“எங்களை மீறி இந்த ஊருக்குள்ள ஒரு லாரி மணல் அள்ள முடியாது ஆமா”
“அப்படி மீறி அள்ளினா” நாட்டாமை கேட்டார்.
“என் உடல் மேலே லாரியை ஏத்திட்டு வேணுமுன்னா மணல் அள்ளிக்காங்க”
ரகு தீர்க்கமாக சொன்னான்.
“இங்க பாருங்கடே இது கவர்மெண்ட் உத்தரவு. நம்ம ஊருக்கு குத்தங் குறை எதுவும் இருந்தா கேப்போம். கலெக்டர் செஞ்சு கொடுப்பாவ. ஒரேயடியா மறிச்சா. எப்படிடே அர்த்தம். நம்ம ஊருல நிறைய குறை இருக்கு. நான் இல்லைன்னு சொல்லலை . அதையெல்லாம் கேப்போம்.” நாட்டாமை ஆணித்தரமாக சொன்னார்.
“யோவ் பெரிசு. 5 ஆயிரம் ரூபாய் தாரேன். நீரு உம்ம வீட்டுக்கிட்ட ஒரு பன்னி குச்சில் போட்டு இருக்கிறீரே. அதை பிரிக்க ஒத்துக்குவீரா?”
“அது எப்படிடே நான் ஆட்டுக்குட்டியை எங்க போய் கட்டுவேன்”. நாட்டாமை விட்டுக்கொடுக்காமல் பேசினார்.
“அது சரி உம்ம சொந்த இடமுன்னா பணம் கொடுத்தாலும் கொடுக்க மாட்டேரு. ஆறு உமக்கு சொந்தமில்லை. அதனால வித்திறலாம். அப்படித் தானே?” ரகுவுக்கு கோபம் மிக அதிகமாக வந்தது.
“பொறவு ஆறு யாருக்கிடே சொந்தம். அரசாங்கத்துக்கு சொந்தம். இப்ப அரசாங்கம் குத்தைகக்கு கொடுத்துட்டு. நாம தடுக்க முடியுமா?” அப்பாவியாக கேட்டார் நாட்டாமை.
“இல்லை தெரியாமத்தான் கேட்கேன். மணல் அள்ளினா ஆறு புதராயிடும், அப்புறம் தண்ணீ கெட்டு போவும். மணல் இல்லாட்டி இந்த ஆறு ஆறா இருக்காதுவே பெரிசு. உமக்கு எங்க புரிய போவுது”.
ரகுவும் காளிமுத்துவும் மாரியப்பனும் சொல்வதை யாரும் கேட்பதாக தெரியவில்லை.
“இங்க பாருங்கடே நீங்க மூணுபேருதான் எதிர்ப்பு சொல்லுதீய. மெஜாரட்டி மக்க மண்ணை கொடுங்க. பெருசா ஏதாச்சும் கேளுங்கன்னு சொல்லுதாவ. அவுகள மீறி நான் எதுவும் செய்ய முடியாதுடே”.
நாட்டாமை தீர்க்கமாக சொன்னார்.
“அப்படியா? நாளைக்கு எப்படி ஊருக்குள்ள லாரி வருதுன்னு பாப்போம்”. ரகு கோபமாக சொல்லி விட்டு முன்னால் செல்ல மற்ற இருவரும் பின்னால் சென்றனர்.
“என்னடே ஒரு மாரி வீஞ்சிக்கிட்டு போறானுவ?. கிறுக்கு தனமாக ஏதாவது செஞ்சி, ஊருக்கு நடக்கப்போறதல மண்ணள்ளி போட்டுருவானுவ போல”. நாட்டாமை வருத்தப்பட்டார்.
