தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.1,04,473 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று (21.10.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 462 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தேசிய அறக்கட்டளை உள்ளுர் குழுவின் மூலம் 7 நபர்களுக்கு பாதுகாவலர் நியமனசான்றினையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.49,600/- மதிப்பீட்டில் செயற்கைகாலினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.26,705/- மதிப்பீட்டில் விலையில்லா தேய்ப்புப் பெட்டிகளையும், 5 பயனாளிகளுக்கு ரூ.28,168/- மதிப்பீட்டில் மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்களையும் மேலும், தாட்கோ சார்பில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் மூலமாக வழங்கப்படும் பணியிட விபத்து மரண உதவித்தொகை ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பயனாளியிடம் வழங்கினார்.
முன்னதாக, ஆட்சியர், மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 18 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


