முக்க வைணவத்தலங்களில் முதல் திருப்பதியில் இருந்து கடைசி திருப்பதி வரை சுத்தம் செய்ய வேண்டுகிறோம். என்று கூறியிருந்தேன்.
என்னுடன் சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களும் வந்திருந்தார். எங்களுக்காக மாவட்ட ஆட்சியர் விடுமுறை நாளில் கூட சுமார் 1 மணிநேரம் ஒதுக்கியிருந்தார். நாங்கள் நிறைய பேசினோம். சோ. தர்மன் அய்யா. தான் பிறந்த உருளைக்குடி கிராமத்துக்கு நூலக கட்டிடம் கேட்டார் கட்டித்தர ஆவண செய்வதாக வாக்களித்தார்.
தாமிரபரணி மற்றும் அணைக்கட்டுக்கள், தொல்லியல் தளங்கள், தூத்துக்குடி மாவட்ட நினைவுசின்னங்கள், தியாகிகள் புகைப்படம் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் கூடுதலாக வைப்பது, புத்தக கண்காட்சி நடத்து வது, ஆதிச்சநல்லூர் 10நாள் கல்லூரி மாணவ மாணவிகளை வரச்சொல்லி கருத்தரங்கு நடத்துவது, புளியங்குளம் தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை அமைத்து, ஸ்ரீவைகுண்டம் அணைக்குள் படகு விடுவது சம்பந்தமாகவும், ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆழ்வார்திருநகரி வரையில் முதல் கட்டமாக தாமிரபரணியை சுத்தப்படுத்துவது குறித்தும் பேசினோம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நினைவு மண்டபங்கள் அனைத்திலும் நூலகம் மற்றும் அவர்களின் வரலாற்று குறிப்புகளை வரைபடமாக வைக்கவேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வைத்தேன். அனைத்தையும் செய்து தருவதாக உறுதி அளித்தார். விரைவில் அதற்கான பணிகள் படிப்படியாக நடைபெறும் .அதோடு மட்டுமல்லாமல் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை 25.07.2024 அன்று அவரது தூத்துக்குடி இல்லத்தில் சந்தித்து மனுகொடுத்தேன்.
தாமிரபரணியை சுத்தப்படுத்த தாங்கள் எடுத்த நடவடிக்கைக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதற்காக கடந்த மாதம் கலியாவூரில் இந்த பணியை நமது பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அம்மா அவர்கள் துவக்கி வைத்தார். அந்த பணி மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. தயவு கூர்ந்து ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து ஆழ்வார்திருநகரி பாலம் வரை இருகரையில் உள்ள முள்செடிகளையும், தாமிரபரணி ஆற்றில் உள்ள முள்செடிகளை அகற்றி, மரங்கள் நட வேண்டும். இதற்காக பலர் உதவ உள்ளனர் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து விடலாம்.
மேலும் பாராம்பரிய முக்க வைணவத்தலங்களில் முதல் திருப்பதி (ஸ்ரீவைகுண்டம்) யில் இருந்து கடைசி திருப்பதி (ஆழ்வார்திருநகரி) வரை சுத்தம் செய்து நாம் பத்திரிக்கையில் விளம்பரம் படுத்தினால், தொடர்ந்து மற்ற பகுதியிலும் சுத்தம் செய்ய முன்வருவார்கள். அப்போது நாம் தாமிரபரணி பணியை செம்மையாக செய்ய ஏதுவாக இருக்கும். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
என்று மனுவில் கூறியிருந்தேன். அவரும் ஆவண செய்வதாக வாக்களித்தார்.
இதற்கடையில் மருதூர் அணையில் சுத்தப்படுத்தும் பணி மிக விரைவாக நடந்து கொண்டிருந்தது.
கருங்குளம் ஒன்றியம் முறப்பநாடு கோயில் பத்து பஞ்சாயத்து எல்கை மருதூர் அணையில் இருந்து தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் முறப்பநாடு சிவன் கோயில் வரை தாமிரபரணி மேற்கரையில் சுத்தம் செய்து சுமார் 1 லட்சம் பனை விதைகள் வரை விதைக்கலாம் . தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் ஆடி அமாவாசை அன்று ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட பக்தர்கள் கூடுகிறார்கள். இந்த இடத்தில் துணிக்கழிவுகளை போடக்கூடாது என பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் விளம்பர பலகை வைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் . இங்கிருந்தான் தூத்துக்குடி, விருதுநகர் உள்பட பல்வேறு இடங்களுக்கு குடிதண்ணீர் செல்கிறது. எனவே இவ்விடத்தினை சுத்தமாக வைக்க வேண்டியது நமது கடமையாகும் என மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வலியுறுத்தி வந்தேன்.