“போனா போயிட்டு போறனுவ. நாட்டாமை நீர் மண்ணனள்ள வாரவனுவ கிட்ட கொஞ்சம் அதிகமா கேளுமுவே. இந்த பயலுவ ரொம்ப துள்ளுதானுவ. அவனுவல சரிக்கட்டணும் சொல்லுமுவே. கொஞ்சம் செலவாகுமுன்னு போட்டு வாங்கும். வர்றவனுவ கிட்ட நிறைய கறந்துரும். நாமளும் கோயிலை கட்டி, கும்பாபிசேகம் பண்ணி, ஒரு நாளு மக்களுக்கு வயிறார அன்னதானம் போடனும். செலவு இருக்குல்லா. அது மட்டுமில்லைவே மணல் அள்ள நம்ம மக்களை தான் கூப்பிடணுமுன்னு சொல்லிரும். பொறவு பொழைப்பு இல்லாம போயிரக்கூடாது. நீர் இதையெல்லாம் சரியா செய்வீருன்னுத்தான் நாங்க, உம்ம சொல்லுக்கு கட்டுப்படுதோம்”. ஊர் கூட்டத்தில் பெரிசு ஒன்று பேசி அமர்ந்தார்.
“இங்க பாருங்கடே இப்போ மூணு பேரு வீஞ்சுக்கிட்டு போறனுவ. அவனுவல கட்டுபடுத்த முடியலை. நாளைக்கு நீங்களும் கிளம்பி போயிடக்கூடாது. முதலில எல்லாரும் சூடம் மேல சத்தியம் பண்ணி தாருங்க. அப்படினாத்தான் நான் முன்னால நிக்க முடியும் ஆமா”.
நாட்டாமை இருக்கும் கூட்டத்தினை தன் கைக்குள் வைக்க வேண்டும் என சாமி சத்தியத்தினை கடைசி ஆயுதமாக எடுத்தார்.
“என்னவே தொட நடுங்கி மனுசனா இருக்கீரு. சரி வாருமே கோயிலுக்கு வெளியே சூடம் பத்த வையும். நாங்க சத்தியம் பண்ணுதோம்”.
அந்த மூன்று பேரை தவிர மற்ற எல்லோரும் கோயிலில் வரிசையாக நின்று சத்தியம் செய்தனர்.
*****
கோயில் முன்பு அனைவரும் சத்தியம் செய்து விட்டு வீட்டுக்கு கிளம்பினர். அனைவரும் நிம்மதியாக தூங்கினார்கள்.
ஆனால் அந்த மூன்று பேரும் மட்டும் தூங்க வில்லை.
“என் நதியை . என் தாமிரபரணியை , அழகான என் தாயின் உடலில் உள்ள அவள் சதைபோன்ற மணலை கூறுபோட ஆரம்பித்து விட்டார்களே, இந்தகூறுகெட்ட மனிதர்கள்”. ரகுவுக்கு கண்கள் சிவந்தது. தன் தந்தை கூட தன் சொல்லை கேட்டபதாக தெரியவில்லை. “என் மகனுக்கு எதுவும் கிடைச்சா, அந்த பங்கை என் கிட்டேயே தந்து விடுங்கள்” என சத்தியம் செய்து நாட்டாமை பின்னால் போய் நின்றார்.
ஆனால் இவர்களுக்கு எல்லாம். சரியாக 30 வருடத்தில் தாமிரபரணி நதி எப்படி சீரழியப்போகிறது என்பது தெரியவில்லை.
“சென்னையில் கூவம் எனும் அழகான நதியிருந்தது. இன்று நாம் சென்னை சென்றால் அந்த நதி எப்படி இருக்கிறது. பார்த்தாயா? சாக்கடைபோல ஆகி விட்டது. ஒரு காலத்தில் அந்த நதியும் தாமிரபரணி போலத்தான் இருந்தது”. காளி சொன்னான்.
“அது எப்படிடே சொல்லுத”. மாரியப்பன் கேட்டான்.
. “நான் தொண்டு நிறுவனத்தில வேலை செய்யும் போது ஒரு வெளிநாட்டு காரரு சில விவரத்தை சொன்னாரு. இங்க பாரு இந்த நதி 1969-ல் எப்படி இருந்தது தெரியுமா?. அதை அவரு என் கிட்டே சொல்லியிருக்காரு”
காளி தொடர ஆரம்பித்தான்.
“சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா கடற்கரை, புனித ஜார்ஜ் கோட்டை போல சென்னையின் மற்றுமொரு முக்கியமான அடையாளம், கூவம் ஆறு. ஆனால், முந்தைய அடையாளங்களைப் போல பெருமைமிகு ஒன்றாக தற்போது கூவம் இல்லை. அதற்கு காரணம் நாம்தான். நல்லதொரு நதியாக, இந்த நகரத்தை அழகாக்கிய கூவத்தை இன்று கரையில் நின்றுகூட காணமுடியாத அளவுக்கு சாக்கடையாக மாற்றிவிட்டோம். அதுக்கு காரணம் நாம் தான்.
“சரி டே. நான் எப்போதுமே இது நதியில்லை. கூவமுன்னுதானே நினைச்சிக்கிட்டு இருக்கேன். அது தாமிரபரணி மாதிரி நதியா?” மாரியப்பனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“06/04/1969 ஆனந்த விகடனில் வெளியான கட்டுரை ஒன்றை வச்சிருக்கேன். இங்க பாரு. இதுல கூவம் நதியே கதறிக்கிட்டு தன்னோட கதையை சொல்லுது. நீயே கேளு”.
அதை உரக்க படிக்க ஆரம்பித்தான் காளி. “என்னைத் தெரியவில்லையா உங்களுக்கு? உங்கள் மூக்கைக் கேளுங்கள்; அது சொல்லும் நான் யாரென்று! ஆமாம், நான் சாட்சாத் கூவம் ஆறேதான்!
என்னைப் பற்றி உங்கள் எல்லோருக்கும் ஓர் ஏளனம். ஏன் தெரியுமா? என் பெருமைகளைப் பற்றி நீங்கள் சரியாகத் தெரிந்துகொள்ளவில்லை. எனக்குச் சமமாக இந்த இந்தியா விலேயே ஒரு நதியைக் குறிப்பிட வேண்டுமானால் அது ‘கங்கை’தான்!
மூர்ச்சை போட்டு விழாதீர்கள்! ஜனங்களின் பாவ அழுக்கை யெல்லாம் ‘கங்கை’ சுமக்கிறதாம். இந்தச் சென்னைப் பட்டணத்திலுள்ள அத்தனை ஜீவராசிகளின் அழுக்கை யெல்லாம் சாக்கடை வடிவில் நான் சுமக்கிறேன். இப்போது புரிகிறதா?. எனக்கும் கங்கைக்கு உள்ள ஒற்றுமையை.
நூற்றுக்கு நூறு உண்மையான பேச்சு. ஆமாம்! ஊருக்குள் ஓடும் ஒரு நதியில் சாக்கடையைக் கலந்து ஏன் இப்படி நாற்றமடிக்க விடுகிறார்கள்?
சென்னை வாசிகள் எனக்கு அனுப்பி வைக்கும் சாக்கடை நீரையும் கழிவையும் வைத்து நான் சில ‘ரசவாத வித்தைகள்’ செய்கிறேன். அதாவது, அந்தக் கழிவுப் பொருட்களை விஞ்ஞான முறையில் ‘பிரபல வியாதி’களாக மாற்றி ஜனங்களுக்கே மீண்டும் விநியோகித்து விடுகிறேன்!
இதைச் செய்வதற்காக நான் கோடானு கோடி வீரர்கள் கொண்ட ‘கொசுப் படை’ ஒன்றை வளர்த்து வருகிறேன்.
ஜனங்களுக்கு வருகிற ‘காய்ச்சல்’களிலேயே ரொம்பவும் உயர்தரமான மலேரியா காய்ச்சலை எங்கள் கொசுப் படையினர்தான் உற்பத்தி செய்கிறார்கள்.
கூவத்திற்குக் கிளை நதிகளும் இருக்கின்றன. அவை தெருக்களில் ஏராளமாக ஓடுகின்றன. சில பகுதிகளில் அவை பிரம்மபுத்ரா நதி உடைப்பெடுத்துப் பிரவகிப்பதுபோல் ஆங்காங்கே வெள்ளக் காடாகப் பிரவாகம் செய்கின்றன.
