பிஎம் கிசான் திட்டத்தில் 15வது தவணைதொகை பெற விவசாயிகள் அஞ்சல்துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கி பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி அஞ்சல்கோட்ட கண்காணிப்பாளர் மு. பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி’ திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள், ஜுன் முதல் வாரத்தில் வழங்கப்பட உள்ள 15வது தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள்/ தபால்காரர்/ கிராம அஞ்சல் ஊழியரை அணுகி, ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கி பயன் பெறலாம்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையிலிருந்து பெறப்பட்ட தகவலின் படி தமிழ்நாட்டில் 1.61லட்சம் விவசாயிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 3,528விவசாயிகளும் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிகணக்கு இல்லாமல் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாக அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி துவங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், விவசாயிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி e-KYC (விரல்ரேகை மூலம்) மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்க முடியும்.
இதற்காக மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி அல்லது அஞ்சலகங்கள்/ தபால்காரர்/ கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கி பயன் பெறுமாறு அஞ்சல்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டொன்றிற்கு ரூ.6000/- வழங்கும் ‘பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி’ என்ற திட்டம் 2018-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 3 தவணையாக (ரூ.2000/- வீதம்) இந்த நிதி உதவி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றது. திட்டம்துவங்கப்பட்டதிலிருந்து இதுவரை 14 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.


