களரி அடிமுறையில் நான்கு தலைமுறை ஆசான் துளிசிதாஸ் ஆசான் அவர்கள் மறைந்து விட்டார்கள்.. அவர் புகழை பாடும் வண்ணம் உலக களரி கூட்டமைப்பு சார்பில் நான் எழுதி வெளியிட்ட களரி அடிமுறை பாகம் 1 என்ற நூலில் இருந்த அவரின் வரலாற்றை இவ்விடத்தில் தொகுத்து தருகிறோம் -எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
சுமார் இரண்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட சிஷ்யர்களை உருவாக்கியவர்தான் துளசிதாஸ் ஆசான். இவரைக் காண்பதற்காக நானும், டாக்டர் கணேஷ், மற்றும் ஆசான்கள் கிறிஸ்துதாஸ், பிரதீப் ஆகியோர் அவர் வீட்டுக்குச் சென்றோம். விளவன் கோடு தாலூகா கோட்டகம் தான் அவர் வசிக்கும் ஊர். மார்த்தாண்டத்தில் இருந்து சாங்கை ரோடு வழியாக அவரின் கிராமத்துக்குச் சென்றோம். மேடு பள்ளமாகத்தான் அந்த இடங்கள் காணப்பட்டது. ஓரிடத்தில் வேகமாக இறங்கும் மறு இடத்தில் உயரமாக ஏறும் சாலைகளைக் கொண்டிருந்தது. இறுதியில் சிவன் கோயில் அருகே இருந்த ஆசான் வீட்டுக்கு அருகில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, சற்று மேடான பகுதியில் ஏறி அவர் வீட்டுக்குச் சென்றோம். ஆசான் வசித்த வீடு நன்கு விசாலமான வீடாகத்தான் இருந்தது.
ஆசானின் நான்கு மகன்களும், தன் தந்தையின் களரி அடிமுறை பயிற்சிகளை மேற்கொள்ளவில்லை. வெளிநாட்டில் நல்ல வேலையில் இருக்கிறார்கள். ஆகவே மிக அருமையான வீட்டைக் கட்டி வைத்திருக்கிறார்கள். நாங்கள் வந்திருக்கிறோம் என்றவுடன் ஆசான் வெளியே வந்தார். முறுக்கிய வெள்ளை மீசை, முகத்திலும் கண்ணிலும் அவரின் அன்பு பூரிப்பாகத் தெரிந்தது. கேரள மொழி கலந்து தமிழில் பேசினார். அவர் பேசுவது கொஞ்சம் புரிவதற்கு கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் 2 ஆயிரம் மாணவர்களை உருவாக்கிய ஆசான். 82 வயது திடகாத்திரமாக விளங்குபவர், தற்போதும் களரி சொல்லிக்கொடுக்கிறார் என்றால் அது எவ்வளவு விசேஷம். அவர் வர்மம், சித்த வைத்தியம் செய்கிறார். இதற்காக, தமிழக அரசிடம் சான்றிதழும் வாங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டுக்குள் மட்டும் இவர் வைத்தியம் செய்து கொள்ளலாம், அண்டை மாநிலத்தில் மருத்துவம் செய்ய இயலாது தான். ஆனாலும் இவரிடம் மருத்துவ வசதி பெற அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்து மக்கள் வந்து செல்கிறார்கள் என்பது மிக முக்கியமானது. இவர் நான்காவது பரம்பரையாகக் களரி ஆசானாக விளங்குகிறார். இவரது தந்தை ராஜு வைத்தியர், தாயார் கனகம்மாள், இவரது தாத்தா வெற்றிவேல் வைத்தியர். வெற்றிவேல் வைத்தியரின் தந்தை கருத்தான் வைத்தியர். கருத்தான் வைத்தியர் ராஜவைத்தியம் செய்யக் கூடியவர். இவர் சித்தர் ஒருவர் மூலமாக வைத்தியம் கற்றுள்ளார். அதைப்பற்றி துளசிதாஸ் ஆசான் எங்களிடம் பேச ஆரம்பித்தார்.