அது மட்டுமா? சாக்கடைத் தண்ணீரின் போக்குவரத்துச் சாதனமான ‘பீப்பாய் வண்டிகள்’, வறண்டு கிடக்கும் தெருக்களிலெல்லாம் சாக்கடை நீரை அபிஷேகம் செய்து குளிர வைக்கின்றன!
கோடம்பாக்கத்தில் ‘பேசும் படம்’ அலுவலகத்துக்கு எதிரே போய்ப் பாருங்கள்; தெரு ஓரத்தில் சாக்கடை நீரைப் பீப்பாய் பீப்பாய்களாகக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள்!”
என்று கூவம் கதறி அழுகிறது. இதே போல் இன்னும் 25 வருடம் கழித்து தாமிரபரணி கதற வேண்டுமா?. ஏற்கனவே தொழிற்சாலை கழிவு, திருநெல்வேலி நகராட்சி கழிவு எல்லாம் தாமிரபரணியில் தானே விழுகிறது. இதே நிலை நீடித்தால், தாமிரபரணி கதியும் கூவம் கதிதானே. இதோடு மட்டுமல்லாமல் அந்த காலத்தில் கூவம் ஆற்றங்கரையில் வசித்தவர்களும் கதறுகிறார்கள்.
“பாருங்கள் சார், நாற்றங்கால்வாய் கரையிலே குடியிருக்கும் எங்கள் கதியை! நாங்க ஒன்றும் கார்ப்பரேஷனுக்கோ கவர்ன்மென்ட்டுக்கோ தெரியாமல் இங்கே குடியிருக்கவில்லை. நாங்க இருக்கிறது எல்லாருக்கும் தெரியும். எலெக்சன் சமயத்திலே ஞாபகமா ஓட்டுக்கேட்க வந்துவிடுகிறார்களே! ஓட்டு வாங்கிக்கொண்டு போனால், போனதுதான்! அப்புறம், அடுத்த எலெக்சனுக்குத்தான் திரும்பி வராங்க. லைட் இல்லை, குடிநீர் இல்லை என்பதெல்லாம் சொல்லிச் சொல்லி அலுத்துப் போன விஷயங்கள். ஆனால், மனுஷர்கள் குடியிருக்கிற இடத்துக்குப் பக்கமாக ஓடுகிறதே சாக்கடை ஆறு, அதைச் சுத்தம் பண்ண வேண்டும் என்றாவது நினைக்கவேண்டாமா? கூழோ கஞ்சியோ, நமக்குக் கிடைக்கிறதை நிம்மதியா குடிக்க முடியலே. ‘கப் கப்’பென்று நதியில் இருந்து சாக்கடை நாற்றம் அடித்து, சாப்பிட்டதை வெளியிலே கொண்டாந்துடுது. தின்னும் பதார்த்தம், குடிக்கும் நீர் எல்லாத்துலேயும் கொசு வந்து குத்துது” ன்னு எல்லோரும் பேசுறாங்களே . இதே நிலை தாமிரபரணி கரையில் வசிப்பவரும் வந்து விடுமே?.
கூவமும் கதறுகிறது. கூவம் கரையில் இருப்பவர்களும் கதறுகிறார்கள்”.
காளிமுத்து மற்ற இருவர்களையும் பார்த்தான். “இதே போல இன்னும் 25 வருசத்துல தாமிரபரணி கத்த போவுது. சாக்கடையால கஷ்டப்பட போவுது. கரையில் உள்ளவர்களும், நதியை நம்பி குடிநீர் குடிப்பவர்களும் கதறப்போகிறார்கள்”.
ரகு யோசித்துக்கொண்டே இருந்தான். “ஏடே நான் கூவமுன்னா சாக்கடைன்னுதான் நினைச்சு கிட்டு இருக்கேன். அது சாக்கடையில்லை. நதின்னு நினைக்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்குடே”.
காளி சொன்னான். “இங்க பாரு தாமிரபரணி பொதிகை மலையில பூங்குளத்தில நதிமூலம் இருக்கிறது போல கூவம் நதிக்கும் நதி மூலம் இருக்கு. அதையும் சொல்லுதேன் நீ. கொஞ்சம் கேளு”.-
“சென்னைலில் இருந்து 72 கி.மீ., தொலைவில் அரக்கோணம் தாலுகா தக்கோலம் கிராமத்துக்கு அருகே கேசவரம் அணைக்கட்டில் அதாவது கூவம் ஏரியில கல்லாற்றின் கிளையாறாக உருவாகிறது கூவம்.
