ஸ்ரீவைகுண்டம் அருகே மருதூர் மேலக்காலில் சிறப்பு தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் மருதூர் மேலக்காலில் சிறப்பு தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், இன்று (23.09.2023) துவக்கி வைத்து தெரிவித்ததாவது: மருதூர் மேலக்கால் தாமிரபரணி ஆற்றுப்பாசனத் திட்டத்தின் கீழ் பாசன வசதி பெறும் கால்வாய் ஆகும். இதன் நீளம் மருதூர் அணைகட்டிலிருந்து கிளாக்குளம் வரை சுமார் 17.5 கி.மீ. தூரம் ஆகும்.
இதில் 29 நேரடி மதகுகள் மற்றும் 16 குளங்கள் மூலம் 12762 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மருதூர் மேலக்கால் 17.5 கி.மீ. நீளத்திற்கு பயணிக்க வேண்டியிருப்பதாலும், பிறகு வெள்ளுர், தென்கரை, நெச்சிகுளம், கீழப்புதுக்குளம், முதலைமொழி, வெள்ளரிக்காயூரணி வரை கடை மடை பகுதிகளுக்கு நீர்ப்பாசனம் செய்வதில் சிரமம் உள்ளது. எனவே, தற்போது மருதூர் மேலக்கால் முழுவதும் அமலைச்செடிகள் அதிகமாக உள்ளதால் கால்வாய் தூர்ந்துள்ளது.
மருதூர் அணைக்கட்டு முதல் வசவப்புரம் வரை 5.5 கி.மீ. செல்கிறது. இந்த பகுதிகளில் அமலைச்செடிகள் அதிகமாக உள்ளதாலும் சிறப்பு தூர்வாரும் பணிக்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு தூர்வாரும் பணியை முடிக்கும்பட்சத்தில் மருதூர் மேலக்கால் வாய்காலின் கீழ் உள்ள 12762 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்தார்.
நிகழ்வில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


