
குவைத் அருங்காட்சியகத்துக்குள் நுழைகிறோம். உள்ளே நுழைந்தவுடன் படகு கட்டுமானம் செய்வது போல அமைக்கப்பட்ட காட்சி நம்மை வரவேற்கிறது. பாரம்பரிய மிக்க படகு குவைத் தொழிலாளிகளை மிகப்பிரமாண்டமாக காட்சி படுத்தியுள்ளனர். அதை பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தோம்.
இதற்கிடையே அங்கிருந்த ஊழியிர் கொடுத்த ஆங்கிலம் மற்றும் அரபு மொழியில் எழுதப்பட்ட நூலில் இந்த அருங்காட்சியகம் பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள் என அலசி பார்த்தேன்.
பாரம்பரிய சேகரிப்பு என்ற தலைப் பிடப்பட்ட பொருள்கள் நம்மை கவருவதாகவே இருந்தது. பாரம்பரியம் என்பது வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களின் திரண்ட விளைபொருளாக வரையறுக்கப்படுகிறது. தொல்பொருட்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் திணைக்களம் அதன் சேகரிப்பு மூலம் குவைத்தின் பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தவும், பாதுகாக்கவும் மற்றும் புதுப்பிக்கவும் தனது முயற்சிகளை குவித்துள்ளது. பாரம்பரிய வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில், பாரம்பரிய கண்காட்சி அரங்கில், பல காட்சிகள் தத்துருவப்படுத்தப்பட்டுள்ளது. இதைப்படிக்கும் போதே நமக்கு அந்த அருங்காட்சியகத்தினை பார்க்கவேண்டும் என்று ஆவல்தோன்றியது.
பாலைவனம் மற்றும் கடல் சூழல்களில் குவைத் மக்கள் பயன்படுத்திய கருவிகளை சேகரித்துள்ளார்கள். இந்த சேகரிப்புகளில் கருவிகள், இசைக்கருவிகள், தளவாடங்கள் மற்றும் நகர்ப்புற மக்கள் பயன்படுத்தும் பல பொருட்கள் அடங்கும். இந்த கண்காட்சிகள் சிலரின் மானியங்களை கொண்டும், தனியாரிடம் கொள்முதல் பெற்றும் சேகரிக்கப்பட்டன.
கி.பி.1783 இல் ரக்கா போருக்குப் பிறகு குவைத்தில் பிரபலமான இரும்பு பீரங்கியான ரபாபா, ஆண்கள் பயன்படுத்தும் பிரபலமான இசைக்கருவிகள்ஆகியவை உள்ளது. இந்த இசைக்கருவிகள் மரம், விலங்குகளின் தோல் மற்றும் குதிரைகளின் வால் ஆகியவற்றால் ஆனது.
குவைத்தில் பயன்படுத்தப்படும் பிரபலமான இசைக்கருவிகள், மரத்தோல் மற்றும் ஆட்டுத் தோலினால் செய்யப்பட்டது. (ரக்மா)
உள்நாட்டில் சாண்டோக் முபாயத் என்று அழைக்கப்படும் தனிப்பட்ட சேமிப்பு பெட்டி. நண்பகலில் தீர்க்கரேகையை தீர்மானிக்க மாலுமிகளால் பயன்படுத்தப்படும் மரம் மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட வழி செலுத்தல் கருவி.
உள்நாட்டில் நூல் என்று அழைக்கப்படும் தறி, செம்மறி ஆடு, ஒட்டகம் மற்றும் ஆடுகளிலிருந்து வெட்டப்பட்ட முடி மற்றும் கம்பளியிலிருந்து பாரம்பரிய நெசவுகளில் பயன்படுத் தப்படுகிறது. இவையெல்லாம் அங்கே காட்சிப்படுத்து படுத்தப்பட்டுள்ளது.
இதையெல்லாம் படித்த காரணத்தினால் அருங்காட்சியகத்தினை பார்க்க வேண்டும் என ஆர்வமாக இருந்தது. எனவே உற்சாமாக அருங்காட்சியகத்துக்குள் நுழைந்தோம்.
