தருவை கிராமத்தில் நாங்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் மண்டபத்தினை தேடிச்சென்ற போது பல்வேறு அற்புத தகவல்களை கண்டோம். அதைப்பற்றி இவ்விடத்தில் பதிவிட வேண்டும்.
தாமிரபரணி ஆற்றில் பச்சையாறு சேரும் இடத்தில் யாரும் சுலபமாக செல்ல இயலாது. இந்த இடத்தில் புகைப்படம் எடுக்கவே யாரும் செல்ல இயலாது. இந்த இடத்துக்கு மிகவும் கஷ்டப்பட்டு எனது சிஷ்யன் மரத்தின் மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்துக் கொடுத்தான். இந்த தகவலை நான் ஏற்கனவே உங்களிடம் கூறியுள்ளேன்.
பெரும்பாலுமே தாமிர பரணியில் கடனா நதி சேரும் இடத்தினை திருப்புடை மருதூரில் மிகச் சுலபமாக கண்டு விடலாம். அதுபோலவே, சிற்றாறு சங்கமம் குப்பக்குறிச்சியில் இருந்து பார்த்தால் வெளியே தெரிந்து விடும். நாமும் கண் கூட பார்த்து விடலாம். ஆனால் பச்சையாறு சங்கமம் தான் வெளியே தெரியாமல் ஓடுகிறது. இதை பார்க்கத்தான் நாம் மிகவும் கஷ்டப்பட்டு வயல் வரப்பு வழியாக நடந்து ஆற்றங்கரைக்கு சென்றோம். அங்கே சங்கமத்தினை கண்டு களித்தோம்.
அதோடு மட்டுமல்லாமல் அங்கே பல ஊருக்கு தண்ணீர் தரும் உறை கிணறு போடப்பட்டிருப் பதையும் கண்டோம். குறிப்பாக மேலப் பாளையம் தாமிரபரணி ஆற்றங் கரையில் தான் உள்ளது. அருகில் தான் தாமிரபரணி ஓடுகிறது. ஆனால் இந்த ஊருக்கு தருவை ஆற்றுக்குள் இருந்து குடிதண்ணீர் மற்ற இடத்துக்க எடுத்து வரப் படுகிறது என்றால் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.
இதற்காக ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட உறைகிணறுகளை பார்வையிட்டோம். தாமிரபரணி ஆற்றில் பல காலத்தில் நடந்த வெள்ளத்திலும் ஆற்றுக்குள் இந்த உறை கிணறு தாக்குப் பிடித்துக்கொண்டு நிற்கிறது.
இங்கு மேலப்பாளையத்துக்கு 2 உறை கிணறும், தருவைக்கு 1 கிணறும், முன்னீர்பள்ளத்துக்கு 1 கிணறும், பொன்னங்குடிக்கு 1 கிணறும் அமைத்து தண்ணீர் வழங்கி வருகிறார்கள். இதற்கான உறை கிணறு அமைக்கப்பட்டு பம்பு ரூம்பும் அமைக்கப்பட்டுள்ளது
இந்த இடத்துக்கு செல்லும் போது நாங்கள் பம்பு ஆபரேட்டர் சொர்ண கிளி அவர்களை பார்த்து பேசினோம். அவர் எங்களிடம் பல தகவலை தந்தார்.
ஆற்று வெள்ளம் வந்த போது( டிசம்பர் 6, 2023) இந்த பம்பு ரூம் முழுவதும் மூழ்கி விட்டது. அந்த சமயத்தில் பம்பு முழுவதும் சேதமடைந்து விட்டது. தற்போது பழுது பார்த்து மோட்டார் ஓடிக் கொண்டிருக்கிறது. என்று அவர் கூறினார்.
அதோடு மட்டுமல்லாமல் இங்கு 24 மணி நேரமும் மோட்டார் ஓட வழி வகைசெய்யப்பட்டுள்ளது. இங்கு மேலப்பாளையத்தில் ஆமின் புரம், மேலச் சந்தை, சேவியர் காலனி ஆகிய இடங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
தருவையில் 6 கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அடை மிதிப்பான்குளம், கண்டித்தான் குளம், ஆலங்குளம் உள்பட பல கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்று கூறினார்.
பெரும்பாலுமே சாலை வசதி உள்ள இடத்தில் சாலைக்கு ஓரத்தில் பைப் லைன், மற்றும் மின் கம்பம் அமைத்து குடிதண்ணீர் வசதி கொடுப்பது இயல்பு. ஆனால் தருவை கிராமத்தில் வரப்பு வழியாகத்தான் இந்த இடத்துக்கு வரவேண்டும். அப்படி இருக்கும். இந்த இடத்தில் பைப் லைன் அமைத்து மின்சாரம் கொடுத்து தண்ணீரை கிராமங்களுக்கு அனுப்பு கிறார்கள் என்றால் தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியத்தினை பாராட்டியே தீர வேண்டும்.
முன்னொரு காலத்தில் தருவை தாமிரபரணி ஆற்று வரை சாலை வசதி இருந்தது என்றும் தற்போது அந்த வசதி இல்லை என்றும் இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். பச்சையாற்று கரை வழியாக பாதை அமைத்தால் கூட இவ்விடத்திற்கு வர உதவியாக இருக்கும். அதே நேரம் விவசாயிகள் தங்களது இடுபொருள்களை கொண்டு வரவும், விளை பொருள் களை கொண்டு செல்லவும் இலகுவாக இருக்கும்.
விவசாய தொழிலாளர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள் என்பதை அங்கு வேலை செய்யும் மக்களை வைத்து கண்டு பிடித்து விடலாம். பல வயல்களில் களை பறிக்க அந்தந்த உரிமையாளர்களே தனியாக இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந் தார்கள். இதில் பெரும்பாலானவர்கள் வயதான வர்கள் தான்.
