விஜய் பிறப்பு: சூன் 22, 1974; இயற்பெயர்: ஜோசப் விஜய்[1]) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “தளபதி” என்று அழைக்கிறார்கள். இவருக்குப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா. சப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் நேயர்கள் உள்ளனர். இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் எண்பது நாடுகளில் வெளியாகி உள்ளன.
விஜய் தனது 10வது வயதில் வெற்றி (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி (1988) திரைப்படம் வரை குழந்தை நடிகராகத் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார். ஆனால் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக (1996) திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. இன்று வரை விஜய் கதாநாயகனாக 62 திரைப்படங்களில் நடித்துள்ளார். 3 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 1 காஸ்மோபாலிடன் விருது, 1 இந்தியா டுடே விருது, 1 சிமா விருது, 8 விசய் விருதுகள், 3 எடிசன் விருதுகள், 2 விகடன் விருதுகள் உட்பட 50 விருதுகளை வென்றுள்ளார். ஒரு முறை ஐக்கியப் பேரரரசின் நாட்டு திரைப்பட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்
ஒரு பின்னணிப் பாடகராக பம்பாய் சிட்டி (1994) முதல் பாப்பா பாப்பா (2017) வரை விஜய் 32 பாடல்களைப் பாடியுள்ளார். நடிப்பு மற்றும் பாடல்கள் தவிர இவர் ஒரு சிறந்த ஆடல் கலைஞர். இவரது படங்கள் சீனாவின் ஷாங்காய் பன்னாட்டுத் திரைப்பட விழா[12], ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழா[13] மற்றும் தென்கொரியாவின் புச்சியான் பன்னாட்டுத் திரைப்பட விழா ஆகிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன.
விஜய் 1974-ஆம் ஆண்டு சூன் 22 அன்று மதராசில் (தற்போது சென்னை) பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் விஜய் ஆகும். இவர் கிறிஸ்துவ வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர்.இவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தாயார் ஷோபா ஒரு பின்னணிப் பாடகி மற்றும் கருநாடகப் பாடகி ஆவார். விஜய்க்கு வித்யா என்ற பெயருடைய ஒரு தங்கை இருந்தார். அவர் இரண்டாவது அகவையில் இறந்து விட்டார். வித்யாவின் இழப்பு விஜய்யை மிகவும் பாதித்தது. விஜயின் தாயாரின் கூற்றுப்படி விஜய் ஒரு குழந்தையாக இருந்தபொழுது மிகவும் பேசக்கூடியவராகவும், குறும்பு செய்பவராகவும் மற்றும் விளையாட்டுத்தனத்துடனும் இருந்தார். வித்யாவின் இழப்பிற்குப் பிறகு அமைதியாகி விட்டார். இவரது தங்கை வித்யாவின் கதை 2005ம் ஆண்டுப் படமான சுக்ரனில் சொல்லப்பட்டிருக்கும். அப்படத்தில் விஜய் ஒரு நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
விஜய் தனது குழந்தைப் பருவம் முழுவதையும் சென்னையில் கழித்தார். விஜய் தொடக்கத்தில் கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கினார்.பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் இணைந்தார்.[18] லயோலா கல்லூரியில், காட்சித் தொடர்பியல் (விசுவல் கம்யூனிகேசன்சில்) பட்டம் பெறச் சேர்ந்தார். இறுதியில் நடிப்பைத் தொடர ஆர்வமாக இருந்ததால் பாதியிலேயே படிப்பில் இருந்து வெளியேறினார்.
விஜய் பிரித்தானியாவில் பிறந்த இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 1999 ஆகத்து 25 அன்று மணந்தார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறித்தவம் ஆகிய இரு முறைப்படியும் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2000ல் லண்டனில் பிறந்த ஜேசன் சஞ்சய் என்ற மகன் மற்றும் 2005ல் சென்னையில் பிறந்த திவ்யா சாஷா என்ற மகள்.[22] ஜேசன் சஞ்சய் தனது தந்தையின் வேட்டைக்காரன் (2009) படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். திவ்யா சாஷா தனது தந்தையின் இளமைக் காலத்திற்கு முந்தைய அகவையுடைய மகளாக தெறி (2016) திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.