எங்களை முதலில் வரவேற்றது அங்கிருந்த அபூர்வ சாதனங்கள். முதலில் ஜமேயா எனப்படும் மர உருளை ஒன்று அழகாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
அதனருகே படகு கட்டுமானம் செய்யும் முற்கால குவைத்தியர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து கயிறு மூலம் கட்டப்பட்ட மரப் பெட்டி இருந்தது. இந்தப் பெட்டியை பெண்கள் மற்றும் மாலுமிகள் தங்கள் பயணத்தின் போது தங்கள் ஆடைகளை வைத்துக் கொள்ள பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்த பெட்டி அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பெட்டியை ஒரிடத்தில் வைத்து அதன் மீது நாம் உட்கார பெஞ்சுபோல பயன்படுத்தலாம்.
தொடர்ந்து புதிதாக கப்பல் கட்டும் மாடலை சிறிய அளவில் காட்சி படுத்தியிருந்தார்கள். அதன் பிறகு கப்பலில் பயன்படுத்தப்பட்ட திசைக்காட்டும் கருவி உள்பட பல்வேறு பழங்காலபொருள்களை காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
நானும் சுதாகர் சாரும் அந்த இடத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். எங்களோடு வருகை தந்த சரவணன் சாரும், காசி விஸ்வநாதன் சாரும் சில இடங்களில் எங்களோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த அருங்காட்சியகத்தினை பார்க்க கட்டணம் இல்லை. மேலும் இங்-குள்ள பொருள்களை புகைப்படம் எடுக்க எந்த எதிர்ப்பும் இல்லை. எனவே எனது போனில் நான் அங்குள்ள பொருள்களையெல்லாம் புகைப்படம் எடுத்துக்கொண்டே பயணித்தேன். இது எனக்கு ஒரு புறம் மகிழ்ச்சியை தந்தது.
நமது நாட்டில் ஆன்மிக சுற்றுலா பயணம் செய்து கோயில் கட்டுரை எழுத சென்றால் கூட பல கேள்விகள் கேட்பார்கள். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் புகைப்படம் எடுக்க கெடுபிடி உண்டு. குறிப்பாக நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் கோயிலில் உள்ள கலை சிற்பங்களான உலக தரம் வாய்ந்த கற் சிற்பங்களை புகைப்படம் எடுக்க எதிர்ப்பு கொடுப்பார்கள். புகைப்படம் எடுத்தால் , காவலாளிகள் வந்து நம்மை சண்டைபோட்டு வெளியே அனுப்பி விடுவார்கள். சில இடங்களில் நாங்கள் புகைப்படம் எடுத்த கருவியை பிடிங்கி, அந்த கருவியில் இருந்து பிலிம் ரோலை வெளியே எடுத்து அதை நாசம் பண்ணி வெளியே எரிந்து விடுவார்கள்.( ஆனால் தற்போது இந்த அடாவடி தனம் எல்லாம் குறைந்து விட்டது)
இதனால் சொந்த மண்ணில் சொந்த கோயிலில் கட்டுரை எழுத கோயில் மூலவர் மற்றும் முக்கிய சிலைகளை புகைப்படம் எடுக்க கூட, ஏதோ பொருள் திருட வந்தவர்கள் போல அரச்சகருக்கு தெரியாமல், புகைப்படம் எடுத்து பத்திரிக்கையில் வெளியிடுவோம்.
ஆனால் இங்கே உள்ள அருங்காட்சியகத்தில் அபூர்வமான பொருள்களையெல்லாம் வைத்திருக்கிறார்கள். எங்களை படம் எடுக்க வெளிநாட்டவர் என்றும் கூட அனுமதிக்கிறார்கள்.
அவர்கள் நினைப்பது எங்கள் நாட்டு பெருமைகளை வெளிநாட்டுக்கு கொண்டு சென்று காட்டுங்கள் என்பது தான். இதே போல் நமது இந்தியர்களும் செய்து, நமது கலாச்சாரத் தினை உலக அரங்கில் அரேங்கேற்றுவார்களா? என்ற எண்ணம் எனக்கு அவ்விடத்தில் இருந்த போது வந்தது. தொடர்ந்து அவ்விடத்தினை விட்டு நகர்ந்தோம்.
வரை படங்களுடன் கப்பல் கேப்டன் பயன்படுத்தும் மர அளவீட்டு கருவியை இங்கே கண்டோம்.
