மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையும் காவ்யா தமிழ் வட்டமும் இணைந்து நடத்தும் நம்ம குலசாமிகள் கருத்தரங்கு 21ஆம் தேதி காலை 10 மணிக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சுந்தரனார் அரங்கில் நடைபெற்றது.
கருத்தரங்கைப் பல்கலைக்கழக தேர்வாணையர் முனைவர் உல. பாலசுப்பிரமணியம்
தலைமை தாங்கித் துவக்கி வைத்துக் கருத்தரங்க மலர் மற்றும் நூல்களை வெளியிட்டார். பேராசிரியர் சி.சுதாகர் வரவேற்றுப் பேசினார். பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் கருத்தரங்க நோக்கவுரையாற்றினார். கருத்தரங்க மலரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை உதவிப் பேராசிரியர் முருகன் பெற்றுக் கொண்டார்
இந்த நிகழ்ச்சியில் காவ்யா பதிப்பகம் நான்கு நூல்களை வெளியிட்டது. இதனில் ஒன்றான காவேரி நாவலை மேல நீலித நல்லூர் பசும்பொன் தேவர் கல்லூரி பேராசிரியர் ஹரிஹரன் பெற்றுக்கொண்டார். இந்த நூலைச் சுந்தரபாண்டியன் என்ற புனை பெயரில் காவியா சண்முகம் எழுதினார். இரண்டாவதாகப் பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியன் எழுதிய ஊர் சுற்றும் விஞ்ஞானி நூலைச் சிற்பி பாமா அவர்கள் பெற்றுக் கொண்டார். பேராசிரியர் பொ.நா.கமலா எழுதிய தொல்காப்பியம் ஓர் கலை அறிவியல் களஞ்சியம் நூலை மேட்ட மலை அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியை மகாலெட்சுமி பெற்றுக்கொண்டார். முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய இடைத் தாமிரபரணியை மேலப்பாளையம் பள்ளிகளின் தாளாளர், முஸ்லிம் கல்விச் சங்கம் செயலாளர் எல்.கே.எஸ் முகமது மீரான் பெற்றுக்கொற்கொண்டார். இந்தத் தொடக்க விழாவில் முனைவர் கோ. மதிவாணன் நன்றி கூறினார்.
நம்ம குல சாமிகள் என்ற தலைப்பில் தமிழகம் எங்கும் 200க்கு மேற்பட்ட கட்டுரைகள் பெறப்பட்டன. இதனில் 80 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனை ஒன்றிணைந்து நம்ம குல சாமி என்ற புத்தகமாகத் தொகுக்கப்பட்டது. இந்தப் புத்தகம் தென்மாவட்டங்களில் வழிபட்டு வரும் குல சாமிகளின் தொகுப்பாக அமைந்தது. இந்தக் கட்டுரைகள் இந்தக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் சுடலை முத்து நினைவு பொருநையின் செல்வன் விருது முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கும், பேராசிரியர் பொ.நா. கமலாவிற்கு இசக்கி நினைவு தொல்காப்பியச் செல்வி விருதும் வழங்கப்பட்டது. இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையைக் காவ்யா நிர்வாக இயக்குநர் முத்துலட்சுமி வழங்கினார். காவ்யா சண்முகசுந்தரம் அவர்கள் இதுவரை 1500 புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார். இவரின் இந்தப் பணியைப் பாராட்டித் தமிழக அரசு இலக்கிய மாமணி விருது வழங்கியது. இதனை முன்னிட்டும் காவ்யாவின் பவளவிழாவை முன்னிட்டும் “நம்ம குல சாமி” என்ற கருத்தரங்கை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையும் காவியாவும் இணைந்து இந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் இந்தக் கருத்தரங்கின் மொத்த செலவையும் காவ்யா சண்முகசுந்தரமே செய்தார்.
இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் முனைவர் முருகன் வரவேற்றுப் பேசினார். பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் பிரபாகர் தலைமையுரையாற்றினார். காவ்யா சண்முகசுந்தரம் ஏற்புரை வழங்கினார். தொல்லியல் துறை ஆர்.சந்தியா நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 150 மாணவ மாணவிகளும் பேராசிரியர்களும் கட்டுரை எழுதிய ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.
சரி…
இந்தக் கருத்தரங்கால் தொல்லியல் துறைக்கு என்ன லாபம்:
பல முதுகலை தொல்லியல் பட்டம் படிக்கும் மாணவ மாணவியர்கள் ஆவலுடன் கட்டுரை எழுதினார்கள்.
அதில் சில பதிப்பிற்கு ஏற்றுக் கொள்ளப் பட்டது.
ஒரு கட்டுரை எழுதிய கைக்கு ஒரு புத்தகத்தை உருவாக்குவது கடினம் இல்லை.
புத்தகம் எப்படி உருவாக்குகின்றன என்பதை மாணவ மாணவியர்களுக்கு இந்தக் கருத்தரங்கம் படம் பிடித்துக் காட்டியது.
நிறைய எழுத்தாளர்களை இந்தக் கருத்தரங்கம் மாணவர்களுக்கு அறிமுகம் செய்தது.
எழுத்துக் கலைக்குள்ள வரவேற்பையும் அவசியத்தையும் இந்தக் கருத்தரங்கம் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியது.