ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் மாநில அரசு சார்பில் ஆய்வு செய்து கிடைத்த பொருள்களை நெல்லையில் அமையவுள்ள பொருநை அருங்காட்சியகம் மூலமாக காட்சி படுத்த உள்ளனர். இதற்காக 36 கோடி ரூபாய் செலவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கணொளியில் அடிக்கல் நாட்டினார். இதற்கான விழா கடந்த 18 ந்தேதி நடந்தது.
இதுபோலவே மத்திய அரசு தொல்லியல் துறை மூலமாக ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி ஈடுபட்டு வருகிறது. இதற்காக இடம் தேர்வு உள்பட பணிகளை மாவட்ட நிர்வாகம் ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் தலைமையில் பொதுமக்களிடம் இலவசமாக இடத்தினை வாங்கி கொடுத்துள்ளார். அந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைத்து உலகம் முழுவதும் உள்ள ஆதிச்சநல்லூர் பொருள்களை மீட்டு வந்து இங்கு வைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் ஆதிச்சநல்லூர் ஏ, பி, சி சைட் என மூன்று இடங்களில் அகழாய்வு செய்து அந்த இடங்களில் உள்ளது உள்ள படியே சைட் மியூசியம் அமைக்கும் பணியும் உலக தரத்தில் நடைபெறவுள்ளது. இந்த பணியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன் அவர்கள் வருகிற வாரம் அடிக்கல் நாட்ட உள்ளார்கள்.
இதற்கிடையில் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்காக ஆதிச்சநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள திருக்களூர், அகரம், கொங்கராயகுறிச்சி, கருங்குளம் ஆகிய 5 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று ஒன்றிய தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
இதை யடுத்து வாழ்விடம் பகுதிகளை கண்டறிவதற்காக திருக்களூரில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்த அகழாய்வு பணியில் தற்போது வரை ஏராளமான தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக இங்கு சுடப்படாத மண் செங்கல், நான்கு தரைத்தளங்கள், சுடுமண் குழாய்கள், அடுப்பு, பானை ஓடுகள், பல வண்ணங்கள் கொண்ட பாசிகள், உடைந்த வளையல்கள், இரும்பு பொருட்கள், செம்பு காசுகள் மற்றும் சுடுமண் உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அகழாய்வு பணியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் பார்வையிட்டார்.
அதன் பின் அங்கு கிடைத்த பொருள்களை கண்காட்சிக்கு வைத்திருந்தனர். அதையும் அவர் பார்வையிட்டார். இந்த இடத்தில் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னால் எழுப்பப்பட்ட ஹரப்பா காலத்துக்கு இணையான மண் செங்களால் எழுப்பப்பட்ட அகலமான சுவரை பார்வையிட்டார். மேலும் ஆயிரம் வருடத்திற்கு முற்பட்ட குடியிருப்பு, 2500 வருடத்துக்கு முற்பட்ட குடியிருப்பு, சங்க கால -குடியிருப்பு, ஆதிச்சநல்லூர் காலத்துககு இணையான வாழ்விடம், தேரி மண் படிந்த தடயங்கள், நுண் கற்காலம் சம்பந்தப்பட்ட சுவடுகள், நம் முன்னோர்கள் நாகரீகமாக பயன்படுத்திய வடிகால்வாய், மற்றும் குடியிருப்புகள் குறித்து கிடைத்த தடயங்களை பார்வையிட்டார். அவருக்கு மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ், கள ஆய்வாளர்கள் எதீஸ்குமார், முத்துக்குமார் ஆகியோர் விளக்க மளித்தார்.
அதன்பின் அருகில் இருந்த சேர சோழ பாண்டிஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார். அந்த கல்வெட்டு பிற்காலத்தில் கோயில் திருப்பணி செய்யும் போது மாறி அமைந்த காரணத்தினால் அதை முறைப்படுத்த முடியவில்லை என்றும் அதே வேளையில் கல்வெட்டு மூலமாக திரு க்கோளூர் என்றழைக்கப்படும் தற்போது உள்ள ஊர் திருவழுதி வளநாட்டுத் திருக்கோளூர், திருக்கோளூரான சிந்தாமணிநல்லூர், திருக்கோளூரான உலக சிந்தாமணிபுரம் என்றழைக்கப்பட்டடிருக்கிறது. என ஆய்வாளர்கள் விளக்கமளித்தனர். அதை ஆர்வத்துடன் கனிமொழி எம்பி பார்வையிட்டார்.
அதன்பின் ஆய்வாளர்கள் ஆதிச்சநல்லூர் அமையவுள்ள அருங்காட்சியம் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பில் அமைய உள்ள வரைபடத்தினை காட்டினர்கள்.
ஆதிச்சநல்லூரில் உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் வகையில் உலகதரத்தில் அருங்காட்சியகம் அமைய உள்ளது. இதனால் தொல்லியல் ஆர்வலர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், ஒட்டபிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா, பொறியாளர் கலை செல்வன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஏரல் தாசில்தார் கைலாசம், ஆழ்வார்திருநகரி ஒன்றிய சேர்மன் ஜனகர், திருக்கோளூர் பஞ்சாயத்து தலைவர் பிரபஞ்சன், ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர்கணேஷ், கிராம நிர்வாக அதிகாரி கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