கப்பலில் பயன்படுத்தும், கப்பல் வேகத்தினை காட்டு கருவி மற்றும் பித்தளை மிதவையை அங்கே காணமுடிந்தது. இந்த இடத்தில் கப்பலில் பயன்படுத்தப்படும் பல்வேறு கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதையெல்லாம் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே சென்றோம்.
வர்ஜியா என்பது குவைத்தில் மிகவும் பழமையான மீன்பிடி படகுகளில் ஒன்றாகும். இந்த படகு முழுக்க முழுக்க பேரீச்சம்பழம் தண்டுகளால் கட்டப்பட்ட இரட்டை முனை படகு ஆகும். தேங்காய் நாரால் செய்யப்பட்ட கயிற்றால் ஒரு சிறிய படகை உருவாக்கியுள்ளார்கள். ஒரு வர்ஜியா அதிகபட்சமாக 4 மீட்டர் நீளத்தை கொண்டது. இது இரண்டு துடுப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. வானிலை சீராக இருக்கும் போது, ஒரு சிறிய முக்கோண பாய்மரம் படகின் நடுவில் வைக்கப்படுகிறது. இது ஒருபோதும் நீர் புகாதது. . பிடிக்கப்பட்ட மீன்கள் கடற்கரையை அடைவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு உயிருடன் இருக்க வேண்டும். ஆனால் இந்த படகில் அப்படி வைக்க இயலாது. எனவே குவைத் மீனவர்களால் வர்ஜியா இப்போது பயன்படுத்தப் படுவதில்லை. ஆனால் பாட்டீனா கடற்கரையின் ஓமானி மீனவர்களால் தற்போதும் கட்டப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் அதை ஷாஷா என்று அழைக்கிறார்கள் மற்றும் சில நேரங்களில் துணை இயந்திரத்துடன் பொருத்துகிறார்கள்.
இவ்விடத்தினை பார்க்கும்போதே மிக ஆச்சரியமாக இருந்தது. குவைத் ஈராக் போரில் மிகப்பெரிய அழிவுக்கு பிறகு மீண்டும் இந்த அருங்காட்சியகத்தினை உருவாக்கி யிருக்கிறார்கள். இந்த அருங்காட்சியகத்திலேயே இவ்வளவு பொருள்கள் இருந்தால், பழைய அருங்காட்சியகத்தில் எவ்வளவு பொருள்கள் இருந்து இருக்கும் என ஆச்சரியத்தோடு நாங்கள் மற்ற பகுதியில் உள்ள பொருள்களை பார்க்க சென்றோம்.
அடுத்த அரங்கில் நாம் ஏற்கனவே கூறிய பைலாக்கா தீவில் கிடைத்த படிமங்கள் அனைத்தையும் காட்சிப்படுத்தி வைத்திருந்தார்கள். மிகப்பிரமாண்டமாக இருந்தது.
நாம் கடந்த பகுதியில் கூறிய படியே தீவுகளில் கிடைத்த பல்வேறு பொருள்கள் இங்கே காட்சி படுத்தப்பட்டிருந்தது. அதையெல்லாம் கண்டு கொண்டே முதல் அருங்காடசி அரங்கத்தில் இருந்து வெளியே வந்தோம். இந்த பொருள்கள் எல்லாம் முதலில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்தது. பாசி போன்ற குவைத்தினர் பயன்படுத்திய அணிகலன்களும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அடுத்து குவைத் பாரம்பரிய அருங்காட்சியகத்தின் உள்ளே நுழைந்தோம்.
இந்த அருங்காட்சியகம் செல்லும் இடத்தில் ஒரு பாக்கு மரமும் மிக உயரமாக அலங்காரமாக போடப்பட்ட அலங்கார வளைவு போடப்பட்டிருந்தது. அந்த அழகான இடத்தினை பார்த்தப்படியே இரண்டாவது உள்ள பாரம்பரிய அருங்காட்சியகத்துக்குள் நுழைந்தோம்.
இங்கே குவைத்தியர் வாழ்வியல் மிகவும் அழகாக காட்சிப் படுத்தப் பட்டிருந்தது. பாலைவனத்துக்கு அடையாளமாக உள்ள ஒட்டகம் படுத்துக்கிடக்க அருகில் அரபு வியாபாரிகள் வியாபாரம் செய்வது போன்ற காட்சி அமைப்புடன் இந்த அருங்காட்சியகம் துவங்கியது. இங்கே பெண்கள் பல பொருள்களை வியாபாரம் செய்வது போல இருந்தது. அச்சு அசலாக இங்கே மணிதர்கள், ஒட்டகங்கள் இருப்பது போலவே காட்சிபடுத்தி இருந்தார்கள். அதைப்பார்த்தவுடன் உற்சாகம் பிறந்தது.
