முன்பொரு காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் மிகவும் சிறிய அளவிலும், சரியான மேற்கூரை இல்லாமலும் இருந்தது.
கோவில் பூசாரி அங்கே உள்ள செல்வந்தர் ஒருவரிடம் சென்று கோவில் சீரமைக்க உதவி செய்யுமாறு கோரிக்கை வைக்கிறார்.
அந்த செல்வந்தரோ இந்த தடவை எனது தோட்டத்தில் விளைச்சல் செழித்து அதிக லாபம் எனக்கு கிடைத்தால் கோவில் திருப்பணி செய்ய முழு உதவியும் செய்கிறேன் என்று பூசாரியிடம் தெரிவிக்கிறார்.
அதே போலவே முத்தாரம்மனின் அருளால் வழக்கத்தை விட அதிகமான லாபத்தை பெறுகிறார் செல்வந்தர்.
பூசாரியிடம் கொடுத்த வாக்கின் படி, கோவில் சீரமைப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கிறார் செல்வந்தர்.
பின்னர் ஒருநாள் செவ்வாய் கிழமை சாமி கும்பிடுவதற்காக செல்வந்தர் கோவிலுக்கு சென்றிருக்கிறார்.
பூஜை நடைபெற்று கொண்டிருந்த வேலையில் ஊசி, பாசி விற்கும் குறவர் இன பெண் ஒருவர் சாமி கும்பிடுவதற்காக கோவில் உள்ளே வருவதை கண்ட செல்வந்தர் அந்த பெண்ணை கோவில் உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்துகிறார்.
இதை கண்ட பூசாரி இதெல்லாம் தவறு என்றும், அன்னை சன்னதியில் வழிபட அனைவருக்கும் உரிமை உண்டு எனவும் செல்வந்தரிடம் கூறுகிறார்.
ஆனால் செல்வந்தர் அதை பொருட்படுத்தாமல் அந்த பெண்ணை வெளியே செல்லும்படி கட்டளையிட்டும், ஒருவேளை நீ சாமி கும்பிட நினைத்தாலும் நான் இல்லாத நேரத்தில் வந்து வெளியே நின்று கும்பிட்டு செல் என அந்த குறத்தி பெண்ணை கண்டித்து அனுப்பிவிடுகிறார்.
பின்னர் சில நாட்கள் கழித்து செல்வந்தர் கை கால்கள் எல்லாம் வீக்கம் அடைந்து நடக்க முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகிறார். எல்லா விதமான வைத்தியங்கள் பார்த்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை.
செல்வந்தர் கனவில் முத்தாரம்மன் தோன்றி, என் சன்னதிக்கு என்னை வணங்க வந்த பெண்ணை ஏற்றதாழ்வு பேசி வெளியில் அனுப்பிய குற்றத்திற்காகவே உனக்கு இந்த தண்டனை என்று கூறி ,
இதிலிருந்து மீண்டு வரவேண்டும் என்றால் நீ உன் அதிகாரம், ஆணவம் அனைத்தையும் விட்டு,விட்டு ஊசி பாசி விற்கும் குறவன் வேடம் அணிந்து வீடு வீடாக சென்று காணிக்கை பெற்று என் சன்னதிக்கு வா… உன் பிணியை போக்குகிறேன் என்று கூறி விட்டு முத்தாரம்மன் மறைந்து விடுவதாக கூறப்படுகிறது.
அம்மன் கூறியதை போன்றே பெரும் செல்வந்தரான அவர் தன் அடையாளத்தை உரு மாற்றி ,குறவன் வேடம் அணிந்து, நடக்க முடியாமல் மெது மெதுவாக சென்று வீடுகள் தோறும் காணிக்கை பெற்று முத்தாரம்மன் சன்னதிக்கு வந்து சேர்ந்தார்.
பெற்ற காணிக்கைகளை கோவில் உண்டியலில் போட்டு விட்டு, தான் குறத்தி பெண்ணிடம் நடந்து கொண்ட தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு அம்மனை தரிசனம் செய்தார்.
அங்கே மரத்தில் இருந்து ஓடிவந்த குரங்கு ஒன்று ஒரு வாழை பழத்தை செல்வந்தர் கையில் போட்டு விட்டு சென்றது. அதை சாப்பிட்டதும் செல்வந்தருக்கு ஏற்பட்ட நோய் குணமாகியிருக்கிறது.
முத்தாரம்மன் நடத்திய இந்த திருவிளையாடல் காட்டுத்தீ போல் ஒவ்வொரு பகுதியிலும் பரவ ஆரம்பித்தது.
முத்தாரம்மனுக்கு மாலை அணிந்து, விரதம் இருந்து வேடம் அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை பெற்று குலசை முத்தாரம்மன் சன்னதிக்கு சென்று வழிபட்டால் நிச்சயம் வாழ்வில் ஏற்றம் கிடைக்கும் என நம்பப்பட்டது.
அன்று முதல் இன்று வரை இந்த வேடம் அணிந்து நேர்த்தி கடன் செலுத்தும் வழக்கம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அனைத்து கடவுள்களின் வேடங்களை பக்தர்கள் அணிந்தாலும், குறவன் குறத்தி வேடங்களை அணியும் பக்தர்களை மட்டுமே தசரா வேடம் என்று நாம் இன்றும் அழைப்பதுண்டு.
ஒருவன் புகழிலும்,செல்வாக்கிலும் எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும் வேடம் அணிதல் மூலமும், வீடு வீடாக சென்று காணிக்கை பெறுவதன் மூலமாகவும் அவனின் தலைக்கணம் மற்றும் ஆணவம் தலைத்தோங்காமல் தடுக்க செய்யப்படுவதே தசரா விழாவின் தனிசிறப்பு.
தன்னை வேண்டி வரும் பக்தர்களின் வாழ்வுநிலை நிச்சயம் உயரும் என்கிறாள் அன்னை முத்தாரம்மன்.
உலகாளும் அன்னை ஸ்ரீ முத்தாரம்மன் அருளால் அனைத்து மக்களின் வாழ்க்கை நிலையும் ஏற்றம் அடையட்டும்.
ஓம் காளி!
ஜெய் காளி!!


