தூத்துக்குடி மாவட்டத்தில் வசவப்பபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் செய்துங்கநல்லூர் அருகே உள்ளது. இங்கு க. பொன்னி, MA மற்றும் வ. அஞ்சலி ஆகிய திருநங்கைகள் வசித்து வருகின்றனர். பொன்னி ஒரு பரதநாட்டியக் கலைஞர். அஞ்சலி அருவி திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தவர். இவர்கள் குடியிருப்பு அருகே ஒரு பொற்றை உள்ளது. பொற்றை என்பது சிறு குன்று எனப் பொருள். இந்த பொற்றை தொல்லியல் முக்கியம் பெற்றது. இந்த பொற்றையைச் சுற்றி சாலை அமைக்கக் கற்களை உடைத்து எடுத்து வருகின்றனர். இப்போது நிறைய முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன. மேலும் மழைக் காலத்திற்குப் பின்னரும் இங்கு முதுமக்கள் தாழிகள் வெளியே தெரிந்துள்ளது. அவைகளை அப்படியே விட்டுவிட்டால் ஆடுமாடுகள் கால் பட்டு உடைந்துள்ளன. அலைகளைப் பார்த்த திருநங்கைகளான க. பொன்னி, மற்றும் வ. அஞ்சலி அவற்றைச் சேகரித்து பத்திரப் படுத்தி உள்ளனர்.
இன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 24 தொல்லியல் மாணவ மாணவிகளும் பேராசிரியரான மதிவாணன் மற்றும் முருகன் ஆகியோர் வசவப்பபுரம் கள ஆய்வுக்காகச் சென்றனர். இவர்களுடன் துறைத் தலைவர் பேராசிரியர் சி. சுதாகர் மற்றும் எழுத்தாளர் முத்தலாங்குறிச்சி காமராசும் சென்றிருந்தனர்.
அப்போது தாங்கள் சேகரித்து வைத்திருந்த தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிறிய பானை, நான்கு கிண்ணங்கள், ஒரு குடுவை ஆகியவற்றை தொல்லியல் துறையில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்க வழங்கினார்கள்.
இந்த மண்பாண்டங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இவை உலகில் பழமையான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த ஆதிச்சநல்லூர் காலத்தைச் சேர்ந்ததாகவே இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் பழமையான பொருட்களை உடையாமல் பாதுகாப்பது கடினமானது என இந்த இரு திருநங்கைகளையும் பேராசிரியர்கள் பாராட்டினார்கள். இவை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகத்தில் இடம்பெயர உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஆயிரக்கணக்கான தொல்லுயிர் எச்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருநங்கைகளை மாணவ மாணவிகளும் பேராசிரியர்களும் மனதாரப் பாராட்டினார்.
பின்னர் பேராசிரியர்கள் மாணவ மாணவிகளைக் கிருஷ்ணா புரத்தில் உள்ள கோயிலுக்கும், நாட்டார் குள நடுகல், பழங்கால மருதூர் அணை மற்றும் மறுகால்தலை சமணர் படுக்கையில் உள்ள 2000 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துக்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்


