இராணி இலட்சுமிபாய் அல்லது சான்சி இராணி நவம்பர் 19, 1828–சூன் 18, 1858) வடமத்திய இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகின்றவர். நவம்பர் 19, 1828 இல் வாரணாசியில் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த மௌரியபந்தர்-பகீரதிபாய் தம்பதியினருக்குப் பிறந்தவர் சான்சி இராணி. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா என்பதாகும். இவர் மனு எனவும் அழைக்கப்பட்டார்.இவருக்கு நான்கு வயதாகும்போது பகீரதிபாய் இறந்து போனார். இவர் சிறு வயதிலேயே குதிரையேற்றமும், வாள் வீச்சும் கற்றுக் கொண்டார். மணிகர்ணிகாவின் தந்தையாகிய மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஷ்வா நீதிமன்றத்தில் வேலை செய்தார்.பித்தூரின் பேஷ்வா மணிகர்ணிகாவைத் தனது சொந்த மகள் போல வளர்த்தார்.
இவரது தந்தை சான்சியை ஆண்ட ராஜா கங்காதர் ராவ் நெவல்கர் என்பவருக்கு 1842இல் மணிகர்ணிகாவைத் திருமணம் செய்து வைத்தார். அதிலிருந்து, மணிகர்ணிகா இராணி இலட்சுமிபாய் என அழைக்கப்பட்டதுடன் சான்சியின் ராணியாகவும் பதவியேற்றார். 1851இல் அவர்களுக்குப் பிறந்த மகனான தாமோதர் ராவ் நான்கு மாதங்களில் இறந்து போனான். தாமோதர் ராவின் இறப்பின் பின், ராஜா கங்காதர ராவ் நெவல்கரும், இராணி இலட்சுமிபாயும் ஆனந்த் ராவைத் தத்தெடுத்தனர். பின்னர், அக்குழந்தைக்கு தாமோதர் ராவ் எனப் பெயர் சூட்டப்பட்டது. ஆனாலும் தனது மகனின் இழப்பின் துயரத்திலிருந்து மீளாத ராஜா கங்காதரராவ் நவம்பர் 21, 1853இல் உடல்நலமிழந்து இறந்தார்.
மன்னர் கங்காதர ராவ் மறைந்த பின், வளர்ப்பு மகன் தாமோதர் ராவை ஆட்சியில் அமர்த்த எண்ணினார் சான்சி ராணி. ஆனால், அப்போதைய ஆங்கிலேய ஆளுநர் டல்ஹவுசி பிரபு, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் அவகாசியிலிக் கொள்கையின்படி, தத்துப்பிள்ளையை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஒரு மன்னருக்கு நேரடி வாரிசு இல்லையென்றால், அந்த அரசு தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வந்த ஆங்கிலேயர்கள் சான்சி நாட்டைத் தமது ஆட்சிக்குட்படுத்த முடிவெடுத்தனர். ஆங்கிலேயர்கள் 1854 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ராணி லட்சுமிபாய்க்கு 60000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து ஜான்சிக் கோட்டையை விட்டு வெளியேறச் சொன்னார்கள்.


