தூத்துக்குடி சிவன் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்த சஷ்டி விழா, இன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்த சஷ்டி திருவிழா ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி மகமை பரிபலான சங்கம் (கட்டளை) சார்பில் 131ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான திருவிழா, இன்று (அக்.22ம் தேதி) யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று இரவு சுப்பிரமணிய சுவாமி வீதியுலா நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 27-ஆம் தேதி அன்று நடைபெறும். கந்த சஷ்டி விழா ஏற்பாடுகளை ஸ்ரீசுப்பிரமணியசுவாமி மகமை பரிபலான சங்கத்தின் தலைவர் பிரமநாயகம், செயலாளர் எம்.எஸ்.எஸ். கந்தப்பன், துணைத் தலைவர் ராமலிங்கம், உதவிச் செயலாளர் தியாகராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