கருத்தான் வைத்தியர், ஒரு பனைத்தொழிலாளி. அவருடைய வாலிப வயதில் பனைத்தொழிலை மிகத் திறம்பட செய்து கொண்டிருந்தார். அப்போது காவி உடையில் மெல்லிய தேகத்துடன் சடை முடியும், நீண்ட தாடியுடன் பண்டாரம் அந்தப் பகுதிக்கு வந்தார். அருகில் பனையேறிக் கொண்டிருந்த ஒருவரிடம் பதனீர் கேட்கிறார். அவர் பதனீர் தர மறுத்து விட்டார். அதைப் பனை மீது இருந்து பார்த்தார் கருத்தான். “சாமி. பதனீர் தானே வேணும் இருங்க நான் தாரேன்” என்றார். பனையில் இருந்த படியே பதனீர் குடிக்க ஓலையை வெட்டி போட்டார். அதன் பின் பனையை விட்டுக் கீழே வந்து பட்டை பிடித்து பண்டாரத்திடம் கொடுத்தார். அவருக்குப் பசியைப் போக்கும் அளவுக்குப் பதனீர் கொடுத்தார். பண்டாரத்துக்கு ஒரே சந்தோஷம். எனக்குத் தங்குமிடமில்லையே என்று கேட்க, தன் வீட்டில் தங்கவும் இடம் கொடுத்தார். அதோடு மட்டுமல்லாமல் அவருக்குத் தேவையான அனைத்துச் சேவைகளையும் செய்தார். பண்டாரம், கருத்தானிடம் மிகவும் பிரியம் வைத்தார். பண்டாரம் மிகப்பெரிய களரி ஆசான். அவருக்குக் களரி அடிமுறை மற்றும் வைத்தியம் அத்துப்படி. எனவே கருத்தானுக்குப் பல வைத்திய முறைகளையும், களரி அடிமுறைகளையும் சொல்லிக் கொடுத்தார் . அவரைக் குருவாக ஏற்றுக்களரியை நன்கு கற்றுத் தேர்ந்தார்கருத்தான்.

துளசி தாஸ் ஆசான் (உள்படம்)
துளசி தாஸ் ஆசானின் பூட்டு முறை
ஒருநாள் காலையில் எழுந்து பண்டாரத்தினைத் தேடினார். ஆனால் பண்டாரம் காணாமல் போய்விட்டார். ஆக வந்தவர் பெரிய சித்தர். நமக்குக் களரி அடிமுறை சொல்லிக் கொடுக்கவே வந்துள்ளார், என அவர் சென்ற திசையை நோக்கி வணங்கி நின்றார் கருத்தான். அதன் பிறகு இவரைத் தேடி வந்தவர்களுக்குத் தொடர்ந்து வைத்தியம் பார்த்தார். அதோடு மட்டுமல்லாமல் தனது சிஷ்யர்களுக்கும் களரி அடிமுறைகளைக் கற்றுத்தந்தார். இவர் கைபட்டவுடன் நாள்பட்ட நோய் தீர்ந்தது. இதனால் இவர் புகழ் தென்னாடு முழுவதும் பரவியது. எனவே இவரைத் தேடிப் பல இடங்களில் இருந்தும் நோயாளிகள் வர ஆரம்பித்தார்கள்.
ஒருநாள் அரண்மனையில் இருந்து கருத்தான் வைத்தியரைத் தேடி, சேவகன் ஒருவன் ஓடிவந்தான். “அய்யா மகாராணி உங்களை உடனே அரண்மனைக்கு அழைத்து வரச் சொன்னார். பல்லக்குக் கொண்டு வந்திருக்கிறேன் அதில் ஏறுங்கள்” என்றார்.
அரச கட்டளை தட்ட முடியாமல் கருத்தான் வைத்தியர் பல்லக்கில் ஏறினார். அதன்பின் அரண்மனையில் போய் இறங்கினார். இவரை ராஜ மரியாதையுடன் தர்பார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே மகாராணி சோகத்துடன் அமர்ந்திருந்திருந்தார். அவர்களின் ஒரே ஒருமகன்; இந்த நாட்டை வருங்காலத்தில் ஆளக்கூடிய இளவரசன். இளவரசருக்கு ராஜ பிளவை நோய் வந்திருந்தது. “என் மகனை ராஜ பிளவை நோயில் இருந்து எப்படியாவது குணப்படுத்த வேண்டும்” என்றார் மகாராணி .
கருத்தான் ஆசான் இளவரசைப் பார்த்தார். ராஜ பிளவை நோய் வந்தவர்கள் தப்பித்ததாக சரித்திரம் கிடையாது. இதற்கு ராஜ வைத்தியம் செய்ய வேண்டும். சாமான்யமாக செய்ய இயலாது; எனவே யோசனை செய்தார்; ஆனால் மகாராணி கருத்தான் ஆசானை விடவில்லை. “வைத்தியரே, இளவரசர் தான் நாட்டை ஆள வேண்டும். மகாராஜா இறந்து விட்டார். ஒரே ஒரு வாரிசு இவன்தான்; எப்படியாவது காப்பாற்றுங்கள்”. என்றார்.
ராஜ பிளவை நோய் என்பது சாதாரண நோய் கிடையாது. இந்த நோய் வந்தவர்கள் நூற்றில் ஒருவர் தான் தப்பிப்பார்கள். எனவே நல்ல வைத்தியர் மூலமாகத்தான் இந்த நோயைக் குணமாக்க முடியும் என்பது மகாராணிக்கு நன்கு தெரியும். எனவே தான் கருத்தான் ஆசானை மகாராணி கூட்டி வரச் சொல்லியிருந்தார்.
கருத்தான் ஆசான் இளவரசரின் கையைப் பிடித்துப் பார்த்தார். பின் தன்னுடைய குருவை மனதில் நினைத்துக் கொண்டார். தொடர்ந்து வைத்தியத் தினைத்து வங்கினார். தொடர் வைத்தியம். அவர் முதுகில் உள்ள கட்டியின் வீரியத்தினால் இளவரசர் வலி தாங்க முடியாமல் பிதற்றினார். இவர் மூலிகைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து அரைத்துக் கொடுத்தார். என்ன ஆச்சரியம் 1 வாரத்தில் நோய் தீர்ந்தது; இளவரசர் முகத்தில் புன்னகை பூத்தது. மேலும் ஒரு வாரத்தில் நோய் தீர்ந்து நல்ல நிலைக்கு வந்தார். உடனே மகாராணி கருத்தான் ஆசானைப் போற்றிப் பாராட்டி அவருக்குத் தேவையான பொருள்களை அள்ளிக்கொடுத்தார்.
அரண்மனைக்கு நிரந்தர வைத்தியராக அவரை நியமித்தார். அவர் மேலும் பலருக்கு நோய் தீர்க்க உதவியாக இருந்தார். போர்படை வீரர்களுக்கு போர்படைப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு மருந்திட்டார். அவர் வழியாக அவருடைய மகன் வெற்றிவேல் ஆசான் உருவாகினார். தகப்பனார் கற்றகலை களைத்தானும் படித்தார். பல்வேறு களரி முறையைத் தனது சிஷ்யர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அதன்பின் அவர் வாரிசான தன் மகன் ராஜு வைத்தியருக்கும், களரி அடிமுறைகளைக் கற்றுக்கொடுத்தார். ராஜூ வைத்தியரின் மகன் தான் துளசிதாஸ் ஆசான்; தற்போது நம்மிடம் பேசிக்கொண்டிருப்பவர்.
இவர் தனது 17 வயதிலேயே களரி அடிமுறையைக் கற்க வந்து விட்டார். 21 வயதில் தன்னுடைய ஆசான்களுடன் சேர்ந்து தானும் களரியைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்துவிட்டார். தற்போது 82 வயதிலும் கூட எழுந்து நின்று களரி விளையாட்டு ஆடும் உடல்நிலையிலும், மனவலிமையிலும் தைரியமாக வாழ்கிறார். கிறிஸ்துதாஸ் ஆசான் அவரைச் சந்தித்தவுடன், “என்ன ஆசான் ஒரு ஆட்டம் ஆடுவோமா?” எனக் கேட்க, “அதுக்கென்ன ஆடினா போச்சு” என்று அந்த வயதிலும் தீர்க்கமாகப் பேசினார். இருவர் கையிலும் சிலம்பத்தினைக் கொடுத்தால் இருவரும் சிறப்பான ஆட்டத்தினை நிச்சயம் வெளிப்படுத்துவார்கள் என்பது எங்களுக்கு நன்கு புரிந்தது. பார்ப்போம் அடுத்த நூல் எழுதும் போது ஆசானின் ஆட்டத்தினைப் பார்த்து விடுவோம். ஆசான்கள் இப்படிப் பேசுவது எனக்குப் புதிதாக இருந்தது. ஆனால் பிரதீப் ஆசான் கூறினார். “ஆசான்கள் ஒருவருக்கு ஒருவர் இது போன்று பேசி, சில வேளைகளில் களரி ஆட்டம் ஆடிக் கொள்வார்கள்” என்றார். துளசிதாஸ் ஆசானிடம் போய் உட்கார்ந்தவுடன் அருகில் உள்ள சிவன்கோயிலில் பூஜை துவங்கியது. அந்த பூஜை முடியட்டும் எனக் காத்துஇருந்தோம். சுமார் 25 நிமிடம் கழித்து பூஜை முடிந்தது. அதன்பின் ஆசான் பேச ஆரம்பித்தார்.
எனக்குப்பல ஆசான்கள் உள்ளனர். வடக்கன்விளை தவசிமுத்து ஆசானிடம் சுவடு முறைகளைக் கற்றுக்கொண்டேன். 12 சுவடுகளை அவர் எனக்குத் திறம்படச் சொல்லிக்கொடுத்தார். மாமூட்டுகரை முத்தையன் ஆசான் எனக்கு கைசிரமம் சொல்லிக் கொடுத்தார். அதோடு மட்டுமல்லாமல் பூட்டுமுறைகளையும் அவரிடமே கற்றுக்கொண்டேன். எனது அப்பாராஜு வைத்தியர் எனக்குக் களரியில் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுத்தந்தார்.
பொன்னுமணி ஆசான் எனக்கு இரட்டை சரவத்தினைக் கற்றுத்தந்தார். செண்டு ஆசான் எனக்கு சைலாத்து சுவடு ஜோடிகளைக் கற்றுத்தந்தார். இது போன்று பல ஆசான்களிடம் நான் களரியைக் கற்றுக்கொண்டே இருந்தேன். களரி படிக்கப் படிக்கத் தொடர்ந்து கொண்டே தான் செல்லும். கரந்த நாடு தங்கராஜ் ஆசான் கரந்தநாடு அங்கசுவடுகளை எனக்குக் கற்றுத்தந்தார். அவரிடம் தான் அகத்தியர் சுவடை நான் படித்தேன். அகத்தியர் சுவடு மிகவும் விசேஷமானது இதில் 64 சுவடுகள் உண்டு. அவை அனைத்தையும் திறம்படக் கற்றுக்கொண்டேன்.
கருத்தான் ஆசான் ராஜ வைத்தியம் பார்த்து அதன்பின் பரம்பரை பரம்பரையாக வைத்தியம் பார்த்து வந்த காரணத்தினால் துளசிதாஸ் ஆசானுக்குப் பரம்பரை வைத்தியர் என்ற பெயரும் விளங்கி வருகிறது. 2000க்கு மேற்பட்ட சிஷ்யர்களை உருவாக்கிய துளசிதாஸ் ஆசானுக்குத் தன்னுடைய குழந்தைகள் களரியைப் படிக்கவில்லை என்பது பெரும் குறையாகத் தெரியவில்லை. காரணம் இவர் களரி கற்றுக் கொடுத்த அனைவரையும் தன் குழந்தைகள் போல் எண்ணுகிறார்.
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அங்கு, கிள்ளியூர் மணிவர்ணன் ஆசான் வந்து சேர்ந்தார். இவர் சிறிய வயதுக் காரர்தான். காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் தன்னை அரசு வேலை பார்க்கும் காவலர் என்று அறிமுகப்படுத்துவதை விட களரி ஆசானாக அறிமுகப்படுத்துவதில் தான் ஆனந்தம் அடைகிறார். எத்தனை வேலைகள் இருந்தாலும் கூட, தினமும் தனது சிஷ்யர்களுக்குக் களரி அடிமுறைகளைக் கற்றுக்கொடுப்பதில் தவறுவதில்லை.
இவரிடம் இருந்து களரிக்கான பல வரலாற்றுச் சுவடுகளை நாம் தெரிந்து கொண்டோம். அந்தச் சுவடுகளும், அவர் கூறிய வரலாறுகளும் தான் தொடர்ந்து நாங்கள் களரி அடிமுறையைத் தேடிச் செல்லும் பயணத்துக்கு மிக உதவியாக இருந்தது.


