தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு காளி ஊர்வலத்தை பாஜக துணைத் தலைவர் சசிகலா புஷ்பா தொடங்கி வைத்தார்.
ருத்ர தர்ம சேவா சார்பில் ஆண்டு தோறும் தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு காளி ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான காளி ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா விழாவை முன்னிட்டு வேடமணிந்த தசரா குழுவினர் இந்த காளி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஊர்வலத்தை வேம்படி இசக்கியம்மன் கோவில் முன்பு ருத்ர தர்ம சேவா ஒருங்கிணைப்பாளர் தா. வசந்தகுமார், தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்பியும், முன்னாள் மேயருமான சசிகலா புஷ்பா துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி, தமிழ்நாடு சேனைத் தலைவர் வீரபாகு, பேரவை தலைவர் ஹரி, கன்னியாகுமரி மாவட்ட தலைவர் சுபமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் கோயில் முன்பிருந்து தொடங்கிய ஊர்வலம், பாளையங்கோட்டை சாலை, வி.வி.டி சந்திப்பு, காய்கறி மார்க்கெட் சந்திப்பு, பழைய பஸ் நிலையம், குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சிவன் கோயில் முன்பு நிறைவடைந்தது. ஊர்வலத்தில் பல்வேறு விதமான காளி வேடமணிந்த பங்கேற்றனர். ஏற்பாடுகளை இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள், ருத்ர தர்ம சேவாவின் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.


