மாநில உரிமைகளை பறிப்பதிலேயே மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று கனிமொழி எம்பி குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறக்கட்டளை மூலம் ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல்குளத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.
விழாவில், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் சலி எஸ். நாயர் தலைமை தாங்கினார். அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர முன்னிலை வகித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய கனிமொழி எம்பி, தமிழகம் தொடர்ந்து மாநில உரிமைகளுக்காக பேரறிஞர் அண்ணா, கலைஞர், இப்போது முதல்வர் என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு இயக்கமாக இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு மசோதாவின் வழியாகவும், எந்தெந்த வழியில் வாய்ப்புகள் கிடைக்கிறதோ அந்தந்த வழிகளில் மாநில உரிமைகளை பறிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர்.
மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. நமக்கு தரக்கூடிய நிதியில் எதுவும் தரப்படுவது கிடையாது. மாநிலங்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகள் இப்போது மெட்ரோ திட்டம் மதுரை கோவைக்கு கேட்கப்பட்டுள்ளது அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி பல வகைகளில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. இதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். போராடுவோம் நமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காக போராடுவோம்.
எஸ்ஐஆர் என்ற ஒன்றைக் கொண்டு வந்து பிஜேபி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அங்கு இருக்கக்கூடிய வாக்காளர்களின் வாக்குரிமையை பறித்துக் கொண்டிருக்கின்றனர் இதை நாம் தெள்ளத் தெளிவாக பார்க்கப்படுகிறது. ஓர் அவசரக கதியில், வேலை செய்பவர்களுக்கும் ஒரு பெரிய சுமையாக எஸ்ஐஆர் வேலையை முடிக்கவே முடியாத நிலையை தள்ளப்படுகின்றனர்.
சென்ற முறை ஆறு மாத அவகாசத்தில் தான் எஸ்ஐஆர் செய்யப்பட்டது. தற்போது அவசரக் கதியில் எஸ்ஐஆர் செயல்படுத்த வேண்டிய அவசியமே இல்லாத காலத்தில் இதை செயல்படுத்தி மாநிலத்தின் உரிமைகளை பறிக்கவும் எதிர்காலத்தில் குடியுரிமையை கேள்விக்குறியாக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றார்.


