முதியோர்கள் நலம் பேண முதியோர் நல வாரியம் அமைக்குமாறு வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு மூத்த பெருமக்கள் நல இயக்கம் நிறுவனர் & முதன்மை தன்னார்வலர் ஆ. சங்கர் அனுப்பியுள்ள மனுவில், “மூத்த குடிமக்கள் வீட்டுக்கே சென்று ரேசன் பொருட்களை வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை வரவேற்கிறோம். தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் மூத்த பெருமக்கள் 11.2 சதவீதம் உள்ளனர். இது உலக அளவில் 2050 ம் ஆண்டில் 150 கோடியாக உயரும் என ஐ.நா சபை கணித்துள்ளது.
ஆகவே முதியோர்களின் நலம் பேணுவதற்காக கீழ்க்கண்ட கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலிக்க வேண்டுகிறோம். முதியோர்கள் நலம் பேண முதியோர் நல வாரியம் அமைக்குமாறு வேண்டுகிறோம். முதியோர்களின் மேம்பாட்டுக்காக பணியாற்றும் தன்னார்வலர்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் முதலமைச்சர் விருது, ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுகிறோம்.
முதுமையின் விளைவாக ஏற்படும் மறதி நோய், பக்கவாதம் மற்றும் மூட்டு நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தாலுகா அளவில் தொடர் சிகிச்சை மையங்களை தமிழக அரசு தொடங்க வேண்டுகிறோம். முதியோர் இல்லங்களின் தரத்தை நிர்ணயிக்க ஒரு குழுவை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டுகிறோம்.
முதியோர்களுக்காக நகர்ப்புறங்களில் மட்டுமில்லாமல் கிராமப் புறங்களிலும் முதியோர் இல்லங்களை அரசு ஆரம்பிக்க வேண்டுகிறோம். முதியோர்களுக்காக அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேர ஓய்வு மையங்களை (Day Care Center) அரசு ஆரம்பிக்க வேண்டுகிறோம். வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள 60 வயதைக் கடந்த அனைத்து முதியோர்களுக்கும் நிமோனியா தடுப்பூசியை போட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


