பெரியதாழையில் கடலில் ராட்சத அலை தாக்கியதில் பைபர் படகு கவிழ்ந்து மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பெரியதாழை கீழத்தெருவை சேர்ந்தவர் ரெக்சன் (64). இவர், சக மீனவர்களான போர்சன், பிரமேஷ், செர்லின் ஆகியோருடன் பைபர் படகில் கடந்த 16-ந்தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்றிரவு படகில் கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
பெரியதாழை தூண்டில் வளைவு பகுதியில் வந்தபோது திடீரென ஏற்பட்ட ராட்சத அலை தாக்கியதில் பைபர் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இவர்களில் ரெக்சன், படகில் இருந்த இரும்பு கம்பி தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக சக மீனவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு படை போலீசார் அந்த பகுதிக்கு சென்று ரெக்சன் உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


