கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 11, 1908 – செப்டம்பர் 19, 1980) தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் கிருஷ்ணசாமி–பாலாம்பாள் தம்பதியருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். இளம்வயதிலேயே தந்தையை இழந்தார். தனது சகோதரர்களின் ஆதரவால், குடும்பத்தை நடத்தி வந்தார் தாயார். ‘கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி’யில் கல்வி கற்றார் சுந்தராம்பாள்.
குடும்ப வறுமைநிலை காரணமாக இவர் ரயில்களில் பாடி பிச்சை எடுத்து வந்ததாகவும், அப்போது ஒரு நாள் நடேசையர் என்பவர் இவரது பாடும் திறமையைக் கண்டு இவரை ஒரு நாடகக் கம்பெனியில் சேர்த்துவிட்டதாகவும் சுந்தராம்பாள் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.