பஜாரில் வியாபாரிகள் அலைந்து திரிந்து பொருள்கள் சேகரிப்பது போலவும், வியாபாரிகள் பயன்படுத்திய ஒட்டகங்கள் ஆங்காங்கே நிற்பது போலவும், ஒரு குவைத்தியர் ஆடு ஒன்றை படுக்க வைத்திருப்பது போலவும் காட்சி படுத்தியிருந்தார்கள். என்னே தத்துருபம். சிறப்பாக இருந்தது.
இங்குள்ள பாத்திரக்கடை ஒன்றை மிகவும் பிரமாண்டமாக வடிமைத்து இருந்தார்கள். அங்-கு குவைத்தியர் ஒருவர் பாத்திரம் வியாபாரம் செய்துகொண்டிருந்தார். மட்பாண்ட கண்ணாடி அல்லது உலோகம் போன்ற பல்வேறு வீட்டுப் பொருட்களை விற்க, கத்திகள் மற்றும் பானைகள் என சமையலறை பொருட்கள் உட்பட பல பொருள்களை வைத்து விற்பனை செய்வது போன்ற தத்துருவமான காட்சி காட்சிப்படுத்தப்பட்டிருந்து. அதை ஆச்சரித்தோடு பார்த்தப்படியே அடுத்த இடத்துக்கு சென்றோம்.
தொடர்ந்து துப்பாக்கி கடை. இங்கு துப்பாக்கிகள் விதவிதமாக இருக்க, அருகில் ஒரு குவைத்தியர் துப்பாக்கியை பழுது பார்ப்பது போல் காட்சிப்படுத் தப்பட்டிருந்தது.
துப்பாக்கிகளை விற்பனை செய்வதற்கான உண்மையான சந்தை குவைத்தில் இருந்ததோ இல்லையோ. அனால் இங்கே துப்பாக்கியை விற்க வணிகக் கடை ஒன்று காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. பறவைகள் மற்றும் காட்டு விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கிகளை இங்கே குவைத்தியர் விற்பனை செய்வது போலவே காட்சிபடுத் தியிருந்தார்கள். அவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பாவி லிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இந்த துப்பாக்கிகளின் வெடிமருந்துகளும் ஷாட், கன், புல்லட் போன்றவை விற்கப்பட்டன. மற்றும் காற்றழுத்தத் துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் “சாட்ச் மாஸ்” எனப்படும் சிறிய ஈயத் தோட்டாக்கள். தூள் தவிர, கன்னர் சேதமடைந்த துப்பாக்கிகளையும் சரிசெய்து பரிமாறிக் கொள்கிறார் என்பது போன்று இந்த இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
தொடர்ந்து அடுத்த கடைக்கு செல்கிறோம் ஆண்கள் ஆடை விற்பனை செய்யும் கடை இங்கே காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. இதில் இரண்டு குவைத்தியர்கள் அமர்ந்து ஆண்களுக்கான ஆடைகளை, கை தையல் மூலம் தைக்கும் காட்சி காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
ஆண்களின் ஆடை. “பிஷ்ட்” என்பது பாரசீக வார்த்தையின் அர்த்தம். இது ஆண்கள் அணியும் கவுன் ஆகும். ஒட்டகம் அல்லது ஆடு முடி மற்றும் செம்மறியின் கம்பளி ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட நெசவுகளில் உருவாக்கப்பட்டது. அவர்கள் பயன்படுத்திய நூல்களைப் பொறுத்து குளிர்காலம் மற்றும் கோடை காலத்திற்கான பல்வேறு வகையான ஆடைகளை பயன்படுத்தலாம். அவையெல்லாம் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மேலங்கி இரண்டு துண்டுகள் அல்லது ஒரு துண்டால் ஆனது. மேலும் இழைகள் மற்றும் அலங்காரத்தின் தரத்திற்கு ஏற்ப மாறுபடும். இந்த வகையான கவுன் கௌரவத்துடன் தொடர்புடையது. எனவே இது திருமணம் அல்லது முறையான வருகைகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளில் அணியப்படுகிறது.
