தருவையில் உள்ள பெருந்தெய்வங்களில் ஸ்ரீவாழ வல்லபபாண்டீஸ்வரர், அக்னீஸ்வரர் , வரதராஜபெருமாள் கோயிலும் மிக முக்கியமான ஆலயமாகும். இதில் ஸ்ரீவாழ வல்லபபாண்டீஸ்வரர் ஆலயம் குறித்து நாம் ஏற்கனவே பேசிவிட்டோம். மற்ற இரண்டு ஆலயங்களை பற்றி பேசவேண்டும். இதற்காக ஆலயங்கள் குறித்து தகவல் திரட்ட சிவன்கோயில் அர்ச்சகர் முத்து சுப்பிரமணியனிடம் பேச காத்து இருந்தேன். ஆனால் தொடர்ந்து அவருக்கு வேலை பளு அதிகமாக இருந்தது. குறிப்பாக இந்த ஊரில் உள்ள மிகப்பெரிய கோயிலான வீர வல்லப பாண்டீஸ்வரர், அக்னீஸ்வரர், வரதராஜபெருமாள் போன்ற மூன்று கோயிலுக்கும் இவர் தான் அர்ச்சகர். தொடர்ந்து புரட்டாசி, தசரா உள்பட விழாக்கள் வந்த காரணத்தினால் அவரால் நேரம் ஓதுக்கி என்னிடம் பேச இயலவில்லை.
எனவே தருவை பத்திரிக்கையாளர் பிச்சு மணி அவர்களிடம் கோயில் வரலாறுகள் குறித்து பேசிக்கொண்டே இருந்தேன். அவர்கூறிய வரலாறுகளை இங்கே பதிவிட்டு வருகிறேன்.
அக்னீஸ்வரர் ஆலயம்
இங்குள்ள அக்னீஸ்வரர் ஆலயம் மிகச்சிறிய ஆலயம் தான். இந்த ஆலயத்தில் சிவன் அக்னீஸ்வரர் கிழக்கு நோக்கி உள்ளார். கர்ப்ப கிரகத்துக்குள் குனிந்து தான் செல்ல இயலும். ஆவுடையம்மாள் தெற்குநோக்கி அருள்பாலிக்கிறார். இந்த கோயிலில் மூன்று பிரகாரம் உள்ளது. அனைத்துமே சிறு சிறு பிரகாரங்கள் தான். இந்தக் கோயிலில் விநாயகர், முருகன், நந்தி உள்பட பலதெய்வங்கள் உள்ளன. இந்த ஆலயத்தில் உற்சவர் கிடையாது.
இந்த ஆலயத்தில் பிரதோஷம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. அம்மை ஆவுடையம்மை என்பதால் ஆடி தபசு திருவிழா இந்த கோயிலில் மிகச்சிறப்பாக 11 நாள்கள் வரை நடைபெறும். தினமும் நடை மாலை 6 முதல் 8 மணி வரை திறந்து இருக்கும்.
இவ்வூரில் உள்ள முக்கிய தீர்த்தமான அக்னி தீர்த்தம் பெயரை இந்த கோயில் சிவன் தாங்கி நிற்பதால் மிகச்சிறப்பாக போற்றப்படுகிறார்.
