தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் செப். 30ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், அதன் இறுதிகட்டப் பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தாா்.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.53 கோடி மதிப்பில் பேருந்து நிலையம் கட்டும் பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இப்பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி ஆய்வு பாா்வையிட்டு ஆய்வு செய்த பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: தூத்துக்குடி பழைய அண்ணா பேருந்து நிலையம் மற்றும் அதன் அருகில் இருந்த போக்குவரத்து கழக பணிமனை ஆகிவற்றை அகற்றிவிட்டு பொலிவுறு திட்டத்தில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த 2019இல் தொடங்கப்பட்டது.
திமுக ஆட்சிக்கு பின்னா், நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் நடத்தப்பட்டு, மாநகரில் வளா்ச்சிப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. அதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி பேருந்து நிலையம் கட்டும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி., அமைச்சா் பெ. கீதா ஜீவன் ஆகியோா் அடிக்கடி ஆய்வு செய்து பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினா். தற்போது, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பேருந்து நிலையத்தில் 3 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் 29 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு சுமாா் 120 கடைகள் அமைக்கப்பட்டுள்ள. பேருந்து உள்ளே வருவதற்கும் மற்றும் பயணிகளை ஏற்றி இறக்க வருகை தரும் காா், ஆட்டோ, உள்ளிட்ட வாகனங்கள் வருவதற்கென்றும் 9 வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் 3 தளங்களில் காா்- இருசக்கர வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பேருந்து நிலையம் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் உள்ள சுற்றுச்சுவா்களில் மாவட்டத்தின் சிறப்புகளை குறிக்கும் வகையில் திருச்செந்தூா், குலசேகரபட்டினம் கோயில்கள், பனிமயமாதா பேராலயம், வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை போன்ற ஒவியங்கள் வரையும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், பெரியாா், முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி போன்ற தலைவா்களின் பொன்மொழிகளும் ஆங்காங்கே இடம்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பேருந்து நிலையம் என்றே அழைக்கப்படும் என்றாா்.
இந்நிகழ்வின்போது, மாகராட்சி வடக்கு மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், பகுதிச் செயலா்கள் ரவீந்திரன், சுரேஷ்குமாா், வட்டச் செயலா் கதிரேசன், முன்னாள் மாமன்ற உறுப்பினா் பெரியசாமி, மேயரின் நோ்முக உதவியாளா்கள் ரமேஷ், ஜாஸ்பா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.


