மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே புதிய ரயில் சேவையை மத்திய அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ரயில் இயக்க வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வாரத்திற்கு 2 முறை ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டது.
இதேபோல மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்பட்டு வந்த மெமு ரயில் போத்தனூர் வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த இரு ரயில்களின் சேவை தொடக்க விழா நேற்று காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதையொட்டி 2 ரயில்களும் வண்ண மலர்கள், பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இந்த விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர்எல்.முருகன் கலந்து கொண்டு ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தற்போது தொடங்கப்பட்டுள்ள மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி ரயில் சேவையின் மூலம் ஊட்டியில் இருந்து வருகின்ற தேயிலை, மலைக்காய்கறிகள், மேட்டுப்பாளையம் காய்கறிகள், சிறுமுகையில் தயாரிக்கப்படும் பட்டுகள், கோவையில் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருள்கள், உள்ளூரில் தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருள்கள் போன்றவைகளை ஏற்றுமதிக்கு நாம் விரைவாக தூத்துக்குடிக்கு அனுப்ப முடியும்.
அங்கிருந்து கடல் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். மக்களின் வரவேற்பை பொறுத்து இந்த ரயில் தினசரி ரயிலாக கூட இயக்கப்படும். தேர்தல் நேரத்தில் நான் வாக்குறுதி அளித்தபடி கோவை-மேட்டுப்பாளையம் இடையே இரட்டை ரயில் அமைக்க மத்திய ரயில்வே மந்திரியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும். ஊட்டி மலைரயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடியில் பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளது. அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூ.8,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இந்த திட்டத்தில் 75 ரயில் நிலையங்களில் பணி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ரூ.800 கோடி செலவில் மேம்படுத்தப்படுகிறது. ராமேஸ்வரம் ரயில் நிலையம், பாம்பன் பாலம் வேலை முடிவடையும் நிலையில் இருக்கிறது. கோவை, திருச்சி, மதுரை, காட்பாடி ஆகிய ரயில் நிலையங்கள் பெரியளவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
எந்தெந்த நாட்களில் இயக்கப்படும்
மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி ரயில் வாரத்தில் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு, 8.40 மணிக்கு கோவைக்கு வரும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலையில் 4.20 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.
தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயில் வாரத்தில் வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் தூத்துக்குடியில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையம் வரும். இந்த வாராந்திர ரயில் கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சந்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


