தூத்துக்குடி மாவட்டத்தில் பண்ணைசாராக் கடன்களுக்கான சிறப்பு கடன் தீர்வுத் திட்டத்தில் தகுதிவாய்ந்த கடன்தாரர்கள் பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழக முதல்வர் அறிவிப்பின்படி ”கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையிலுள்ள தவணை தவறிய பண்ணை சாராக் கடன்கள் மற்றும் இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கு “சிறப்பு கடன் தீர்வுத் திட்டம் நடத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் பெற்றுள்ள சிறு வணிக கடன், போக்குவரத்து கடன், கைத்தறிக்கடன், விசைத்தறிக்கடன், தொழிற்கடன்/வாணிபக் கடன்கள்/பத்திர ஈட்டுக் கடன்கள், வீடு கட்டும் கடன், வீட்டு அடமானக் கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன்கள், ஆடவர் சுய உதவிக் குழு கடன்கள், கூட்டுப் பொறுப்புக் குழுக்கடன்கள், தாட்கோ, டாம்கோ, டாப்செட்கோ மற்றும் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் வேளாண் விளைபொருட்களை கொள்முதல்/விற்பனை செய்த வகையில் உறுப்பினர்களிடமிருந்து வரவேண்டிய இனங்களில் 31.12.2022 அன்று கடனை திருப்பி செலுத்த வேண்டிய காலக்கெடு முழுமையாக முடிவடைந்து, தவணை தவறிய நிலுவையிலுள்ள அனைத்து விவசாயம் சாராத கடன்களும் இத்திட்டத்தில் தகுதி பெறும்.
இத்திட்டத்தில் பயன்பெற கடன்தாரர், இத்திட்டத்தின்படி கணக்கிடப்பட்ட நிலுவைத் தொகையில் 25 சதவீதத் தொகையை அரசாணை வெளியிடப்பட்ட நாளான 13.12.2023 முதல் மூன்று மாதத்திற்குள் செலுத்தி, வங்கி/சங்கத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். மீதமுள்ள 75 சதவீதத் தொகையை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நாளிலிருந்து 6 மாத காலத்திற்குள் அதிகபட்சமாக 6 தவணைகளுக்குள் செலுத்த வேண்டும்.
கடன் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாள் முடிய அசலுக்கு 9% சாதாரண வட்டி வசூலிக்கப்படும். கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இத்திட்டம் 13.12.2023 முதல் செயல்பாட்டுக்கு வந்து, அரசாணைப்படி, செப்டம்பர் 2024 வரை அமலில் இருக்கும்.
இத்திட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்கள்/வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட கடன்களில் 9504 பயனாளிகளுக்கு ரூ.58.15 கோடி ரூபாய் வட்டி சலுகையாக கிடைக்கும். நாளது தேதி வரை இத்திட்டத்தின்படி 89 கடன்கள் முடிவு கட்டப்பட்டுள்ளன.
எனவே தகுதிவாய்ந்த கடன்தாரர்கள் தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களை உடன் அணுகி பயன் பெறலாம். இது தொடர்பான விவரங்களுக்கு தூத்துக்குடி சரகத் துணைப்பதிவாளரை 7338749403 / 0461-2320192, திருச்செந்தூர் சரகத் துணைப்பதிவாளரை 7338749405 / 04639-242294 மற்றும் கோவில்பட்டி சரகத் துணைப்பதிவாளரை 7338749404 / 04632-210370 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.


