அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான சித்திரை வசந்த திருவிழா நேற்று (புதன்கிழமை) மாலை வெகுவிமர்சையாகத் தொடங்கியது.
திருவிழாவின் முதல் நாளை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம். காலை 6.00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் கால பூஜைகள் நடைபெற்றன. மதிய உச்சி கால பூஜையைத் தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தகிக்கும் கோடை வெப்பத்தைத் தணிக்கும் பொருட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பின், சுவாமி ஜெயந்திநாதருக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. மேளதாளங்கள் முழங்க, வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.
தற்போது பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், தொடர் விடுமுறை என்பதாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். நேற்று நடைபெற்ற வசந்த திருவிழாவின் முதல் நாள் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளைத் தக்காார் ரா. அருள்முருகன், இணை ஆணையர் க. ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினசரி சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.