இளைஞர்கள் விவசாயத்தில் தற்போது ஈடுபட ஆர்வம் காட்டு வதில்லை. இதனால் விவசாயத்தில் நாட்டம் குறைந்து வருகிறது. ஆனாலும் அரசு அவர்களுக்கு தேவையான நவீன இயந்திரங்களை அறிமுக படுத்தி வருகிறது. ஆனாலும் அந்த இயந்திரங்களை வயற் வெளிகளுக்குள் கொண்டு செல்ல சாலை வசதி தேவைத்தான். எனவே பச்சையாற்றின் இரு கரைகளையும் மேம்படுத்தி சீர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வசதி பிற்காலத்தில் விவாசாய மக்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
பச்சையாற்றை இந்த ஊர் மக்கள் ஆலங்கால் என்றே கூறுகிறார்கள். அதைப்பற்றியும் அலசி ஆராய வேண்டும்.
இவ்விடத்தில் சுடலை கோயில் ஒன்றை பார்த்தோம். அதைப்பற்றி பம்பு ஆபரேட்டர் சொர்ணகிளி அண்ணா அவர்களிடம் கேட்டோம்.
அந்த கோயிலை பற்றி அவர் எங்களிடம் கூறியதை, உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த சுடலைக்கு பெயர் காக்க நல்லூர் சுடலை. இந்த கோயில் தாமிரபரணி ஆற்றங்கரைக்கும், பச்சையாற்றங் கரைக்கும் இடையில் உள்ளது. இந்தகோயில் ஆதி திராவிடர் மக்களுக்கு பாத்தியப்பட்டது. ஒரு காலத்தில் இந்த கோயில் மிகவும் பிரமாண்டமாக இருந்துள்ளது. இங்கு 21 தெய்வங்களை பூடம் அமைத்து வணங்கி வந்துள்ளனர்.
பிற்காலத்தில் இந்த கோயிலை தருவை ஊருக்குள் பிடிமண் எடுத்து கொண்டு வந்து விட்டனர். இந்த சமயத்தில் 8 பூடத்தினை மட்டும் கொண்டு வந்து பிரதிட்சை செய்துள்ளனர். இங்கு சுடலை , முண்டன், பேச்சி, சிவணைந்தபெருமாள் உள்படதெய்வங்கள் வணங்கப்பட்டு வருகிறது. இக்கோயில் இரண்டு நேரத்து கோயில் கொடையாக கொண்டாடப்படுகிறது. இங்கு வில்லிசை , நையாண்டி மேளம் முழங்கி கோயில் திருவிழா கொண்டாடப்படுகிறது. இக்கோயிலை பொறுத்தவரை வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக போற்றப்படுகிறது. இக்கோயிலில் முண்டன் சாமி ஆடுபவரும், சுடலைமாடன் சுவாமி ஆடுபவரும் வேட்டைக்கு செல்வார்கள். வேட்டை என்பது சாதாரணமான தூரம் கிடையாது. சுமார் 5 கிலோ மீட்டர் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காக்கநல்லூர் சுடலை கோயிலுக்கு சென்று அங்கு படப்பு போட்டு வணங்கி விட்டு, மீண்டும் திரும்பி கோயிலுக்கு வருவார்கள். சுமார் 1 மணி நேரமாக காட்டுக்குள் சென்று வரும் சுவாமியிடன் அருள் ஆசி வாங்க இங்கே மக்கள் காத்து கிடப்பார்கள்.
இங்கு கோயில் கொடை விழா வருடந்தோறும் வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும். ஊருக்குள் இந்த கோயில் தருவை மேட்டில் இருந்து கீழே இறங்கும் இடத்தில் தருவை ரைஸ்மில் எதிரே உள்ளது.
இந்த கோயில் வரலாற்றை கேட்டு விட்டு, நாங்கள் பிச்சு மணி அய்யா வீட்டுக்கு சென்றோம். அவர் வீட்டுக்கு சென்றவுடன் மிகவும் பழமையான ஒரு கிராமத்தில் இருப்பதை உணர்ந்தோம். ஆம். அவர்கள் தங்கள் வீட்டில் மாடு வளர்த்து வந்தார்கள். அவர் துணைவியார் எங்களுக்கு அன்றே கரந்த மாட்டுப்பாலில் இருந்து அருமையான காப்பி போட்டு தந்தார்கள்.
அதை குடிக்கும்போதே நாங்கள் பழங்காலத்து கிராமத்தில் உள்ள இயற்கை உணவை சாப்பிட்ட உணர்வை பெற்றோம்.
கிராமத்து உபசரிப்பையும் அந்த சகோதரியிடம் கண்டோம். அவர் பச்சையாற்றை ஆலங்கால் என்றே அழைத்தார்கள். அவர்கள் மட்டுமல்ல தருவை கிராமத்தினை சேர்ந்த பலர் அவ்விடத்தினை ஆலங்கால் என்றே அழைக்கிறார்கள். ஆலங்கால் என்றால் எல்லா வயல்களுக்கும் ஆலத்தில் அமைந்திருக்கும் வடிகால். அப்படியென்றால் பச்சையாறு ஒரு காலத்தில் இந்த வழியாக ஓடியிருக்காது. அதன் வடிகால்தான் இந்த ஆலங்காலாக ஓடியிருக்கும். அப்படியென்றால் அந்த ஆறு எந்த வழியாக ஓடியிருக்கும் என்பதை ஆய்வு செய்தோம். எங்களுக்கு தகவல் சொல்ல கோபாலசமுத்திரம் நண்பர் நிவேக் முன் வந்தார்.
( நதி வற்றாமல் ஓடும்)