இந்த கோயிலில் இரண்டு நவீனகால கல்வெட்டுகள் உள்ளது. அதில் முதல் கல்வெட்டில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு வாழ வல்ல பாண்டீஸ்வரர் திருக்கோயிலின் துணைக்கோயிலான அருள்மிகு அக்னீஸ்வரர் மற்றும் விநாயகர் திருக்கோயில் மகா சம்ப்ரோசணப் பெருவிழா 8.02.2015 அன்று காலை 7.30 மணி முதல் 9.20 க்கு நடந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா ஆட்சியில் இந்த கும்பாபிசேகம் நடந்தது என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
மற்றொரு கல்வெட்டு இதே செய்தியை தாங்கியே உள்ளது. நிகழும் மங்களகரமான 1190 ஆம் ஆண்டு ஐய வருடம் தை மாதம் 25 ந்தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று சதுர்த்தி திதியும் ஹஸ்தம் நட்சத்திரமும் அமிர்த் யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் கும்பலக்கனத்தில் இந்த கும்பாபிசேகம் நடந்தது என குறிப்பிட்டு உள்ளார்கள். இந்த கும்பாபிசேக உபயத்தார் டி.எஸ். சுப்பிரமணியம் குடும்பத்தார் (மும்பை) சென்னை என்றும் நிர்வாக அதிகாரியாக தேவி அவர்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

தருவை வரதராஜ பெருமாள்
தருவை வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இந்த ஆலயம் கிழக்-கு நோக்கி உள்ளது. இங்குள்ள ஆலயத்தில் கருட ஆழ்வார் சிறப்பாக உள்ளார். ஆலயத்தின் உள்ளே ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜபெருமாள் உற்சவ மூர்த்தியும் உள்ளது. இந்த ஆலயத்தில் புரட்டாசி 4 சனிக்கிழமையும் கருடசேவை நடைபெறும். இந்த சமயத்தில் கருட வாகனம் அக்கிரகாரத்தினை சுற்றி வருகிறது. கோயில் வளாகத்தில் சாஸ்தா ஒருவர் உள்ளார்.
இந்த ஆலயமும் நடை 6 மணிமுதல் 8 மணி வரை திறந்து இருக்கிறது.
இந்த கோயிலிலும் நவீன காலத்து கல்வெட்டு இரண்டு உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு வரதரா-ஜ பெருமாள் கோயில் மகா சம்ப்ரோசணப் பெருவிழா 9.02.2015 அன்று காலை 10.00 மணி முதல் 10.30 க்கு நடந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா ஆட்சியில் இந்த கும்பாபிசேகம் நடந்தது என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
மற்றொரு கல்வெட்டு இதே செய்தியை தாங்கியே உள்ளது. நிகழும் மங்களகரமான 1190 ஆம் ஆண்டு ஐய வருடம் தை மாதம் 26 ந்தேதி திங்கள் கிழமை அன்று சஷ்டி திதியும் சித்திரை நட்சத்திரமும் அமிர்த் யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் மீனலக்கனத்தில் இந்த கும்பாபிசேகம் நடந்தது என குறிப்பிட்டு உள்ளார்கள். இந்த கும்பாபிசேக உபயத்தார் டி.எஸ். சுப்பிரமணியம் குடும்பத்தார் (மும்பை) சென்னை என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
முதல் நாள் சிவன் கோயிலிலும் மறு நாள் பெருமாள் கோயிலிலும் கும்பாபிசேகம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தருவையில் இருக்கன்குடி மாரியம்மன்
தருவையில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த ஆலயத்தினை பொறுத்தவரை தனியாருக்கு சொந்தமான ஆலயம் தான். தருவையில் மாலையம்மாள் என்ற இருக்கன்குடி மாரியம்மன் பக்தை ஒருவர் இருந்தார். இவர் இருக்கன் குடிக்கு வெள்ளிக்கிழமை தோறும் சென்று மாரியம்மனை வணங்கி வந்தார். இவருக்கு மாரியம்மனை தங்கள் ஊரில் வைத்து வழிபட வேண்டும் என ஆசை.
எனவே பிடிமண் எடுத்து வந்து தருவையில் இருக்கன் குடி மாரியம்மனை பிரதிட்சை செய்தார். இங்கு வந்த அம்மன் மக்களுக்கு அருளை பாலித்து வந்தார். எனவே பக்தர்கள் அதிகமாக கூட ஆரம்பித்தனர்.
இந்த ஆலயத்தில் தை மாதம் மற்றும் ஆடிமாதம் கோயில் கொடை விழா நடைபெறுகிறது. தற்போது மாலையம்மாளின் வாரிசுதாரர்கள் இந்த ஆலயத்தினை நிர்வாகித்து வருகிறார்கள். யாதவர் சமுதாயத்தினை சார்ந்த கோயிலாக இக்கோயில் இருந்தாலும் அனைத்து சமுதாய மக்களும் இங்கு வணங்கி வருகிறார்கள்.
இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் மண்ணால் ஆனவர். இவருக்கு தினமும் அபிசேகம் நடந்து வருகிறது. ஆனாலும் மூலவருக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.
கேட்ட வரம் தருபவர் தருவை இருக்கன்குடி மாரியம்மன். எனவே பக்தர்கள் இங்கு வருகை தந்த வண்ணமே உள்ளனர் என்று கூறினார் பிச்சைமணி. மேலும் அவரது மனைவி மாரிச்செண்டு இவ்வூரில் அதிகமாக அம்மன் கோயில் இருப்பதற்காக காரணத்தினை கூறினார்.
இந்த வரலாறு எனக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.

மந்திரியம்மன் – முத்தாரம்மன்
இந்த ஊரில் மந்திரியம்மனும், முத்தாரம்மனும் அக்காள் தங்கைகள். மந்திரியம்மன் ஊருக்கு வெளியே உள்ளார். முத்தாரம்மன் கோயில் ஊருக்குள் உள்ளது.
இந்தப் பகுதியில் முப்பிடாதி, உச்சிமகாளி என்ற பெயரில் சுமார் 9 அம்மன் உள்ளனர். இவர்கள் இந்த ஊரில் தரிசனம் தர வரலாறு செவி வழியாக பேசப்பட்டு வருகிறது.
இதில் மூத்தவர் மந்திரியம்மனுக்கு குழந்தை கிடையாது. முத்தாரம்மனுக்கு 9 குழந்தைகள் இருந்தனர். மந்திரி அம்மனுக்கு தங்கை குழந்தைகள் மீது மிகவும் பாசம். வாரம் தோறும் குழந்தைகளை பார்க்க வந்து விடுவார்.அவர்களுக்கு வேண்டிய பதார்த்தங்களை கொண்டு வருவார். இதனால் குழந்தைகள் மந்திரி அம்மன் மீது மிகவும் பாசமாக இருந்தனர். இதனால் முத்தாரம்மன் பயந்து போய் விட்டார். “குழந்தை இல்லாத காரணத்தால் நமது குழந்தை மீது அக்காள் கண் போட்டு விடக்கூடாதே, நம்மிடம் இருந்து அபகரித்து சென்று விடக்கூடாதே” என்று நினைத்தார். அதோடு மட்டுமல்லமல் “அக்காள் மீது பாசம் காட்டும் குழந்தைகள் நம் மீது பாசம் இல்லாமல் போய் விடுமோ” எனவும் நினைத்தார். இதற்கிடையில் குழந்தைகளை காண மந்திரியம்மன் தங்கை வீட்டுக்கு வந்துள்ளார். அதற்கு முன் தன் குழந்தைகளை ஊரில் உள்ள பல இடங்களில் பெரிய மண் குலுக்கையில் போட்டு மூடி வைத்து விட்டார். ஆசையோடு வந்த மந்திரியம்மன், “குழந்தைகள் எங்கே?” என்று கேட்டார். அதற்கு முத்துமாலையம்மன் “விளையாடப் போய் விட்டனர்” என்று பொய் உரைத்தார்.
உலகம் அறிந்த தேவியாகிய மந்திரி அம்மன், தனது தங்கை பொய் சொல்வதை அறிந்து, அவளிடம் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி விட்டு தன் இருப்பிடத்துக்கு வந்தார்.அதே நேரம் அம்மை அந்த குழந்தைகள் அனைவரையும் கல்லாவது என பணிந்தார்.
அக்காள் சென்ற பிறகு தங்கை முத்துமாலையம்மன் ஒடிப்போய் குலுக்கையைத் திறந்து பார்த்த போது குழந்தைகள் அவ்விடத்திலேயே கல்லாக மாறி விட்டனர். தனது தவற்றை உணர்ந்த முத்தாரம்மன் அழுது கொண்டே அக்காளிடம் நடந்த துயரத்தைக் கூறினார்.
மந்திரி அம்மன் சிரித்துக்கொண்டே, “என்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு நான் குழந்தை வரம் தருபவள். நானா உன் குழந்தையை அபகரிக்கப் போகிறேன். என்னைத் தப்பாக நினைத்து விட்டாயே” என்று வருத்தத்துடன் கூறி விட்டு குழந்தைகள் உயிர் பிழைக்க வழி கூறினார்.