அடுத்து சூ மேக்கர் ஒருவர் அமர்ந்து குவைத்தியர் களுக்கான செருப்பை உருவாக்கும் காட்சி இங்கே காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
இங்கு அருமையான வீதி ஒன்றில் மக்கள் உலா வருவது போன்ற காட்சியை அமைத்துள்ளார்கள். இதில் முக்கிய பங்கு வகிப்பது திண்ணை. நமது ஊரில் உள்ளது போலவே மண் திண்ணை.
அதனருகே தெரு ஒன்றை பழமையின் சின்னமாக தத்துருவமாக வடிமைக்கப்பட்டிருந்தது. அதில் உள்ள தெரு வழியே குவைத்தியர்கள் ஆணும், பெண்ணுமாக நடமாடிக் கொண்டிருக்கும் படியாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இதில் சிறுவர்களையும் அழைத்துக்கொண்டு செல்கிறார்கள். வீடு வாசல், கதவு, சன்னல் என அமைக்கப்பட்டிருந்தது.
இதில் தான் திண்ணை இருந்தது.
நமது ஊரில் ஒரு காலத்தில் மிகப்பெரிய கலாச்சாரமாக திண்ணை இருந்தது. நடந்து செல்லும் பயணிகள் இங்கே அமர்ந்து ஓய்வு எடுக்கலாம். ஆனால் இப்போது திண்ணையெல்லாம் இடித்து விட்டு மாளிகை வீடுகளை நவீனமாக கட்டிவிட்டோம்.
கிராமங்களில் இருந்த குடிசை வீடுகளில் உள்ளே தாழ்வாரம் என்ற ஒன்று உண்டு. அந்த தாழ்வாரத்தில் மழை நேரத்தில் வீட்டுக்குள் விழும் தண்ணீரை எல்லாம் சேகரித்து வைத்து இருப்பார்கள். தனக்கு இறைவன் கொடுத்த தண்ணீர் எனது வீட்டுக்கே என தனது வீட்டில் உள்ளே அதை நிலத்தடி நீராக சேகரிப்பார்கள் நமது முன்னோர்கள்.
இன்றோ நவீனம் என்ற நிலையில் திண்ணையை இடித்து விட்டோம். வழிபோக்கர்கள் அமர இயலாது. வீட்டு கூரையில் விழும் தண்ணீரை தெருவில் விட்டு, அதை சாக்கடையாக்கி, அருகில் உள்ள நீர் நிலைகளில் விடுகிறோம். இதனால் கொசு உருவாகி, மக்களுக்கு நோயும் உருவாகிறது. பழமையை மறந்த காரணத்தினால் எல்லாமே மாறிவிட்டது. நிலத்தடி நீர் வற்றி விட்டது. எங்கோ இருந்து குழாய் மூலம் வரும் தண்ணீருக்காக காத்துக் கிடக்கிறோம்.
குவைத்திலும் நமது ஊர் போலவே வீடு அமைப்புகள் இருந்து இருக்க வேண்டும். அதைத்தான் தற்போது இங்குள்ள திண்ணை காட்டுகிறது.
எனக்கு ஒரே சந்தோசம். ஓடிப்போய் அந்த திண்ணையில் அமர்ந்து கொண்டேன். உற்சாகமாக போஸ் கொடுத்தேன் டாக்டர் சுதாகர் அதை புகைப்படமாக எடுத்தார்.
அந்த இடத்தினை விட்டு அகர மனமில்லை. ஆனாலும் குறிப்பிட்ட நேரத்தில் அருங்காட்சிகத்தினை அடைத்து விடுவார்கள். அதற்குள் எல்லா இடத்தினையும் பார்க்க வேண்டும். எனவே அங்கிருந்து கிளம்பினோம்.
அடுத்து மூலிகை வியாபாரம் செய்யும் கடை. நிறைய மூலிகைகளை கூடைகளில் நிரப்பி வைத்து குவைத்தியர் ஒருவர் வியாபாரம் செய்வது போலவே காட்சிபடுத்தியிருந்தார்கள். விதவிதமான பொருள்களை வியாபாரம் செய்கிறார்கள். பேரீச்சம் பழம் போன்ற குவைத் நாட்டில் கிடைக்கும் பொருள்கள், பாலை வனத்தில் விளையும் உணவு பொருள்களை விதவிதமாக வைத்து வியாபாரம் செய்யும் குவைத்தியர்களை காட்சி படுத்தியிருக்கிறார்கள்.
