கண் விழித்து பார்த்த போது மாலை 5 மணி ஆகி இருந்தது. எங்களை அசோக் அய்யா அலைபேசியில் தொடர்பு கொண்டார்.
“சற்று நேரத்தில் சாமுவேல் வந்து உங்களை நாளை நடக்க இருக்கும் விழா அரங்கிற்கு அழைத்து வருவார்” என்றார்.
நாங்கள் உடனே கிளம்பி தயாரானோம்.
சாமுவேல் வர நேரமான காரணத்தினால் கீழே இறங்கி வந்தோம். அங்கிருந்து பில்டிங் வாசலுக்கு வந்த போது தான் எதிரே ஒரு அதிசயம் இருந்தது. ஆம். அங்கே ஒரு சீமைக் கருவேலமரம் இருந்தது.
இதைப் பார்த்தவுடன் முனைவர் சுதாகர் அதன் வரலாற்றை பேச ஆரம்பித்து விட்டார்.
சீமக் கருவேலம்.
சீமக் கருவேலம் ஒரு முள் மரம். இதன் அறிவியல் பெயர் ப்ரோசோபிச் சூலிஃப்லோரா (Prosopis juliflora). இதன் தாயகம் மெக்சிகோ, தெற்கு அமெரிக்க நாடுகள் மற்றும் கரிபியன் தீவுகளாகும். இந்த மரம் பாலைவனப் பகுதிகளில் வளரக்கூடியது. இந்த மரத்தைத் தென் தமிழகத்தில் சீமவுடை எனவும் அழைக்கின்றனர். இதனைக் கருவமரம், வேலி முள் எனவும் அழைக்கின்றனர்.
இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் இந்த முள் மரம் பல கடல்களைத் தாண்டி, பல எல்லைகளைத் தாண்டிப் பரவியுள்ளது.
தமிழகத்தில் இந்த மரம் நுழைந்த வரலாற்றைப் முனைவர் சுதாகர் என்னிடம் கூறினார். 1957 ஆண்டு வாக்கில் தமிழகத்தில் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கத் திட்டமிட்டனர். இதன் மூலம் ஏழை எளிய மக்களின் எளிய வாழ்க்கைக்கு உதவலாமென நினைத்தனர். பல திட்டங்களை வகுத்து வந்தனர். அப்போது தமிழக ஆட்சியாளர்கள் இலங்கை சென்றனர்?.
இலங்கையில் இந்த முள் மரம் பெருங்காடாய் வளர்ந்திருந்தது. ஆங்காங்கே ஏழை எளிய மக்கள் இந்த முள் மரத்தை வெட்டி அந்த மரக்கட்டைகளை மலையென அடுக்கி வைத்திருப்பதைக் கண்டனர்.
“இந்த மரக்கட்டைகளை வைத்து என்ன செய்வீர்கள்?” எனத் தமிழக ஆட்சியாளர்கள் இலங்கை அதிகாரிகளைக் கேட்டனர்.
“அவர்கள் இந்த மரக்கட்டைகள் வீடுகளிலும் உணவகங்களிலும் எரிக்கப் பயன்படுகிறன” என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அங்கே இந்த முள் மரத்தை வெட்டி மரக்கட்டைகளை எடுத்துக் கரி தயாரிப்பதனையும் தமிழக ஆட்சியாளர்கள் பார்த்துள்ளனர்.
உழைக்கத் தயாராக இருப்பவர்களுக்கு இந்த மரம் மிகுந்த பயனளிக்கும். ஏழை மக்கள் தங்களுக்கு வேண்டிய விறகை இந்த மரத்தை வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.
நிறைய விறகுகள் வெட்டி எடுக்க முடிந்தால் அவைகளை விற்பனை செய்து மக்கள் பிழைப்பு நடத்தலாம். பல வீட்டில் வறுமை மறையும்.
இந்த முள் மரத்தை வெட்டி விறகாக எடுத்து அதனைக் கரியாக மாற்றினால் இன்னும் கூடுதல் வருமானம் கிடைக்கும். இதனால் மக்களின் வாழ்வாதாரம் பல வழிகளில் பெருகும் எனத் திட்டமிட்டனர்.
விறகு வெட்டுபவர்கள், அதனை வண்டியில் ஏற்றுபவர்கள், வண்டிக்காரர்கள், விறகுகளைச் சுமப்பவர்கள் எனப் பல ஏழை மக்களுக்கு வேலை கிடைக்கும் எனத் திட்டமிட்டனர்.
அதற்காக இந்த முள் மரத்தின் விதைகளை இலங்கையிலிருந்து எடுத்து வந்தனர். பின்னர் அந்த விதைகளைத் தமிழகம் முழுவதும் ஹெலிகாப்டரில் வைத்து ஆங்காங்கே தூவி விட்டனர். விதை முளைத்து முள் மர செடி வேகமாகத் தமிழகத்தில் வளர்ந்தது. விரைவில் இது மரமாக வளர்ந்தது.
