தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் சங்கரலிங்கம். 50 வயதான இவர் ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல்நிலையம் அருகே உள்ள தனியார் வங்கியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் இன்று காலை வழக்கம்போல் வங்கிக்கு செல்வதற்காக தனது சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திடீரென அடித்த காற்றில் தெருவோரம் நடப்பட்டிருந்த ஒரு மின்கம்பம் சரிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து இரண்டு மின்கம்பங்கள் என மொத்தம் மூன்று மின்கம்பங்களும் ஒரு மரமும் முறிந்து விழுந்தது. இதில் ஒரு மின்கம்பம் விழுந்தபோது அதில் இருந்த மின்கம்பி சங்கலிங்கம் மேல் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேய சங்கரலிங்கம் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் அவரது உடலை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் இந்த மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளது. மேலும் மின்கம்பங்கள் நடும்போதே மின்கம்பங்கள் தரமில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பக்கவாட்டில் மின்கம்பம் சரியாமல் இருப்பதற்காக வைக்க வேண்டிய கம்பமும் வைக்காததே இந்த விபத்திற்கு காரணம் என பொதுமக்களும், உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.


