கழுகுமலையில் ஆட்களை ஏற்றி, இறக்குவதில் ஏற்பட்ட பிரச்சினையில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பழைய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை சுமார் 10 மணியளவில் அரசு பஸ் ஒன்று சஙகரன்கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை கயத்தாறு அருகே உள்ள வடக்கு சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை (47) என்பவர் ஓட்டி சென்றார். பஸ் கழுகுமலை மேலபஜார் பகுதியில் ஆட்களை ஏற்றி, இறக்குவதற்காக நிறுத்தப்பட்டது.
அப்போது பின்னால் கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவிலை நோக்கி தனியார் நிறுவன பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்ைச டிரைவர் ஸ்ரீராம் (39) ஓட்டி வந்தார். அவர் அரசு பஸ்சை வேகமாக நகர்த்துமாறும், தங்கள் பஸ்சில் ஆட்களை ஏற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து 2 டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீராம், அரசு பஸ் டிரைவரான செல்லத்துரையை அவதூறாக பேசி தாக்கினாராம். இரு பஸ்களும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு பிரச்சினை நடந்து வந்ததால் போக்குவரத்து தடைபட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பஸ்களையும் சாலையோரத்தில் நிறுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
மேலும், இதுகுறித்து அந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பஸ் டிரைவரான கழுகுமலை அருகே உள்ள அழகனேரி பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் ஸ்ரீராமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார். அரை மணி நேர தாமதத்திற்கு பிறகு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. தனியார் பஸ் ேபாலீஸ் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அதில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.


