கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 11, 1908 – செப்டம்பர் 19, 1980) தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார்.
சுந்தராம்பாள் சென்னை மாகாணத்தில் கோயமுத்தூர் மாவட்டத்தில் (தற்போதைய ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு) கொடுமுடியில் கிருஷ்ணசாமி–பாலாம்பாள் தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு கனகசபாபதி என்ற சகோதரர் மற்றும் சுப்பம்மாள் என்ற சகோதரி இருந்தனர். சுந்தராம்பாள் இளம்வயதிலேயே தந்தையை இழந்தார் மற்றும் தனது சகோதரர் ஆதரவால், குடும்பத்தை தாயார் நடத்தி வந்தார். இவர் கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளியில் கல்வி கற்றார். குடும்ப வறுமைநிலை காரணமாக இவர் ரயில்களில் பாடி பிச்சை எடுத்து வந்ததாகவும், அப்போது ஒரு நாள் நடேசையர் என்பவர் இவரது பாடும் திறமையைக் கண்டு இவரை ஒரு நாடகக் கம்பெனியில் சேர்த்துவிட்டதாகவும் சுந்தராம்பாள் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மற்ற ஆதாரங்களின்படி, பாலாம்பாளுக்கு அறிமுகமான கிருஷ்ணசுவாமி ஐயர் என்ற போலீஸ் அதிகாரி சுந்தராம்பாளின் திறமையைக் கண்டறிந்து, நாடகக் கலைஞர்களில் ஒருவரான பி.எஸ்.வேலு நாயருக்கு அறிமுகப்படுத்தினார்.
1927ஆம் ஆண்டு சுந்தராம்பாள் சக நாடக நடிகரான கிட்டப்பாவை திருமணம் புரிந்து கொண்டார். 1933 டிசம்பர் 2 இல் 28 வயதில் கிட்டப்பா காலமானார். அப்போது சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து அவர் வெள்ளை சேலைக் கட்டத்தொடங்கினார் மற்றும் எந்தவொரு ஆண் நடிகருடனும் சோடியாக நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார், அதைக் கடைசி வரை காப்பாற்றி வந்தார். கே.பி. சுந்தராம்பாள் செப்டம்பர் 1980 இல் காலமானார்.