அதே போல் ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பனைமரம் உள்பட பல மரங்களை வளர்த்து வருகிறார். அவருக்கு சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவு முள்செடிகளை அகற்றி கொடுத்தால் அவர் 10 ஆயிரம் பனை மரங்களை விதைப்பதற்கு தயாராக உள்ளார். எனவே அந்த பணியையு செய்து தரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பேசி வந்தேன்.
தாமிரபரணியில் நாம் மிகவும் எதிர்பார்ப்பது நவதிருப்பதியில் முதல் திருப்பதியான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கடை திருப்பதியான ஆழ்வார்திருநகரி வரை சுத்தப்படுத்துதல்.
புதுக்குடி & ஆழ்வார் திருநகரி தூரம் 4 கிலோ மீட்டர் தான். இதில் ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து அடுத்த பாலம் வரை சுத்தப்படுத்தி வைத்துள்ளோம். அப்படியென்றால் சுமார் 3.5 கிலோ மீட்டர் கரை இருபுறமும் சுத்தப்படுத்தி மரங்கள் நட்டு விடலாம். இந்த இடத்தில் பல மண்டபங்கள் புதர் மண்டி கிடக்கிறது. அந்த மண்டபத்தினை நாம் சுத்தப்படுத்தி விடலாம். இதனால் நமது பாரம்பரியமும் வெளியே தெரிந்து விடும். ஆழ்வார்திருநகரியில் ஒரு இடத்தில் சாக்கடை தாமிரபரணியில் கலந்து வருகிறது. அதை சுத்தப்படுத்த ஆழ்வார்திருநகரி பேரூராட்சி மூலம் ஏற்பாடு செய்து விடலாம் .
மேலும் தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணியில் முதல் கட்டமாக நாலு கிலோ மீட்டர் சுத்தப்படுத்தி மரம் நட்டு மாதிரியாக காட்டி விடலாம். ஏற்கனவே இருக்கும் கரைகளை செம்மைபடுத்தியது போலவும் இருக்கும். மாவட்ட ஆட்சி தலைவராக சந்தீப் நந்தூரி அய்யா இருக்கும் போது மாவட்டம் முழுவதும் 40 ஜே.சி.பி இயந்திரத்தினை ஸ்பான்சர் வாங்கி மாவட்டம் முழுவதும் தாமிரபரணி கரையில் 40 கிலோ மீட்டருக்கு பயன்படுத்தினோம். கல்லூரி மாணவ மாணவிகள், தொண்டு நிறுவனங்களை மரம் நட பயன்படுத்தினோம். ஆனால் வெற்றியடையவில்லை. காரணம் அதிக தூரம் இருந்த காரணம் தான். தற்போது 1 வார முகாம் இந்த நாலு கிலோ மீட்டரில் மட்டும் பயன்படுத்தினால் தாமிரபரணி சுத்தமாகி விடும். அதன் பின் 3 மாதத்துக்கு ஒருமுறை நாலு கிலோ மீட்டர் சுத்தப்படுத்தினால் மூன்று வருடத்தில் தாமிரபரணி முழுவதும் சுத்தமாகி விடும் . அதற்கு அடிக்கோல் மாவட்ட ஆட்சித்தலைவர் தான் எடுக்க வேண்டும். இதற்காக தங்கள் தலைமையில் ஒரு கூட்டம் நடத்த வேண்டும். அதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், ஏரல் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார், ஸ்ரீவைகுண்டம் பிடிஓ, ஆழ்வார்திருநகரி பேரூராட்சி அதிகாரி, தொண்டு நிறுவனங்கள் கிராம உதயம், டி.வி.எஸ், மதர் நிறுவனம், நம் தாமிரபரணி அமைப்பு மற்றும் ஸ்ரீவைகுண்டம் தன்னார்வ தொண்டர்கள், படித்துறைகளை சுத்தப்படுத்த உழவாரப்பணி குழுவினரை(ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, காந்தீஸ்வரம் கோயில்) நாம் இந்த கூட்டத்தில் பயன்படுத்தி பணி செய்ய நாள் குறித்து விட வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட ஆட்சி தலைவர் லெட்சுமி பதியிடம் வைத்தோம்.