கூவத்தின் துணை வடிநிலங்களில் மொத்தம் 82 குளங்கள் உள்ளன . 13,575,93 ஹேக்டேர் ஆயக்கட்டு பாசனப்பரப்பு உள்ளது.
இந்த நதி கூகம் என சம்பந்தர் தேவாரத்தில் பாடுகிறார். கூவம் ஆறு உருவாகும் இடத்தில் பாடல் பெற்ற சைவத் தலமான தக்கோலம் (திருவூறல்) அமைந்துள்ளது. இதன்கரையில் இலம்பையங்கோட்டூர், திருவிற்கோலம் மற்றும் திருவேற்காடு ஆகிய பாடல்பெற்ற தலங்களும், எழுமூர் மற்றும் நெற்குன்றம் ஆகிய வைப்புத் தலங்களும் உள்ளன”. நதியில் வரலாறு மிக சுவராஜ்யமாக சென்றது.
“ஆகா. கூவமும் புண்ணிய நதிதான் போல”. மாரியப்பன் கூவம் வரலாற்று அதிசயமாக கேட்டான்.
“ம். அதுமட்டுமா? புறநகர் பகுதிகளில் கூவம் நதியில் ஆரண்வயல் அணைக்கட்டு , கொரட்டூர் அணைக்கட்டு , கண்ணன் பாளையம் அணைக்கட்டு , ஆயலசேரி அணைக்கட்டு , பருத்திப்பட்டு அணைக்கட்டு ஆகியவை கட்டப்பட்டுள்ளன . வளைந்து நெளிந்து வந்து பல வடிகால்களை ஏற்று , சென்னை நகர எல்லையான கோயம்பேட்டில் கூவம் நதி நுழைகிறது . இங்கத்தான் அதோட சோதனை காலம் ஆரம்பிக்கிறது”.
காளி அமைதியாக தொடர்ந்து மற்ற இருவர்களும் அமைதியாக இருந்தனர்.
“சென்னை நகருக்குள் 17.98 கி.மீ. தூரம் கூவம் நதி பயணிக்கிறது . இடையில் 16 பாலங்களை கடந்து , பூங்கா நகரில் நேப்பியர் பாலத்துக்கு கீழே கடலில் வந்து சேருகிறது
அதற்கு முன்பாக , லாஸ் பாலத்தில் இரண்டாக கூவம் பிரிந்து மீண்டும் நேப்பியர் பாலத்தில் ஒன்று சேருவதால் , அங்கு தீவுத்திடல் அமைந்துள்ளது .
எந்தவொரு நதியுமே வெறும் உயிரற்ற நீர் ஓடும் பாதை மட்டும் அல்ல. நதிகள் அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின், நாகரிகத்தின், பண்பாட்டின், கலைகளின் மூலாதாரமும் கூட. ஒரு நதியின் வரலாறு என்பது அந்தப் பிராந்தியத்தின் வரலாறு. ஆறுகள் தந்த செழுமையினாலும் வளத்தினாலும் அந்த வளம் தந்த சூழலினாலுமே கலைகளும் நாகரிகமும் செழித்து வளர்ந்தன. நதிக்கரைகளிலேயே உலகின் மாபெரும் மனித நாகரிகங்கள் உருவாயின. நாகரிகம் வளர, கலைகள் வளர்ந்தன; கலைகள் வளர ஆற்றின் கரைகளில் அந்த நதிகளை அளித்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லும் விதமாகக் கோயில்கள் வளர்ந்தன”.
பெரும் மூச்சு விட்டான் காளி.