இந்த முள் மரம் தமிழகத்தின் நிறைய ஊர்களில் ஏழை எளியோருக்கு வாழ்வாதாரமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆயிரம் ரூபாய் பெரிதாகத் தெரிந்த காலத்தில் இந்த முள் மரக் கட்டைகளில் கரி உற்பத்தி செய்து லட்சங்களை அள்ளியவர்களும் உண்டு.
“இது என்ன மரம்?” என மக்கள் கேட்க ஆரம்பித்தனர்.
‘இது நமது ஊர் மரம் இல்லை. இது சீமையிலிருந்து (வெளிநாட்டிலிருந்து) கொண்டுவந்த மரம்” எனத் தெரிந்தவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆகவே இந்த மரத்திற்கு ‘சீமக் கருவேலம் மற்றும் சீமவுடை மரம்” எனப் பெயர் வந்தது. சுமார் நாற்பது வருடங்கள் இந்த மரம் தமிழக ஏழை எளியோருக்குப் பயனுள்ளதாக இருந்தது.
அதாவது சுமார் 2000ஆம் ஆண்டுவரை இந்த மரம் பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தது.
2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் நகரங்கள் முதல் கிராமங்கள்வரை சமையல் எரிவாயுவை வீடுகளில் பயன்படுத்த ஆரம்பித்தனர். விறகு விலை போகவில்லை.
காரணம் விறகை எரிந்து சமைக்கும்போது வரும் புகையை மக்கள் விரும்பவில்லை.
இந்த விறகு எரியும் போது வீடு புகை ஏறிக் கருப்பாக மாறுவதை மக்கள் விரும்பவில்லை.
புகையில் கண் எரியச் சமைப்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லை.
அடுப்பங்கரை சுவர்கள் அலங்கோலமாகப் புகை மண்டலமாக இருப்பது மக்களுக்குப் பிடிக்க வில்லை.?
இதனால் முள் மர விறகுகளின் விற்பனை முற்றிலும் நிரகாரிக்கப்பட்டு விட்டது.
இந்தச் சீமை முள் மரத்தை வெட்டிப் பயன்படுத்த ஆள்களில்லை. மரம் படு வேகமாக வளர்ந்து பரவ ஆரம்பித்தது. நீர் நிலைகளான குளங்கள் வாய்க்கால்கள் ஆற்றங்கரைகளின் கரைகளில் இவை வீறு கொண்டு வளர்ந்துவருகிறன.
அதனால் என்ன? வளர்ந்து போகட்டுமேயென விட முடியாது. காரணம் தமிழகத்தில் வளர்ந்துவரும் பலவகையான சிறு செடிகள் மற்றும் கொடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஏன் பல கோடி ஆண்டுகளாக இங்கு வளர்ந்து வந்த அற்புத மூலிகைச் செடிகளும் கொடிகளுக்கும் இதே நிலைதான். இதனால் நல்ல குணமுடைய, மூலிகை செடிகளும் முற்றிலும் அழிந்து போக வாய்ப்புள்ளன. உலகத்திலேயே அதிக வகை வகையான தாவரங்களைக் கொண்ட பெருமை நம் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு உண்டு.? அங்கும் இந்த முள் செடி பரவ வாய்ப்புண்டு. அதனால் பெரும் பாதிப்பு உண்டாகும். எனவே இந்த முள் மரத்தை முற்றிலும் அகற்றுவது அவசியம்.?
இந்த மரத்தைக் குவைத்தில் தண்ணீர் விட்டு வளர்க்கின்றனர். சாலை ஓரங்களில் இந்த மக்களைப் பார்க்க முடிகிறது. அதன் வேர் பகுதியில் பாத்தி கட்டி தண்ணீர் விட்ட சான்றுகளை கண்ணால் பார்க்க முடிந்தது. ஆனால் இந்த மரம் அங்கு வேகமாகவும் வளர்வதில்லை மற்றும் வேகமாகப் பரவுவதும் இல்லை. காரணம் குவைத் நாடு இருப்பதே பாலைவனத்தின் மத்தியில்தான். அதனால் பாலைவனத்தின் வறச்சியைத் நன்கு தாக்குப்பிடிக்கும் தாவர வகைகளே இங்கு உயிர்வாழ முடிகிறது.
இந்த நாட்டில் கடுமையான வறட்சியைத் தாக்குப்பிடித்து வளர்ந்த இந்த முள் மரத்தின் கீழ் கார்கள் நிற்பதையும்; மக்கள் வெயிலுக்குப் பயந்து இந்த முள் மரத்தடியில் ஒதுங்கி நிற்பதையும் பார்க்க வியப்பாக இருந்தது. இப்படி குவைத்தில் இந்த முள் மரம் அமைதியான நாய்க்குட்டி போல் நடந்து கொள்கிறது.
இதிலிருந்து புரிந்து கொள்ளுவது என்னவென்றால் இந்த முள் மரம் ஒரு பாலைவன தாவரம்.
