இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம் என்று காலண்டர் காட்டுகிறது.ஏராளமாக தென்படும் சிட்டுக்குருவிகள் இப்போது அபூர்வமாகவே காணப்படுகிறது.கிராமங்களில் இதற்குப் பெயர் அடைக்கலாம் குருவி.யாராவது இதன் முட்டைகளையோ குஞ்சுகளையோ சேதப்படுத்தினால் பெரியவர்கள் கடுமையாக கண்டிப்பார்கள். ஊருக்குள் மனிதர்களை அண்டி வாழும் ஒரு குருவி.சுவரில் உள்ள பொந்துகள் கூரை வீடுகளில் கூடுகட்டி வாழும்.சாப்பிட்ட எச்சில் தண்ணியை முற்றத்தில் ஊற்றினால் அதில் கிடக்கும் இரண்டு சோற்றுப் பருக்கைகளை கொத்துவதற்காக விருட்டென்று பறந்து வந்து உட்காரும் காட்சியை இப்போது காண முடியவில்லை.ஏனெனில் இப்போது யாரும் தெருவில் எச்சில் தண்ணீர் ஊற்றுவதில்லை.வீட்டுக்குள்ளேயே தொட்டியில் கழுவி ஊற்றி வாய்காலுக்குள் சென்று விடுகிறது.
கம்பு,சோளம்,குதிரைவாலி,தினை,சாமை,கேழ்வரகு,காடைக்கன்னி போன்ற சிறுதானியங்கள் அருகிப் போய்விட்டன.எங்கள் கரிசல்க்காடுகளில் முக்கியமான விளை பொருட்கள் மக்காச்சோளம்,சூரியகாந்தி,நித்தியகல்யாணி இவை மூன்றுமே பறவைகள் உண்ண முடியாதவை.உரல்,களம் போன்ற தானியங்கள் சிதறிக்கிடக்கும் இடங்கள் மறைந்து விட்டன.ஆக கூடுகட்ட வசிப்பிட வசதி உண்ண உணவு எல்லாம் அருகிப் போய்விட்டன.சிட்டுக்குருவிகளும் அருகிப் போய்விட்டன. கூட்டங்கூட்டமாகப் பறந்து திரியும் தட்டான்களையும் வண்ணத்துப் பூச்சிகளையும் கிராமங்களில் காணோம்.இவையெல்லாம் சூழல் கெட்டுப் போனதின் அறிகுறிகள்.
“பறவைகள்,பூச்சிகள் இல்லாமல் மனிதனால் வாழ இயலாது.ஆனால் பூச்சிகளும் பறவைகளும் மனிதன் இல்லாமலும் வாழும்”
– புக்காக்கோ ஜப்பானிய சூழலியல் அறிஞர்.