“இவ்வாறாக நதியின் வளத்தால் சமயங்களும் பக்தியும் கலைகளும் பண்பாடும் அவை உருவாக்கிய வரலாறும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க இயலா வண்ணம் இணைந்தே வளர்ந்தன. நதிகள், வனங்கள், மலைகள், நில வளங்கள், சமுத்திரங்கள் இல்லாவிட்டால் இந்த உலகம் இல்லை; உலகத்தின் மக்களும் இல்லை. இயற்கையே நம் வாழ்க்கையின் ஆதாரம். அப்படிப்பட்ட முக்கியமான இயற்கை வளமான நதி வளத்தை, நம் பாண்பாட்டின், கலைகளின் ஆதாரத்தை நாம் போற்றிப் பாதுகாக்கத் தவறி வருகிறோம். நதிகள் மட்டும் அல்ல, அவை வளர்த்த கலைகளையும், பண்பாட்டுச் சின்னங்களையும் நாம் எப்படிப் பாதுகாக்கிறோம் என்பதற்கு ஒரு சிறு உதாரணமே கூவம் நதியின் இன்றைய நிலை. இன்று தமிழ்நாட்டின் எந்தவொரு நதியை எடுத்துக் கொண்டாலும் எந்தவொரு நீர் ஆதாரத்தை, வன வளங்களை எடுத்துக் கொண்டாலும் இந்த அவல நிலைதான் நீள்கிறது”.
“ஆனால் வற்றாத ஜுவ நதி தாமிரபரணி. இது வரை வற்றியதே கிடையாது. இன்று தாமிரபரணி எவ்வளவு தூய்மையாக இருக்கிறது. இந்த தூய்மையை அழிக்க முதல் முதலாக மண்ணை அள்ள கயவர்கள் வந்து விட்டனர்”. ரகுவுக்கு கோபம் கொப்பளித்தது.
“கூவம் , சென்னை நகரில் பாயும் இரண்டு ஆறுகளில் ஒன்று, அடையாறு மற்றொன்று. ஒரு காலகட்டத்தில் தூய நீர் ஓடிய இந்த ஆற்றில் மீன் பிடி தொழிலும் படகுப் போட்டிகளும் நடைபெற்றன. இன்று சென்னை நகரின் மக்கள் தொகைப் பெருக்கத்தின் விளைவாக மாசு நிறைந்த ஆறாக ஓடுகிறது”.
காளிக்கு தன் மனதுக்குள் உள்ளதை யாரிடமாகவது கொட்ட வேண்டும். எனவே இரண்டு பேரிடமும் தனது உள்ள குமுறலை கொட்டிக்கொண்டிருந்தான்.
“தாமிரபரணியும் தோன்றும் இடத்தில் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது. பாபநாசம் வரை தாமிரபரணியின் சுத்தமான நீர் நோய் தீர்க்கும் மருந்தாக அல்லவா இருக்கிறது. காரையாற்றில் அன்னம்மாள் பாட்டி மஞ்சள் காமலைக்கு மருந்து கொடுக்க, நோயாளிகளை தாமிரபரணி நடு ஆற்றில் நின்று தண்ணீரை கையில் அள்ளி குடிக்க செய்கிறார்கள். அப்படி குடிக்கும் போது நோய் தீர்ந்து விடுகிறது. ஆனால் சேரன்மகாதேவியில் தண்ணீரை குடித்தால் கலரா வந்திடுமே”.
காளி மேலும் கூவத்தனை பற்றி சொன்னான்.
ஊரின் ஊடே ஊடுருவிச் செல்லும் வெண்மை நிறச் சாலையைப் போன்று 50 ஆண்டுகளுக்கு முன் கூவம் வெண்மை பளிச்சிடும் நதியாக இருந்திருக்கிறது.
கடலில், ஆற்றில், ஏரியில் இன்னபிற நீர்நிலைகளில் கிடைக்காத, கூவத்திலேயே உருவாகி மக்கள் பயன்படுத்தக் கூடியதான 70 வகையான மீன் வகைகள் கூவத்தின் நீராதாரச் சொத்து. ஆனால், கடலின் ஆதரவோடு முகத்துவாரப் பகுதிகளில் மட்டுமே அதாவது 30 சதவிகிதப் பகுதிகளில் மட்டுமே இப்போது மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்கின்றன. எஞ்சிய 70 சதவிகிதப் பகுதியானது ‘உயிரினங்கள் வாழத் தகுதியற்றவைÕ என அறியப்பட்டுள்ளது மீன்பிடித் தொழிலோடு வளைந்து நெளிந்து பயணிக்கும் கூவத்தின் அழகான நீர்வழிப் பாதையில் படகுப் போட்டிகளும் நடந்திருக்கின்றன. கூவத்தின் மீதான மேம்பாலங்கள் இல்லாத காலங்களில் ஆற்றைக் கடந்து செல்லும் மரப்பலகைகளை மீனவர்களே வலுவாக அமைத்து, அதன் மீது அமர்ந்து வலை வீசியும், தூண்டில் போட்டும் மீன்களைப் பிடித்து வாழ்ந்துள்ளனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையானது 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை கைத்‘தறி’ மூலம் துணிகளை நெய்து வாழும் நெசவாளர்களின் வாழ்விடம். இந்தப் பகுதியை அவர்கள் தேர்ந்தெடுத்ததற்கு முக்கியக் காரணம் கூவம். ‘தறி’ நெய்யும் வேலைக்குப் பயன்படுகிற அதிகப் படியான நீரை அவர்கள் ஊருக்கு நடுவில் ஓடிய கூவத்தில் இருந்தே எடுத்துப் பயன்படுத்தி வந்துள்ளனர். நெசவாளர்கள் வாழ்ந்த இந்த ‘தறிப்பேட்டை’தான் பின் சிந்தாதிரிப்பேட்டையானது”.
மாரியப்பன் யோசித்துப்பார்க்கிறான்.
“தாமிரபரணியில் கூட பத்தமடை பாய் தயாராகிறது. இந்த தண்ணீயின் மாண்பு தான் பத்தமடை பாய் மிகச்சிற்பாக உலக தரம் வாய்ந்தாக உருவாகியுள்ளது. சிரிக்காத பாரத பிரதமர் நரசிம்மராவ் கூட இந்த பத்தமடை பாயை பார்த்து சிரித்ததாக சொல்வார்கள். தாமிரபரணி மணலை அழித்து விட்டால், சிந்தாதிரி பேட்டையில் தறி நெசவாளர்கள் காணாமல் போனது போல பத்தமடை பாய் முடைவோரும் காணாமல் போய் விடுவார்களே?”.
சைவத்தலமான தக்கோலம் அம்மனின் பெயர் ‘கூவாத்தம்மன்Õ . பின்னாளில் அதுவே ‘கூழ் வார்த்தம்மன்Õ என்று வசதிக்கு ஏற்ப மாறிப் போனது தனிக்கதை. கூவாத்தம்மன் பெயரை கொண்டுத்தான் கூவம் நதி பெயர் வந்துள்ளது. கூவம் ஓடுகிற பாதைகளில் எல்லாம் அம்மன் கோயில்கள் உருவாகின. அந்த கோயில்களின் பயன்பாட்டுக்கு கூவம் நதிதான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. கூவத்தின் நீர் வாட்டமும், அதன் வளமான தன்மையும் இயல்பாய் அதன் கரையோரங்களில் பச்சை வயல்களை வளர்த்துக் கொடுத்தது. லம்பாடி இனத்தவர்கள், நாடோடிகள், குறவர் இன மக்கள் இந்தக் கரைப் பகுதிகளில் கரைகளை சீரழிக்காமல் கூடாரம் அமைத்து, போகிற போக்கில் தங்கிச் சென்றனர். கூவம் நதிக்கரையை ரசித்தபடி நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்த செல்வந்தர்கள் கூடாரங்களில் இருந்தவர்களை விரட்டிவிட்டு அங்கே நிரந்தரப் படகு வீடுகளை ஏற்படுத்திக் கொண்டனர்.
காலப்போக்கில் படகு வீடுகள் கான்கிரீட் பங்களாக்களாக மாறின. செல்வந்தர்களுக்கு வீட்டு வேலைகள் செய்ய வந்த எளியவர்கள் அங்கே குடிசைகள் அமைக்க, மக்களின் வாழ்விடமாகியது கூவம்”.
காளி தொடர்ந்து கூவத்தின் வரலாற்றை சொல்லிக்கொண்டே இருந்தான்.
“வீடுகளில் இருந்தவர்கள் பெரிய சைஸ் குப்பைத் தொட்டியாக கூவத்தைப் பயன்படுத்தினர். கரையோர ஏழை மக்கள் தங்கள் அன்றாட ‘உள்ளே-வெளியே’ விஷயங்களுக்கு கூவத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் கூசம் கழிவறையானது. எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மக்கும் தன்மை கொஞ்சமும் இல்லாத பிளாஸ்டிக் கழிவுகளும் கூவத்துக்கு வந்து சேர்ந்தன; இப்படித்தான் கூவம் சீரழிய ஆரம்பித்தது”.
“மொத்தத்தில நல்ல நதியை கூவமாக்கிட்டோம் என்ற குற்ற உணர்வு அரசிடம் இருந்தது. அதுக்கப்புறம் சுத்தம் பண்ணுறோம் சுத்தம் பண்ணுறோமுன்னு அரசு செலவு செய்தது.
‘கூவம் மேம்பாட்டுத் திட்டம்Õ என்ற பெயரில் 1967&–72-ம் ஆண்டுக்கான ஐந்தாண்டு திட்ட வடிவை அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணா கொண்டுவந்தார். நதிக்கரையில் அப்போது ஆக்கிரமிப்புகளும் குறைவாக இருந்ததால் நதிநீர் தூய்மைப்படுத்தப்பட்டு படகுகளும் விடப்பட்டன. நீங்கள் பூக்காரி படத்தில் முப்பது பைசா மூனு முழம், முல்லை மல்லிகை கனகாம்பரம் என்ற பாடலில் மஞ்சுளா பாடி ஆடும் போது நேப்பியர் பாலம் எப்படி இருந்தது, அந்த சினிமாவில பாரு. இப்போ இருக்கிற கூவம் மாதிரியா இருந்தது”. காளியின் கேள்வி நியாயமாக இருந்தது.
ரகு அந்த பாடலை அசைப்போட்டு பார்க்கிறான் சென்னை என்ன அழகாக இருந்தது.
“புயல் மழை பாதிப்பு தொடர்பாக சரியான மதிப்பீடு செய்யாததால் இந்தத் திட்டம் 1976 -இல் பாதிக்கப்பட்டது. அந்த ஆண்டு ஏற்பட்ட பெரிய புயலில் கூவம் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளும் அழிந்து விட்டன. அதன்பிறகு, பலமுறை கூவம் நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டங்கள் மேற் கொள்ளப்பட்டன. ஆனால், இந்தத் திட்டங்கள் முழுமையானதாக இல்லை. அது கூவத்தில் விழுந்த கல்லாக, குறுகிய காலத்திலேயே அமுங்கிப் போனது”.
பெரும் மூச்சு விட்டான் காளி.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூவத்தில் படகு சவாரி இருந்துள்ளது. அதை ரசித்து பயணித்துள்ளனர் ஆங்கிலேயர்கள்.
“அதனால தான் சொல்லுதேன் தாமிரபரணியில் மணல் அள்ள விட்டா சிக்கலாயிரும். நம்ம நதியும் கூவம் மாதிரி ஆகி. அதுக்கப்புறம் சுத்தப்படுத்த முடியாமலேயே போயிடும். அதனால அதுக்கு இடம் கொடுக்கவே கூடாது.”
உறுதியாக சொன்னான் காளி.
“நாளைக்கு காலையில எந்த லாரி நம்ம ஊருக்குள்ள மண் அள்ள வந்தாலும் அந்த லாரியை மறிப்போம் . எந்த கொம்பன் வந்து மணல் அள்ளுறான் பாத்திருவோம்”.
ரகு வீர வசனம் செய்து விட்டு சென்றான்.
மூன்று பேரும் தூங்காமல் விழித்து இருந்தனர்.
மறுநாள் விடியல் மிக மோசமாக விடிந்தது.
(நதியின் தூய்மையை நாடிச் செல்வோம்)