இந்தப் பாலைவன மரம் தண்ணீர் செழிப்பு மிக்க தமிழகத்திற்குள் வந்ததும் அதி வேகமாக வளர்கிறது மற்றும் பரவுகிறது. பாலைவனப் பகுதிகளில் நாடி ஒடுங்கிய நிலையில் உயிருக்குப் பயந்தது வாழும் இந்த முள் மரம், தமிழ்நாட்டில் அட்டகாசம் பண்ணுகிறது. கஞ்சிக்கே வழியில்லாதவனுக்குக் கோழி பிரியாணி கிடைத்துப் போல் நீரை உறிஞ்சி எடுத்து வேக வேகமாக வளர்கிறது.? குவைத்தில் அமைதியான நாய்க்குட்டி போல் நடந்து கொள்ளும் இந்த மரம் நம் தமிழகத்தில் வெறிநாயாகச் சீறிப் பாய்கிறது. ஆரவாரத்துடன் வளர்ந்து பேயாட்டம் போடுகிறது. இந்த மரத்தை முற்றிலும் அகற்றுவது எட்டாக் கனியாகி விட்டது போல் தோன்றுகிறது.
கடற்கரை ஓரத்தில் இருக்கும் உப்பையும் தாங்கி இந்த மரம் வளர்கிறது. ஆனால் மற்ற மரங்கள் அப்படி இல்லை. கடலுக்குச் சில மீட்டர் தொலைவிலேயே பெரும்பாலான மரங்கள் வளர்வதில்லை. ஆனால் இந்த மரத்தைக் கடல் தண்ணீர் சூழ்ந்தால் மட்டுமே உயிரிழக்கிறது.
முன்பு விறகு தயாரித்தது போல் இந்த முள் மரத்தினை பயன் படுத்தி ஏதாவது பொருட்கள் செய்தால் இதனை ஓரளவு கட்டுப்படுத்தலாம். இந்த மரத்தின் வளர்ச்சியைத் தமிழகத்தில் கட்டுப்படுத்தவும் மற்றும் முற்றிலும் அழிக்கத் திட்டங்கள் வகுப்பது அவசியம்.
தாமிரபரணி ஆற்றில் நாம் இந்த மரத்தினை அழிக்க படும் பாடு என்னை நீதி மன்றம் வரை கொண்டு போய் விட்டிருக்கிறது.
தாமிரபரணி ஆற்றில் ஒரு காலத்தில் நீண்ட மணல் பரப்பும், தூய்மையான தண்ணீரும் மிகச்சிறப்பாக இருந்தது. தாமிரபரணி தோன்றும் இடத்தில் மட்டும் நீர் ஊற்றுகள் இல்லாமல் வழி நெடுக ஊற்றுகள் இருந்தது. எனவே வற்றாத ஜீவ நதி பல்வேறு நலன்களை நாட்டு மக்களுக்கு தந்து கொண்டிருந்தது.
ஆனால் இன்று ஆற்று மணலை அள்ளி விற்று விட்டோம். எனவே நீர் கருவை மரங்களும், வெங்காய தாமரை செடியும் அடர்ந்து காணப்படுகிறது.
இது மட்டுமா? சாக்கடை கலந்த நதியாக தன்னை தானே இழந்து கொண்டிருக்கிறது.
இதற்காக மதுரை உயர் நீதி மன்றத்தில் கதவை கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்குக்கு கடந்த மார்ச்சு 2024 அன்று தீர்ப்பு கிடைத்தது. அதன் படி சாக்கடை கலக்காத நதியாக தாமிரபரணியை மாற்ற வேண்டும். படித்துறைகள், மண்டபங்களை காக்க வேண்டும் என்று தீர்ப்பு கிடைத்தது.
ஆனால் இதுநாள் வரை அந்த தீர்ப்பை நிறைவேற்றவில்லை. எனவே மதுரை உயர்நீதி மன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் மேலும் சாக்கடையை மாநகராட்சியோ நகராட்சியோ உள்ளாட்சி அமைப்புகளோ கலந்தால் பல கோடி ரூபாய் அபதாரம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் தாமிரபரணி வழக்கு தமிழகத்தினை உலுக்கி கொண்டிருக்கும் சமயத்தில் தான் குவைத்தில் உள்ள நீர் கருவை மரங்களை கண்டு வியந்து நிற்கிறோம்.
இங்கே அடங்கி ஓடுங்கி நிற்கும் கருவேல மரமா நம்ம ஊரில் இப்படி அழிக்க முடியாமல் வளர்கிறது என்று நினைக்கும் ஆச்சரியமாக இருந்தது.
சரி. குவைத்தில் கடல்நீரில் இருந்து தண்ணீரை சுத்திகரித்து அனைத்து மக்களுக்கு தண்ணீர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்ததண்ணீர் சாக்கடையாகத்தானே மாறும்.
அந்த சாக்கடை இவ்வூரில் எங்கே செல்கிறது. அதைப்பற்றியும் விசாரிக்க வேண்டும். அந்த தொழில் நுட்பம் ஒருவேளை தாமிரபரணியில் கலக்கும் சாக்கடையை கட்டுப்படுத்த உதவும் அல்லவா?
(குவைத் பயணம் தொடரும்)