
16.03.2024 அன்று காலையில் நடைபயிற்சி சென்ற போது எழுத்தாளர் நாறும்பூ நாதருக்க மயக்கம் வந்துள்ளது. அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவர் இறந்துவிட்டதாக கூறினார்கள்.
ஏற்கனவே இருதய நோய் இவருக்கு உண்டு. நெல்லை புத்தக கண்காட்சியை நடத்திக் கொண்டிருக் கும் போதே அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, அங்கே சிகிச்¬ச் பெற்று வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவரது மறைவு எழுத்தாளர்கள் அனைவரையும் துக்கமடைய வைத்தது.
மூன்று நாளாக முக நூல் பக்கம் வேறு செய்திகள் எதையும் பதிவிட வில்லை. நாறும்பூநாதன் எனும் எழுத்தாளுமையின் இழப்பு நம்மைக் கொஞ்சம் நிலை தடுமாற செய்து விட்டது . நாறும்பூநாதன் அவர்களுக்கும் எனக்கும் உண்டான தொடர்பைப் பதிவிட்டு மனதைத் தேற்றிக் கொள்ளலாம் என நினைக்கிறேன். முதல் முதலில் அவரை நான் செய்துங்கநல்லூரில் நடந்த த.மு.எ.க.சங்கத்தில் கலை இரவில்தான் சந்தித்தேன். அப்போது செய்துங்கநல்லூர் கிளையின் துணைத்தலைவர். நிகழ்ச்சியை நான்தான் நடத்தினேன். அப்போது மேடையில் நாறும்பூநாதன் அவர்களைப் பேச வைக்க இயலவில்லை. ஆனாலும் அவர் சிரித்த முகத்துடன் முதல் வரிசையில் இருந்தார். கலைஞர்களின் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது. அதன் பின் திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவரைப் பார்ப்பேன். சிரித்து விட்டுச் செல்வேன். காலங்கள் கடந்தது. என் தங்கை உதவிப் பேராசிரியர் ஜோஸ்பின் பாபாவின் “அன்பே பாபா” நூல்வெளியீட்டு விழாவில் அவரை நூலைப் பெற்றுக்கொள்ள அழைத்திருந்தோம். காவ்யா பதிப்பகம் சார்பில் நடந்த அந்த விழாவில் கலந்துகொண்டார். தொடர்ந்து வருடந்தோறும் நடைபெறும் காவ்யா விழாவில் அவர் பங்கேற்பார். எங்கள் உறவு வளர்ந்தது. என்னிடம் அனைத்து நிகழ்ச்சிக்கும் வாருங்கள். ஒதுங்கி நிற்காதீர்கள். உங்கள் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பார். ஆனாலும் என்னால் முக்கிய நிகழ்ச்சியைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் பங்குபெற இயலாது. ஒரு முறை நான் தாமிரபரணி கரை தொடர்பாகக் களப்பணிக்குச் சென்ற போது என்னோடு வருகை தந்தார். எனது களப்பணியைக் கண்டு மகிழ்ந்த அவர், அதன் பிறகு நெல்லையில் அவர் நடத்தும் முக்கிய நிகழ்ச்சியில் என்னைக் கண்டிப்பாக அறிமுகப்படுத்திப் பேச வைப்பார். சென்னை வாழ் நெல்லை மக்கள் நலசங்கம் நடத்திய தினவிழா, நெல்லை அருங்காட்சியகத்தில் நடந்தது. கப்பாட்சியர் சிவசக்திவள்ளி அவர்கள் தலைமையில் சங்கத்தலைவர் சைமன், செயலாளர் சங்கர்மணி முன்னிலை நானும், நாறும்பூ நாதன் அவர்களும் நெல்லையைப் பற்றிப் பேசினோம். அதன் பின் பல மேடையில் நானும் அவரும் இணைந்தே பயணித்தோம்.
ஒருசமயம் என்னுடைய மகன் அபிஷ்விக்னேஷ் தாமிரபரணி குறித்து ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டும் என முயற்சித்தான். அப்போது நெல்லை நாறும்பூநாதர் அய்யாவின் பேட்டி இருந்தால் நன்றாக இருக்கும் என்றான். உடனே அவர் வீட்டுக்கு அவனை அழைத்துச்சென்றேன். உடனே அவர் தாமிரபரணியை பற்றி பேட்டி கொடுத்தார். அந்த ஆவணப்படம் தாமிரபரணிக்கு நாம் தந்த பரிசு என்ற தலைப்பில் வெளிவந்தது. மிகப்பெரிய எழுத்தாளர், கேட்டவுடன் பேட்டி தந்து விட்டாரே என பூரிப்பு அடைந்தான் என் மகன். வளரும் எழுத்தாளர்களை ஆதரிப்பதில் எப்போதும் அய்யாவுக்கு நிகர் அவரே.
