ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் கடைசி தலமாகவும், குருவுக்கு அதிபதியாகவும் விளங்கும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆண்டுதோறும் நான்கு பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுகிறது. பங்குனி, சித்திரை மாதங்களில் மூலவர் ஆதிநாதருக்கும், மாசி, வைகாசி மாதங்களில் சுவாமி நம்மாழ்வாருக்கும் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுகிறது.
அதன்படி இந்தாண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பொலிந்து நின்றபிரான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 5-ம் நாளில் கருடசேவை நடந்தது.
9-ம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் சுவாமி பொலிந்து நின்றபிரான் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் ‘கோவிந்தா, கோபாலா’ போன்ற பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கியவாறு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தெற்கு ரத வீதியில் தேர் வந்தபோது வெயில் சுட்டெரித்ததால், பக்தர்களுக்கு உதவியாக பொக்லைன் எந்திரம் மூலம் தேரின் ஒருபுற வடத்தை பிடித்து இழுத்தனர். ரத வீதிகளில் வலம் வந்த தேர் காலை 10.30 மணியளவில் மீண்டும் நிலையை வந்தடைந்தது. 10-ம் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்து இருந்தனர்.