அடுத்த படியாக குவைத்தியர்கள் தினசரி பயன்படுத்தும் உடைகளை உருவாக்கும் வயதான குவைத்தியர் அமர்ந்த ஆடை செய்யும் காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
“கபாஸ்” குவைத்தின் பழமையான சந்தைக் கடைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது குவைத்திற்கு வருபவர்களுக்கு ரொட்டி வழங்குவதற்காக கட்டப்பட்டது. நம்மூரில் உள்ள பேக்கரி போன்றது. வணிகர்கள் மற்றும் குடிமக்களுக்காக சந்தையில் உணவு உண்பதற்காக கட்டப்பட்டது. சந்தைக்குச் செல்லும் மக்களுக்காக ரொட்டி தயாரிக்கும் சுமார் பத்து பேக்கரிகள் இருந்தன. பேக்கரிகள் அதிகாலை முதல் மாலை தொழுகை முடியும் வரை இயங்கின. எனவே, பலர் உணவுக்கு ரொட்டி வாங்க சந்தைக்கு செல்வார்கள். அந்த கலாச்சாரத்தினை இங்கே காட்சிப்படுத்தியுள்ளார்கள்.
அடுத்து கற்பித்தலுக்கான இடம். அதை குத்தாப் என்கிறார்கள்.
“குத்தாப்”, ஒரு சிறிய தொடக்கப் பள்ளி, ஆசிரியர் “முல்லா” வீட்டில் ஒரு பகுதியை ஆக்கிரமித்து குத்தாப் அறை கட்டப்பட்டுள்ளது. ஆண்களுக்கான “முதவ்வா” மற்றும் பெண்களுக்கான “முதவ்வா” என இரு பிரிவு இங்கே உள்ளது. இங்குள்ள கல்வித் திட்டத்தில் குர்ஆன் ஓதுதல், தொடக்க வாசிப்பு மற்றும் எழுதுதல் ஆகியவை அடங்கும். மாணவர்கள் குர்ஆனை முடித்தவுடன், குடும்பங்கள் “கத்மா” என்ற சிறப்பு விழாவை கொண்டாடுகிறார்கள். 1912 இல் குவைத்தில் “அல் முபாரக்கய்யா” என்ற முதல் பள்ளி திறக்கப்படும் வரை “குத்தாப்” நீடித்தது.
அந்த குத்தாப்பில் ஆசிரியர் குழந்தைகளுக்கு கற்று கொடுப்பது போலவே காட்சிபடுத்தியிருந்தார்கள்.
அடுத்து நாம் நேற்று குவைத்தியர் ஒருவர் வீட்டில் உணவு அருந்தினோமோ. அதை போன்ற வரவேற்பு அறையான திவானியா என்றோமே. நேற்று பார்த்த திவானியா மிகப் பிரமாண்டமாக நவீனமாக இருந்தது. ஆனால் அருங்காட்சியகத்தில் மிகவும் பழமையான திவானியா ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
“திவானியா” என்பது முக்கிய வரவேற்பு அறை. நேற்று குவைத்தியர் நம்மிடம் பேசும் போது நாங்கள் வழி வழியாக விருந்து கொடுக்கிறோம் என பழமையான பொருள்களை காட்டினார் அல்லவா? அதுபோலவே இங்கு திவானியா பழமை மாறாமல் காட்சிபடுத்தப்பட்டிருந்தது.
குவைத் வீட்டில் இது ஒரு தனித்துவமான அடையாளமாகும். பகல் அல்லது இரவு அல்லது விசேஷ நிகழ்வுகளுக்கு மட்டுமே இந்த திவானியா பயன்படுத்துப்படுகிறது.
ஆண்கள் சந்திக்க தனி நுழைவாயில் இங்குண்டு.
அடுத்து குவைத்தில் உள்ள பராம்பரியம் மிக்க மற்றுமொரு காட்சியை நாம் கண்டோம்.
(குவைத் பயணம் தொடரும்)