தங்கையிடம் வெள்ளிச்சொம்பு, வெள்ளிச்சிலம்பு, திருநீற்றுக்கொப்பரை, அரளிப்பூ முதலியவற்றைக் கொண்டு வரச்சொன்னார். தாமிரபரணி அக்னி ஆற்றுத் தீர்த்த நீரை வெள்ளிச்செம்பில் முகந்து, அரளிப்பூவை அதில் போட்டு, வேப்ப இலையை ஒடித்து போட்டார். குலுக்கை இருந்த இடத்துக்கு வந்து வெள்ளிச் சிலம்பை வைத்து குழந்தைகளைத் தட்டி எழுப்பினார். என்ன ஆச்சரியம் குழந்தைகள் தூக்கத் திலிருந்து கண் விழிப்பது போல் எழுந்து வந்தனர். திருநீற்றைக் குழந்தைகளுக்குப் பூசி “பல்லாண்டு காலம் வாழ்க” என ஆசி கூறி அங்கிருந்து மந்திரி அம்மன் புறப்பட்டார்.
அந்த குழந்தைகள் இருந்த இடத்தில் தான் சுமார் 9 இடத்தில் முப்பிடாதி, உச்சிமகாளி என்ற பெயருடன் அம்மன் தற்போதும் இவ்வூரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்.
குழந்தை வரம் தருவதில் மந்திரி அம்மன் வல்லவர். திருமண தடை நீங்க 7 செவ்வாய்க் கிழமை இங்கு வந்து அம்மனுக்குச் செவ்வரளி மாலை சாற்றி வழிபட்டால் திருமணம் கைகூடும். நாள் பட்ட நோயால் அவதிப்படுபவர்கள் 7 நாள் கால்படி பால் ஊற்றி அம்மனை வணங்கினால் ஆபரேசன் இன்றி குணமாகி விடுவர். என்பது இவ்வூரில் உள்ள பக்தர்கள் அறிந்த உண்மையாகும்.
உய்க்கொண்டம்மன் என்ற முத்தாம்மன் திருக்கோயில் அறங்காவலராக செல்லப்பாண்டியன் அவர்களும் பூசாரியாக கணேச பூசாரியும் உள்ளனர்.
இந்த கோயிலில் முகப்பு சிற்ப வேலையை தருவை சீனிவைத்தியர் பேரன் மஸ்கட்டை சேர்ந்த திருப்பணி கரிசல் குளம் மந்திரராஜ் மற்றும் பெப்ஸி நண்பர்கள் செய்திருக்கிறார்கள். இந்த முகப்பு 6.02.1993 அன்று திறக்கப்பட்டுள்ளது.
தருவை என்னும் கிராமம் அற்புத கிராமம். இந்தகிராமத்தில் வல்லபபாண்டியனின் சுவடுகளும், மந்திரி அம்மன் உள்ள அம்மன்களின் அருளும், கான்சாகிப் கட்டிய அணைக்கட்டுகளும், சிவன் சக்தி கோயிலும் நமக்கு பல்வேறு பரிணாமங்களை காட்டிக்கொண்டே இருக்கிறது.
தற்போது நாம் இந்த ஊருக்கு சென்றபோது புதிய பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்று இருந்தனர். அவர்களுடைய பெயர்களை இவ்விடத்தில் பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
பாளைங்கோட்டை ஒன்றிய கவுன்சிலராக ராமகிருஷ்ணன், தலைவர் கௌரி லெட்சுமி கண்ணன், துணைத்தலைவர் மகாராணி என்ற கவிதா சக்தி முருகன், சேர்மன் தங்கபாண்டியன், எழுத்தர் இசக்கி முத்து ஆகியோர் உள்ளனர்.
தருவை பற்றி பலசெய்திகள் அறிந்த கையோடு அடுத்த கிராமத்துக்கு நடைபோட்டோம்.
(நதி வற்றாமல் ஓடும்)