திருநெல்வேலி புத்தகக் கண்காட்சியில் என்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்துப் பேசவைத்தார். அதன் பின் நானும் அவரும் இணைந்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து புத்தகக் கண்காட்சி நடத்தினோம். எதிர்பாராத விதமாக நெல்லைப் புத்தகக் கண்காட்சியில் எனக்கு இரண்டு வருடம் பேச வாய்ப்பு தரவில்லை. ஆனாலும் நாங்கள் பல விசயங்களைப் பகிர்ந்து கொள்வோம். இதற்கிடையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், நெல்லை மாவட்ட ஆட்சியர், தென்காசி ஆட்சியருடன் இணைந்து பொருநை, கரிசல் இலக்கியப் புத்தகங்கள் வந்து கொண்டே இருந்தது. தூத்துக்குடி மாவட்ட நூற்றாண்டு எழுத்தாளர் சிறுகதையைத் தொகுக்கவும் முயற்சி செய்து கொண்டிருந்தோம். இதற்கிடையில் நெல்லைப் புத்தகக் கண்காட்சியைச் சிறப்பாக நடத்தினார். முதல் முதலாக ஓர் எழுத்தாளரைப் புத்தக கண்காட்சி பொறுப்பாளராகப் போட்டு மாவட்ட ஆட்சியர் மரு.கார்த்திகேயன் அவர்கள், தமிழகத்தில் மற்ற மாவட்டத்துக்கு முன்மாதிரியாகப் புத்தகத் திருவிழாவை நடத்தினார். இவரும் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தினை விட அதிகமான உள்ளூர் எழுத்தாளர்கள், அமைப்புகள் சார்பாக பட்டிமன்றம், கவியரங்கம் என மேடையேற்றி அழகு பார்த்தார். பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் அவர் வெற்றி பெற்றார். சில காரணங்களுக்காக என்னை இந்தப் புத்தகத் திருவிழாவில் மேடை ஏற்ற இயலவில்லை. ஆனாலும் நெல்லைச் சீமையின் நூற்றாண்டு கட்டுரையில் எனது கட்டுரையையும் இணைத்துப் புத்தகமாக வெளியிட்டார். அதோடு மட்டுமல்லாமல் எனது சிஷ்யன் காமராசு செல்வன் எழுதிய “மாரி எனும் மழை வெள்ளம்” நூலுக்கு அணிந்துரை எழுதித்தர கேட்டிருந்தோம். அதையும் நிறைவேற்றித் தந்தார். அநேகமாக அவர் எழுதிய இறுதி அணிந்துரை இந்த நூலுக்காகத்தான் இருக்கும் என எண்ணுகிறேன்.
ஓர் எழுத்தாளன், அவர் நடத்தும் நிகழ்ச்சியில் உடல் நிலை சரியின்றி மருத்துவமனையில் அனுமதி பெற்றதோடு, நிச்சயம் மீண்டு வருவார் என அனைவரும் நினைத்திருந்த வேளையில், அவர் உடல் இந்த மண்ணை விட்டுப் பிரிந்து விட்டது. ஆனாலும் அவருக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் முழுவதும் இருந்து எழுத்தாளர் குவிந்த வண்ணம் இருந்தனர். மூன்று மாவட்ட ஆட்சித்தலைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நானும் என் மகன் அபிஷ்விக்னேஷ் உடன் சென்று அஞ்சலி செலுத்தினேன்.
19 ந்தேதி அவரது நல்லடக்கம் வி.எம். சத்திரம் மின்மயனத்தில் நடந்தது. அதற்கு முன்பு இரங்கல் கூட்டம் அவர் வீட்டின் முன்பு நடந்தது. மிகப்பெரிய ஆளுமைகள் அந்தக் கூட்டத்தில் பேசினர். மாயானம் வரைக்கும் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றது. நெல்லையில் மிகப்பெரிய தலைவனாக ஒரு எழுத்தாளனை கௌரவப்படுத்தியிருக்கிறார்கள் என்றால் அது நாறும்பூநாதன் அவர்களுக்கு மட்டும்தான். கோவில்பட்டி, தென்காசியில் அவருக்கு இரங்கல் கூட்டம் நடந்து விட்டது. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இவருக்கு இரங்கல் கூட்டம் நிச்சயம் நடைபெறும். அவர் நினைவு, இந்த உலகம் உள்ளவரை மறையாது. எப்போதும் எங்கள் மனதில் இருப்பீர்கள் அய்யா.
–
( நதி வற்றாமல் ஓடும்)