வல்லநாடு சிவன் கோவில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் .வல்லநாடு அக்.23- வல்லநாடு சிவன் கோவில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் நிகழ்ந்தது.வல்லநாட்டில் மிகவும் பழமையான சிவன் கோவில் உள்ளது. சுயம்புலிங்க மூர்த்தியாக எழுந்தருளியுள்ள இந்தக் கோவில் அருள் தரும் ஆவுடை அம்பாள் சமேத அருள்மிகு திருமூலநாதர் திருக்கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது. கி.பி 1265 ம் ஆண்டு இரண்டாம் சடையவர்ம வீரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கல்வெட்டில் கூறப்படுகிறது. இந்தக் கோவில் மூலவர் மீது ஆண்டு தோறும் குறிப்பிட்ட நாட்களில் சூரிய ஒளி விழும் வகையில் பாண்டியர் காலக் ,கட்டடக்கலையின் தொழில்நுட்பம் ஆச்சரியப்படும் வகையில் அமைந்துள்ளது .. சூரியனுடைய நகர்வின் அடிப்படையில், சூரியனைச் சுற்றிய பூமியின் சுழற்சியின் அடிப்படையில் இயற்கையாக அமையும் காலங்களை உத்ராயண, தெட்சிணாயன புண்ணிய காலங்களாக வான சாஸ்திரம் கூறுகிறது. உத்ராயண புண்ணிய காலத்தில் மார்ச் 21,22, 23 தேதிகளிலும் தெட்சிணாயன புண்ணிய காலத்தில் செப்டம்பர் 21,22, 23 தேதிகளிலும் சூரிய ஒளி நேரடியாக இந்தக் கோவில் மூலவர் மீது விழும் அதிசயம் ஆண்டு தோறும் நடைபெறும்.
அதன்படி இந்த அற்புத தரிசனத்தைக் காண நேற்று அதிகாலை யில் சிவபக்தர்கள் வல்லநாடு சிவன் கோவிலில் திரளாகக் கூடினர். சரியாகக் காலை 6.13க்குச் சூரிய ஒளிக்கதிர்கள் கிழக்கு வானில் தோன்றி மெல்ல மெல்ல நகர்ந்து வந்து மூலவர் அருள்மிகு திருமூலநாதர் மற்றும் அம்பாள் அருள்தரும் ஆவுடை அம்பாள் மீது பட்டொளி வீசிப் படர்ந்தது. இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்ட சிவ பக்தர்கள் ஹர ஹர மகாதேவா தென்னாடுடைய சிவனே போற்றி எனப் பக்தி கோஷ முழக்கமிட்டனர். பின்னர் அர்ச்சகர் சண்முகசுந்தர பட்டர் தலைமையில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளைத் திருமூலநாதர் பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்


