கோவில்பட்டியில் ‘இலக்கியச் சாரல்’ மற்றும் ‘சகாராவைத் தாண்டாத ஒட்டகம்’ கல்வி நிறுவனம் சார்பில், எழுத்தாளர் இராஜேஷ் சங்கரப்பிள்ளை எழுதிய ‘தேடல்’ புத்தகத்தின் திறனாய்வு விழா நடைபெற்றது.
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தியான பயிற்சி அரங்கில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, நல்லாசிரியர் ப. ஜான் கணேஷ் தலைமை தாங்கினார். விஸ்வாஸ் கல்வி அறக்கட்டளை நிறுவனர் ‘ஞான ஒளிமலர்’ இந்திராணி அம்மா மற்றும் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி இசை எப்.எம். இயக்குநர் மற்றும் மேனாள் வேளாண் கல்வி ஆசிரியர் கோ. சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் ‘தேடல்’ நூலினைப் பற்றிப் இலக்கிய ஆளுமைகள் முனைவர் முருக சரஸ்வதி, இராதா (தமிழாசிரியர்), முனைவர் கி. பிரபு (முதல்வர்), நல்லாசிரியர் ராஜசேகர் (தமிழாசிரியர்), கவிஞர் ஜெ. பார்த்திபன் ஆகியோர் விரிவான திறனாய்வு உரைகளை வழங்கினர். நிகழ்ச்சியின் நிறைவாக, நூலாசிரியர் இராஜேஷ் சங்கரப்பிள்ளை ஏற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து வரகவி நல்லாசிரியர் மா. முருகேசன் நன்றியுரை வழங்கினார்.
இவ்விழாவில் கழுகு மலை திருவள்ளுவர் கழகத் தலைவர் பொன்ராஜ் பாண்டியன், செயலாளர் முருகன், கோவில்பட்டி கம்பன் கழகச் செயலாளர் சரவணச் செல்வன், தலைவர் முத்துப்பாண்டியன், சிறார் கலை இலக்கிய சங்க செயலாளர் மணிமொழி நங்கை, பொருளாளர் கண்ணகி, கவிஞர் போத்திராஜ், எழுத்தாளர் இராஜலட்சுமி, திருவள்ளுவர் மன்றத் துணைத் தலைவர் திருமலை முத்துச்சாமி உட்பட இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