இதற்கிடையில் 15.08.2024 ல் தூத்துக்குடி மாவட்ட வரலாற்றில் சுதந்திர தினவிழாவில் முதல் முதலாக மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபதி அவர்கள் எழுத்தாளர்களை தங்களோடு இருக்கையில் ஒன்றாக அமர்ந்தி கலை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க வைத்து கௌரவித்தார்.
இதில் மூத்த எழுத்தாளர்கள் கலாபன் வாஸ், கோணங்கி, தேவ தட்சன் உள்பட நானும் (முத்தாலங்குறிச்சி காமராசு) கௌரவிக்கப்பட்டோம்.
அதோடு மட்டுமல்லாமல் 17.08.2024 ஆம் நாள் புத்தக கண்காட்சி நடத்த மாவட்ட ஆட்சிதலைவர் கூட்டம் நடத்தினார்கள். அதில் எழுத்தாளர்கள் சோ.தர்மன், உதயசங்கர் மற்றும் நானும் எழுத்தாளர்களின் பிரதிநிதிகளாக கலந்துகொண்டோம். எம்.பி கனிமொழி அவர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதற்கிடையில் யாருமே எதிர்பார்க்காத விதமாக மாவட்ட ஆட்சியர் சென்னைக்கு மாற்றப்பட்டார்கள். தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணி, ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறையினர் நிறுத்திய பணியை மீண்டும் துவக்குதல், தூத்துக்குடி நெய்தல் புத்தக கண்காட்சியை துவக்குதல் உள்பட பணிகளை மிகச்சிறப்பாக செய்து கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பதி அவர்கள் முதலமைச்சரின் இணை செயலாளராக பணி மாற்றம் செய்யப்பட்டார். 20.08.2024 அன்று சென்னை சென்ற அவர் முதலமைச்சர் அவர்களை சந்தித்து எனது நூலான “தவழ்ந்து வரும் தாமிரபரணி”யை கொடுத்து வாழ்த்து பெற்றார். அதுவும் தாமிரபரணிக்கு பெருமைதான்.
அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இளம் பகவத் நிமியமிக்கப்பட்டார்கள். ஆனாலும் தாமிரபரணி பணி தொய்வில்லாமல் நடந்து கொண்டுதான் இருந்தது. அய்யாவும் நெல்லையில் பயிற்சி ஆட்சியராக இருந்த போது எழுத்தாளர்களோடு பயணித்தவர்தான். நெல்லையில் நிறுத்தப்பட்ட புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த ஏற்பாடு செய்தவர்தான். ஆகவே இந்த ஆண்டு புத்தக கண்காட்சி சிறப்பாக நடைபெ-றும் என்பதில் ஐயப்பாடு இல்லை. ஆனாலும் தாமிரபரணிக்கான பணியை மேற்கொள்ள அவரிடம் மீண்டும் மனு கொடுக்க வேண்டும்.
குறிப்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் லெட்சுமிபதி அவர்களுக்கு நான் அனுப்பிய மனுவுக்கு தூத்துக்குடி கீழ் தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் ஆறுவடிநில கோட்ட செயற்பொறியாளர் எனக்கு பதில் அனுப்பியிருந்தார்.
தாங்கள் திருவைகுண்டத்தில் இருந்து ஆழ்வார்திருநகரி வரை தாமிரபரணி ஆற்றில் முட்செடிகளை அகற்றி மரம் நட்டுத்தர ஆவண செய்ய வேண்டி இருந்தீர்கள். இந்த பணியை எக்னேரோ நிறுவனம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பதிலளித்தனர்.
இதனால் விரைவில் தாமிரபரணி ஆற்றில் திருவைகுண்டம் முதல் ஆழ்வார்திருநகரி வரையுள்ள நதி சுத்தப்படுத்தபடும் என நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனாலும் அதற்கான நடவடிக்கை சற்று தொய்வு ஏற்பட்டது. இந்த வேளையில் தான் மதுரை உயர்நீதி மன்றத்தில் தாமிரபரணி சார்ந்த என் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
(நதி வற்றாமல் ஓடும்)


