தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற உள்ளன.
இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது 2023-2024ஆம் நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி 01.08.2023 அன்றும, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி 03.08.2023 அன்றும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தூத்துக்குடி கால்டுவெல் மேனிலைப்பள்ளியில் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற உள்ளன. பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை திருநெல்வேலி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநரும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் தெரிவு செய்து அனுப்புவர்.
கல்லூரிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000- இரண்டாம் பரிசு ரூ.3000- மூன்றாம் பரிசு ரூ.2000- வழங்கப்பட உள்ளது. பள்ளிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000- இரண்டாம் பரிசு ரூ. 3000- மூன்றாம் பரிசு ரூ.2000- வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2000-வீதம் வழங்கப்பெறும் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


